Press "Enter" to skip to content

சரியாக வீட்டுப்பாடம் எழுதாததால் வளர்ப்பு தந்தை அடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

பட மூலாதாரம், Peter Dazeley / Getty Images

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (16/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

சரியாக வீட்டுப்பாடம் எழுதாததால் வளர்ப்பு தந்தை அடித்ததில் சிறுவன் உயிரிழந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது 7 வயது மகன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டதாகவும் இதையடுத்து ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷா, அதே பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவரை திருமணம் செய்து அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஆக. 15) சிறுவனுக்கு உமேஷ் வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது சிறுவன் உமேஷ் கூறியபடி சரியாக வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் உமேஷ், சிறுவனை அடித்து உதைத்து, கீழே தள்ளியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹாசன் டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் – கண் கலங்கிய தொண்டர்கள்

விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த்

பட மூலாதாரம், Vijayakant / Facebook

தேமுதிக தலைவர் விஜயகாந்த், நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்ததாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக விஜயகாந்த், நேற்று கட்சி அலுவலகம் வந்தார். அங்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா உதவியுடன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொண்டர்களுக்கு பிரேமலதா இனிப்புகளை வழங்கினார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்தைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக வாயிலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘கேப்டன்.. கேப்டன்’ என்று கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக, அச்செய்தி தெரிவிக்கிறது.

ஒருசிலர் விஜயகாந்த் உடல்நிலையைப் பார்த்து கண் கலங்கியதாகவும் தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் மகிழ்ச்சியுடன் கையசைத்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழில் தேசிய கீதம்: அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை ஏற்ற இலங்கை அமைச்சரவை

டக்ளஸ் தேவானந்தா

நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் குறித்த கலந்துரையாடலில், நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதியின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் அமைச்சரின் குறித்த வேண்டுகோள் அமைச்சரவையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமையும் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவுகளை பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையின் விதிகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »