Press "Enter" to skip to content

ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உலகின் பெரும்பணக்காரர்களுள் ஒருவரான ஈலோன் மஸ்க் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்திற்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே நடைபெறும் சட்டப் போராட்டத்தை பாதிக்கச் செய்வதாக பீட்டர் ஸட்கோவின் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவருடைய குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் முரணானவை என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்திறனற்ற தலைமை மற்றும் மோசமான பணித்திறனுக்காக கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் இருந்து பீட்டர் ஸட்கோ நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸட்கோ முன்வைத்த குற்றச்சாட்டுகள்

பீட்டர் ஸட்கோவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளை சிஎன்என் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் ஊடகங்களால் முதலில் வெளிக்கொண்டு வரப்பட்டன. கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற ட்விட்டர் தவறிவிட்டதாகவும் “ஈலோன் மஸ்க்கிடம் ட்விட்டர் பாட்-கள் (மென்பொருள் மூலம் இயக்கப்படும் பாட் (Bot), தானாக ட்விட்டர் பதிவுகளை வெளியிடும்) குறித்து பொய் சொல்லியதாகவும்” அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் இதுகுறித்த தனது புகாரை பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் ஜூலை மாதத்தில் பதிவு செய்தார். சிபிஎஸ் ஊடகம் வாயிலாக பகிரப்பட்ட அப்புகாரின் திருத்தப்பட்ட நகலை பிபிசி கண்டது.

அதில், உணர்வுபூர்வமான சில தகவல்களை ட்விட்டர் நிறுவனம் கையாண்ட விதம் குறித்து விமர்சித்துள்ள ஸட்கோ, அவற்றில் சில விவகாரங்களை அமெரிக்க நெறிமுறை அமைப்புகளிடம் சரியாக பதிவு செய்ய ட்விட்டர் நிறுவனம் தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபலமான தலைவர்களான பாரக் ஒபாமா, ஜோ பைடன், கான்யே வெஸ்ட் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் கூட முடக்கப்பட்டன.

ட்விட்டர் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸட்கோ குற்றம்சாட்டியுள்ளார். “பாதுகாப்பு தொடர்பான சம்பவம் வாரத்திற்கு ஒன்று நிகழ்ந்தாலே அது குறித்து ட்விட்டர் நெறிமுறை அமைப்பிடம் புகார் தெரிவிப்பதற்கு போதுமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

பட மூலாதாரம், Getty Images

நிறுவனத்திற்கு உள்ளிருந்து தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் “கிட்டத்தட்ட கண்காணிக்கப்படாமலேயே” விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் தரவுகளை கையாள்வது குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், உணர்வுப்பூர்வமான அமைப்புகள் மற்றும் பயனர்களின் தரவுகளை ட்விட்டர் பணியாளர்கள் பெரும்பாலானோர் கையாளும் வகையில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மோசமான நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கான செயல்படத்தக்க திட்டம் எதுவும் ட்விட்டரிடம் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவர், கடந்த காலங்களில் தங்கள் கணக்குகளை ரத்து செய்த பயனர்களின் தரவுகளை முறையாக நீக்குவதில் ட்விட்டர் நிறுவனம் தவறி விட்டதாக கூறியுள்ளார்.

போலி மற்றும் ஸ்பேம் கணக்குகளை “வேண்டுமென்றே புறக்கணிப்பது வழக்கமாக இருந்தது” என தெரிவித்துள்ள அவர், ட்விட்டர் தளத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அறிய ட்விட்டர் செயல் அலுவலர்களுக்கு போதிய ஊக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், இக்குற்றாச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் “சிறு ஆதாரங்களையே ஸட்கோ வழங்கியுள்ளதாக” தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்கள் உடனடியாக கருத்து தெரிவித்துள்ளனர். ஈலோன் மஸ்க்கை ட்விட்டர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவருடைய சட்டக்குழு, ட்விட்டரில் தினசரி செயல்படும் 229 மில்லியன் பயனர்களில் எத்தனை பேர் மனிதர்கள் என்பதை நிரூபிக்க ட்விட்டரிடம் எந்த வழியும் இல்லை என வாதிடுகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியின் ஒளிப்படத்திரைஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஈலோன் மஸ்க், “கொண்டாட தொடங்குங்கள்” என தொனிக்கும் விதமாக “give a little whistle” என்ற வாசகம் அடங்கிய படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் ஒப்பந்தம் (தற்போது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது) பொதுவெளியில் வைக்கப்படுவதற்கு முன்பாகவே, ஸட்கோ ட்விட்டர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்ததாக சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ள ஸட்கோவின் வழக்குரைஞர், ஈலோன் மஸ்க்கை அவர் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்களுள் ஒருவரான அலெக்ஸ் ஸ்பைரோ, ஸட்கோ ட்விட்டருக்கு எதிரான ஒரு சாத்தியமான சாட்சியாக இருக்க வேண்டும் என கூறினார்.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Reuters

கணினி பாதுகாப்பு வட்டாரத்தில் பெரிதும் அறியப்படுபவரான பீட்டர் ஸட்கோ, ஒரு முன்னாள் ஹேக்கரும் கூட.

‘மட்ஜ்’ என அழைக்கப்படும் இவர், கணினி பாதுகாப்பு தொடர்பான ‘லாஃப்ட்’ L0pht என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1998-ல் சைபர் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனெட் விசாரணைகளில் பங்கேற்றுள்ளார்.

கூகுள் நிறுவனத்திலும் அமெரிக்க அரசால் நடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமையான DARPA-ல் மூத்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ட்விட்டர் குறித்தும் எங்கள் தனியுரிமை மற்றும் தரவு-பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இப்போது நாம் பார்ப்பவை தவறானவை. முரண்பாடானவை, முக்கியத்துவம் அற்றவை.

“ஸட்கோவின் குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றை முன்வைத்த சந்தர்ப்பவாத நேரம் ஆகியவை கவனத்தை ஈர்க்கவும், ட்விட்டர், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“ட்விட்டரில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு நீண்ட காலமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

பீட்டர் ஸட்கோவுக்கு இவ்விவகாரத்தில் உதவிபுரியும் அமைப்பை சேர்ந்த ஜான் டை, ஸட்கோவை ஒரு “நாயகர்” என தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »