Press "Enter" to skip to content

உத்தரபிரதேசம்: நூபுர் ஷர்மாவை கொல்ல திட்டம்? – இளைஞர் கைது

பட மூலாதாரம், NUPUR SHARMA/TWITTER

இன்று (14.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கொல்லத் திட்டம் தீட்டியதாக தீவிரவாதி ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளரான நூபுர் ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து நூபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இதையடுத்து ​​தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கு நூபுர் ஷர்மாவைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அண்மையில் அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறையினருக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், நூபுர் ஷர்மாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக உத்தரபிரதேசத்தில் தீவிரவாதி ஒருவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷஹாரன்பூர் அருகே உள்ள குண்டகாலா கிராமத்தில் வசித்து வரும் 25 வயதான முகம்மது நதீமுக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு மற்றும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் முகம்மது நதீமின் தொலைபேசி உரையாடலை காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது, முகம்மது நதீமுக்கு, ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்துடன் தொடர்பு இருந்ததும், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொல்ல வேண்டும் என்ற இலக்கு அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும் ஆயுதப்பயிற்சி எடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல அவர் ஆயத்தமாகி இருந்ததாகவும் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகம்மது நதீமின் கைபேசி உள்ளிட்ட பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மெய்நிகர் என்று அழைக்கப்படும் விர்ச்சுவல் போன் நம்பர்களை உருவாக்குவது எப்படி என்று தீவிரவாதிகளிடம் முகம்மது நதீம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா என்ற நபர், அரசு கட்டிடங்கள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவருக்கு பயிற்சி அளித்ததாகவும், சிறப்பு பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு அவர் வர வேண்டும் என்று அங்குள்ள தீவிரவாத இயக்கங்கள் முகம்மது நதீமுக்கு உத்தரவிட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்செய்தி தெரிவிக்கிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு; பாஜகவிலிருந்து விலகும் மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன்

சரவணன் பாஜகவில் இணைந்தபோது

பட மூலாதாரம், ANI

தமிழ்நாடு நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை சனிக்கிழமை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன், தான் பாஜகவிலிருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தாா் என்று தினமணி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது . அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தேர் மீது பாஜகவினா் காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை, பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் சந்தித்துப் பேசினார்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசிய சம்பவம் வருத்தத்திற்குரியது. பாஜகவினா் காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, அது பண்பாடற்ற அரசியல்.

அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அதோடு கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க உள்ளேன் என்றாா்.

மேலும், தொண்டர்கள் சார்பாக மன்னிப்பு கேட்க வந்தேன் எனவும் தெரிவித்திருந்தார் என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

“அடுத்தது நீ தான்” – ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கு மிரட்டல்

J K Rowling twitter

பட மூலாதாரம், J K Rowling twitter

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹாரி பாட்டர் எழுத்தாளரான ஜே.கே.ரௌலிங் மீது, அடுத்தது நீங்கள்தான் என்று ட்விட்டரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் (ஆக.12 வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹரி பாட்டர் கதையை எழுதி பிரபலமானவர் ஜே.கே.ரௌலிங் . இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஜே.கே.ரௌலிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும்’ என பதிவிட்டிருந்தார்.

ஜேகே ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்துபதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், ‘கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்’ என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜேகே ரவ்லிங்கிற்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »