Press "Enter" to skip to content

நேதாஜி ‘டெல்லி சலோ’ என்று முழங்கிய ‘பாடாங் திடல்’ – சிங்கப்பூர் அரசு சிறப்பு அறிவிப்பு

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

அண்மையில் தனது 57ஆவது தேசிய தினத்தை கொண்டாடிய சிங்கப்பூர், தனது பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் மேலும் ஓர் இடத்தை சேர்த்துள்ளது. இது அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. என்ன இடம் அது? ஏன் இந்தியாவுக்கு மகிழ்ச்சி?

பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள அந்த இடம் – ‘பாடாங் மைதானம்’ . (மலாய் மொழியில் பாடாங் என்றால் மைதானம், திடல் என்று அர்த்தம்).

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தைக் (ஐஎன்ஏ) கட்டியெழுப்ப பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது 1943ஆக் ஆண்டு சிங்கப்பூருக்கும் சென்றிருந்தார். அப்போது ‘பாடாங்’ மைதானத்தில்தான் அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்று அவர் உணர்ச்சிப்பொங்க முழக்கமிட்ட இடம்தான் ‘படாங்’. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினருக்கும் படாங் திடலுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு உண்டு என்கிறது சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய வாரியம்.

மேலும், ஆங்கிலேயர்கள் புறக்காவல் நிலையத்தை நிறுவியபோது இந்திய சிப்பாய்கள் முதன் முதலில் தங்கள் முகாம்களை பாடாங் மைதானத்தில்தான் அமைத்தனர் என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய துறையின் தலைவரான பேராசிரியர் ராஜேஷ் ராய்.

“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஐஎன்ஏ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த மைதானத்தில் திரண்டிருக்க, அவர்கள் மத்தியில் நேதாஜி பல்வேறு வீர உரைகளை ஆற்றிய இடம் இது. சிங்கப்பூரில் இருந்தபோதுதான் ராணி ஜான்சி படைப்பிரிவை நேதாஜி நிறுவினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பட மூலாதாரம், NETHAJI REASEARCH BEREAU

“பாடாங் மைதானத்தில் இருந்தபடிதான், இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுவிக்க இந்திய வளங்களை ஒட்டுமொத்தமாக திரட்ட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்,” என்கிறார் பேராசிரியர் ராஜேஷ் ராய். மேலும், பாடாங்கின் தெற்கு விளிம்பில்தான் ஐ.என்.ஏ. நினைவகத்தை நிறுவினார் என்றும் கூறுகிறார்.

இந்திய சமூகத்துடன் தொடர்புள்ள ஏழு சின்னங்கள்:

பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஏற்கெனவே 74 தேசிய பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. அவற்றுள் 7 சின்னங்கள் சிங்கப்பூர் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவை. தற்போது பாடாங் திடலும் அவற்றுடன் இணைந்துள்ளது.

கடந்த 1945ஆம் ஆண்டு, செப்டம்பர் 12ஆம் தேதி சிங்கப்பூரை ஆக்கிரமித்திருந்த ஜப்பானிய படைகள் சரணடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றிப் பேரணி பாடாங் திடலில்தான் நடைபெற்றது.

இதையடுத்து 1959 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி, முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அமைந்ததைக் குறிக்கும் பேரணி, 1966ஆம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பு ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்கள் பதிவான இடம் பாடாங் திடலாகும்.

சிங்கப்பூர் அதிபராக இருந்த எஸ்.ஆர்.நாதன், கடந்த 1943ஆம் ஆண்டு பாடாங் திடலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆற்றிய உரையை கேட்டு மனதில் எழுச்சி பெற்றதாக ஒருமுறை கூறியிருந்தார்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் என சுமார் இருநூறு ஆண்டுகால வரலாற்றுச் சம்பவங்களின் மவுன சாட்சியாக விளங்குகிறது பாடாங் மைதானம். மேலும், பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கான மேடையாகவும் களமாகவும் இருந்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பட மூலாதாரம், NETHAJI REASEARCH BEREAU

இத்தகைய முக்கியத்துவம் உள்ள பகுதி, பாரம்பரியச் சின்னங்களுக்கான பட்டியலில் இடம்பெறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்கிறார்கள் சிங்கப்பூரர்கள். அண்மையில் சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினத்தன்று அதன் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக, அதிகாரபூர்வமாக அந்நாட்டின் அரசிதழில் இடம்பெற்றது பாடாங் திடல்.

சிங்கப்பூரர்களை மகிழ வைக்கும்: எட்வின் டோங்

சிங்கப்பூர் குடிமை வட்டாரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாடாங் திடல் சுமார் 4.3 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆறு காற்பந்துத் திடல்களை அமைக்க முடியும்.

பொதுவாக கட்டடங்கள், சிலைகள் போன்றவைதான் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை தளர்த்தி, பசுமைத் திறந்தவெளியாக உள்ள பாடாங் திடலை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய மரபுடைமை வாரியம் கூறுகிறது.

“எந்தவொரு கட்டுமான அமைப்பும் இல்லாதபோதும், பல பகிர்ந்த நினைவுகளைக் கொண்ட தளமாக பாடாங் திடல் விளங்குகிறது என்று சிங்கப்பூர் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நெகிழ்ச்சியுடன் கூறியதாக தமிழ்முரசு நாளேடு தெரிவித்துள்ளது.

“தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் இடம்பெறுவதன்மூலம் பாடாங் திடலின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் பாதிக்கும் வகையில் அங்கு எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. அதே நேரத்தில், சிங்கப்பூரர்கள் களிப்புறும் சமூகவெளியாக அது நீடிக்கும்,” என்றும் அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாடாங் திடல் இனி சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் என்கிறார்கள் சிங்கப்பூர் இந்தியர்கள்.

“இதுநாள் வரை புகைப்படம் எடுப்பதற்கான இடமாக மட்டும் சுற்றுப்பயணிகளால் பயன்படுத்தப்பட்ட இந்தத் திடலுக்குப் பின்னணியில் உள்ள வரலாற்றுப்பூர்வ தகவல்களும் இனி அவர்களுக்கு விவரிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செய்யும் என்பதுதான் உற்சாகம் அளிக்கிறது,” என்கிறார் சிங்கப்பூரில் உணவகத்துறையில் உள்ள நடராஜன்.

நடராஜன்

பட மூலாதாரம், NATARAJAN

“கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட், கால்பந்து விளையாடும் திடலாக பாடாங் விளங்கி வருகிறது. அங்கு விளையாடும் சிறார்கள், இளையவர்களில் எத்தனை பேர் அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. எனினும், இனி அங்கு செல்லும் அனைவருக்கும் அந்தச் சிறப்புகள் தெரியவரும்.

“நேதாஜியின் வீர உரைகள் தொடங்கி, முந்தைய தலைமுறைகளைச் சார்ந்த இந்தியர்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்த இந்தத் திடல் குறித்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் அறிய வேண்டும்,” என்கிறார் நடராஜன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »