Press "Enter" to skip to content

அரசி பால்மோரல் கோட்டையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்

  • சீன் கோக்லன்
  • அரண்மனை செய்தியாளர்

பட மூலாதாரம், EPA

அரசியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

“இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த அரசியின் உடல்நிலை குறித்து கவலை கொண்ட அவரது மருத்துவர்கள், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசி பால்மோரல் கோட்டையில் செளகர்யமாக இருக்கிறார்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் சார்ல்ஸ் பால்மோரல் கோர்ன்வால் சீமாட்டியான தமது மனைவியுடன் அங்கு புறப்பட்டுள்ளார்.

யார்க் கோமகனும் வெஸ்ஸெக்ஸ் சீமாட்டியும் அபெர்தீனுக்கு மேற்கே உள்ள ஸ்காட்டிஷ் எஸ்டேட்டுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

கேம்ப்ரிட்ஜ் கோமகனும் அங்கு வழியில் இருக்கிறார்.

96 வயதாகும் ராணி, புதன்கிழமை காணொளி வாயிலாக நடந்த பிரைவி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு, மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த செய்தியால் “முழு நாடும்” “ஆழ்ந்த கவலையில் இருக்கும்” என்று பிரதமர் லிஸ் உடை கூறியுள்ளார்.

“எனது எண்ணங்கள் – மற்றும் எங்கள் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்கள் – இந்த நேரத்தில் மாட்சிமை பொருந்திய அரசியார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமது 70 வருட ஆளுகையில், அரசி புதிய பிரதமரை பக்கிங்காம் அரண்மனையில் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் தமது ஸ்காட்லாந்து இல்லத்தில் கோடை விடுமுறையில் அரசி இருக்கிறார்.

கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, “எனது பிரார்த்தனைகளும், [இங்கிலாந்து தேவாலயம்] தேசம் முழுவதும் உள்ள மக்களின் பிரார்த்தனைகளும் இன்று மாட்சிமை பொருந்திய அரசியாருக்காக உள்ளன.”கடவுளின் பிரசன்னம் அரசியாரையும் அவரது குடும்பத்தினர் மற்றும் பால்மோரலில் அவரை பராமரித்து வருபவர்களையும் பலப்படுத்தி ஆறுதல்படுத்தட்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »