Press "Enter" to skip to content

விஜயகாந்த் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்: எதிர்க்கட்சித் தலைவராக எழுந்தவர் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக முடியாமல் வீழ்ந்தது எப்படி?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், dmdk

விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த விஜயகாந்த், தமிழக அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி?

அவர் நடிக்கத் தொடங்கி சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்குவது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், பாமக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையிலான மோதல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த வாக்கு சதவீதம்

ஆரம்பத்தில் ஒவ்வோர் ஊராகச் சென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கினார். பிறகு, 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

அவருடைய மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகளை அறிவித்தார். ஊழலை ஒழிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆகியவை அந்த கொள்கை அறிவிப்பில் முக்கியமாக இடம் பெற்றன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

தேமுதிக 2006 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், 232 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து போட்டியிட்டவர்களில் யாரும் மக்களிடையே பெரியளவில் அறிமுகம் இல்லாதவர்கள்.

இருந்தும், அதில் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்று, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவுக்கும் விஜயகாந்த் அதிர்ச்சியளித்தார். அப்போது திமுகவின் பிரம்மாண்ட வெற்றியைக் குலைத்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமானதும் தேமுதிக பெற்ற வாக்குகளே காரணமென்று சொல்லப்பட்டது. சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தேமுதிகவின் வாக்குகள் இருந்தன. விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் பாமகவை சேர்ந்த கோவிந்தசாமியை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளைப் பெற்றது. இந்த நேரத்தில் பாலம் அமைப்பதற்காக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தி இடிக்கப்பட்டது. தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக இப்படி செய்வதாகக் கடுமையாக விமர்சித்தார் விஜயகாந்த்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே தேமுதிக போட்டியிட்டது. அதில் 10.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்துதான் தேதிமுகவின் வீழ்ச்சிக்கான வித்து போடப்பட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அய்யநாதன்.

அதிமுக – தேமுதிக மோதல்

விஜயகாந்த் ஒரு மாற்றாக உருவெடுத்ததே அவருடைய வெற்றிக்குக் காரணம் என்கிறார் அய்யநாதன். மேலும், “இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு சதவீதம் அவரிடம் இருந்தது. ஆனால், அவர் தன்னை ஒரு மாற்றாகவே உணராதது தான் அந்த வெற்றி நீடிக்க முடியாமல் போனதற்கான காரணம்.

விஜயகாந்த் பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

திமுக, அதிமுக இரண்டில் எந்தக் கட்சியோடு கூட்டு சேர்ந்தாலும் தனது தனித்தன்மை போய்விடும் என்பதை அவர் உணரவே இல்லை. அவருடைய தனித்தன்மை போய்விடும், அது அவருக்கு இழப்பு தான் என்பதை அவரிடம் ஒருமுறை உணர்த்தினேன். அதை உணர்ந்து அவர் 2009 மக்களவை தேர்தலில் கூட்டணிக்குப் போகாமல் இருந்தார்,” என்று கூறுகிறார் அய்யநாதன்.

2011 தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக மீது எதிர்ப்பலை பெரிதாக இருந்தது. அதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், சேலத்தில் நடந்த மக்கள் உரிமை மாநாட்டில் கூட்டணி சேர்வது குறித்துப் பேசினார். திமுகவின் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.

அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களில் அதிமுகவுக்கும் தேமுதிகவும் மோதல் ஏற்படவே, விஜயகாந்த்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது.

மேலும், “அந்தக் கூட்டணியில் சேர்ந்தபோதே அவருடைய தோல்விக்கான வித்து தொடங்கிவிட்டது. ஒரு கூட்டணி கட்சியாக இருந்து, அந்தக் கூட்டணியில் ஆளும் கட்சி கூட்டணியாகி எதிர்க்கட்சியாக வந்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாத நிலை ஏற்பட்டதற்கு, தன்னால்தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று விஜயகாந்த் நினைத்ததும் இவர் இல்லாமலேயே நாம் ஜெயித்திருக்க முடியும் என்று ஜெயலலிதா நினைத்ததும்தான் காரணம்.

இது அவர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. சட்டமன்ற நிகழ்வுகளிலேயே அது வெளிச்சமாகத் தெரிந்தது,” என்கிறார் அய்யநாதன்.

விஜயகாந்த்

பட மூலாதாரம், Twitter

சட்டமன்றத்தில் இருகட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜெயலலிதா முன்னிலையிலேயே ‘ஏய்…’ என்று அதிமுக உறுப்பினர்களை எச்சரித்தார். அவருடைய இந்தச் செயலுக்கு வெளியிலிருந்து மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பின.

சட்டமன்றத்தில் நடந்த மோதலின்போது சபாநாயகராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “முதலில், விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கட்சி தொடங்கி, ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் அவருக்குக் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரசாரமாக ஏற்பட்டு கூட்டணி பிளவுபட்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்தார்கள்.அப்போது நான்தான் சபாநாயகராக இருந்தேன். பண்ருட்டி ராமச்சந்திரன் அதன்பிறகு தேமுதிகவில் இருந்து விலகிய பிறகு, ‘அந்த நேரத்தில் நீங்கள் சமயோசிதமாக முடிவெடுத்து வெளியேற்றாமல் விட்டிருந்தால், பெரியளவுக்கு அடிதடியாகி ரத்தமெல்லாம் சிந்த வேண்டியிருந்திருக்கும். சபாநாயகருக்கு சமயோசித புத்தி அவசியம். அதன் அடிப்படையில் அன்று நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரி’ என்று என்னிடம் கூறினார்.சட்டமன்றத்தில் அன்று, மோதல் உச்சகட்டத்திற்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் வேறு வழியின்றி ஒட்டுமொத்த தேமுதிகவினரையும் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.அது யாரால் நடந்தது என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அதிமுகவுடன் தொடர்ந்து இணக்கமான சூழலில் இருந்திருந்தால், தேமுதிக நிச்சயமாக இன்று மேலே வந்திருக்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி இருந்ததால்தான், அதற்குப் பிறகு அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக வர முடிந்தது. இருப்பினும், எங்களோடு இருந்தபோது அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது என்பது ஒரு வரலாறு,” என்று கூறினார்.

தேமுதிக கட்சியிலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்குச் சென்றனர். அதற்குப் பிறகு, ஆளும் கட்சிக்கு எதிராகப் பெரிய நடவடிக்கைகளை தேமுதிக மேற்கொள்ளவில்லை.

“அதற்குப் பிறகு, ஓர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வளர்ப்பதற்கான வழிமுறையே அவருக்குத் தெரியவில்லை. அவரோடு இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனையையும் அவர் சரியாகக் கேட்கவில்லை,” என்று கூறிய அய்யநாதன், “ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர்களை இயக்கிய இயக்குநர்கள். இவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், கட்சி தொடங்கும்போது தங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குத் தெரியவில்லை.

ஏனென்றால், ஒரு மன உறுதியில் கட்சியைத் தொடங்கிவிட்டாலும், மக்களின் தேவையை அவர்கள் உணரவில்லை. தங்களை முன்னிறுத்தக்கூடிய அரசிலையே செய்ததால், அது ஒரு கட்டத்தில் மக்களிடையே நேர்மறை தாக்கங்களைவிட அதிகமாக எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் & பிரேமலதா

பட மூலாதாரம், DMDK Party

அதை ஏற்படுத்தியது, இவர்களுடைய செயல்பாடுகள், புரிதல் இல்லாமை மற்றும் அரசியல் செய்யத் திறமையற்ற நிலையும்தான்.

2016ஆம் ஆண்டில் தனித்து நின்றபோது, பல்லைக் கடிப்பது, தொண்டரை அடித்தது போன்ற விஜயகாந்த்தின் செயல்பாடுகள், இவரைக் கேலிக்குரியவராக மாற்றியது. அதுவும் இவரைப் பெரியளவில் பாதித்தது”

“அதிமுக, திமுக இரண்டும் கூட்டு சேர்ந்து தேமுதிகவை முறியடித்த

தேமுதிகவுக்குப் பின்னடைவு என்று எதுவும் இல்லை என்று கூறிய தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, “தேர்தல் நியாயமாக நடத்தப்படுவது கிடையாது. இலவசத்தைக் கொடுப்பது, பணத்தைக் கொடுப்பதன் மூலமே வாக்குகளை வாங்குகிறார்கள். இவையின்றி தேர்தலைச் சந்திக்கட்டும்.

அதில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு வருகிறது என்பது தெரியும். அவர்கள் ஆட்சிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, மக்களுக்கு இலவசங்களை வழங்கி ஓட்டு வாங்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி

தேமுதிக வளர்வது பொறுக்காமல், அதை பணம் கொடுத்து முறியடிக்கிறார்கள். இவர்களுடைய ஆட்சியைப் பார்த்தோ, செய்யும் திட்டங்களைப் பார்த்தோ மக்கள் ஓட்டு போடவில்லை. பணம் தான் காரணம்,” என்கிறார்.

“தேமுதிகவை முறியடிப்பதில், திமுக, அதிமுக இரண்டுமே கூட்டு சேர்ந்தன. அவர்களைத் தவிர வேறு எந்தக் கட்சியும் வளரக்கூடாது என்று தடுக்கிறார்கள்,” என்றவரிடம் விஜயகாந்த்திற்கு தற்போது மக்களிடையே எந்தளவுக்குச் செல்வாக்கு உள்ளதாக நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, “அவருக்கு இன்றும் மக்களிடையே நல்ல மரியாதை உண்டு. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று அனைவரும் பேசினார்கள். அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது,” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தேமுதிக இருபெறும் கட்சிகளுக்கான மாற்றாக வந்துவிடக் கூடாதென்று அதிமுகவும் திமுகவும் கூட்டு சேர்ந்து முறியடித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “இதைத் தவறான கருத்தாகவே நான் பார்க்கிறேன். 2021 தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் கொடுத்து தற்காலிக வெற்றியை திமுக பெற்றுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதிக காலம் ஆட்சி செய்தது அதிமுக தான். அதிகமான அளவுக்கு வாக்கு சதவீதமும் மக்களிடையே செல்வாக்கும் உள்ள கட்சி.எங்களுடைய பலம் எங்களுக்குத் தெரியும். மக்களிடம் ஆதரவு உள்ளது. தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி. அப்படியிருக்கும்போது, அப்படிச் செய்வது தேவையில்லாத வேலை. நாங்கள் அப்படி நினைக்கவும் இல்லை, அப்படிப்பட்ட செயல்களிலும் ஈடுபடவும் இல்லை,” என்று கூறினார்.

விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, “பேசுவது, நடப்பது ஆகிய இரண்டும் தான் அவருக்குச் சிரமமாக உள்ளது. மற்றபடி, நன்றாகச் சாப்பிடுகிறார், செய்திகளைப் பார்க்கிறார், சிரித்துப் பேசுகிறார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொண்டர்களும் அவர் நல்லபடியாக மீண்டும் வந்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்,” என்றார்.

சிவப்புக் கோடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »