Press "Enter" to skip to content

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு எப்போது, எங்கு நடக்கும்?

பட மூலாதாரம், PA Media

செப்டம்பர் 19, திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கவுள்ள அவரது இறுதிச் சடங்குக்கு முன் ராணியின் உடல் நான்கு நாட்களுக்கு வைக்கப்படும்.

அந்த நேரத்தில் பொதுமக்கள் சவப்பெட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கு முன் செப்டம்பர் 12, திங்கட்கிழமை முதல் 24 மணிநேரம் எடின்பரோவில் செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும்.

அவரது குடும்பத்தினர், அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் அவருடைய இறுதிச் சடங்கில் பிரிட்டிஷ் நேரப்படி 11 மணிக்கு கலந்துகொள்வார்கள். அன்று பொது விடுமுறை நாளாக இருக்கும்.

பால்மோரலுக்கு வெளியே அரச குடும்பத்தினர் ராணிக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியைப் பார்வையிட்டனர்

பட மூலாதாரம், Reuters

அவர் உயிரிழந்த அபெர்தீன்ஷையரின் பால்மோரலில் இருந்து, ஓக் மரத்திலான ராணியின் சவப்பெட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை எடின்பரோ நகருக்குச் சென்று, அங்கிருந்து பிரிட்டிஷ் நேரப்படி மாலை நான்கு மணியளவில் ஹோலிரூட்ஹவுஸ் மாளிகைக்கு மெதுவாகக் கொண்டு செல்லப்படும்.

திங்கட்கிழமை பிற்பகல், அரச குடும்ப உறுப்பினர்களுடன் எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்திற்குச் செல்லும். மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 24 மணிநேரம் சவப்பெட்டி அங்கு வைக்கப்படும்.

அடுத்த நாள் இளவரசி ஆன் தனது தாயின் உடலை லண்டனுக்கு கொண்டு செல்லும்போது உடன் செல்வார். ராணியின் சவப்பெட்டி எடின்பரோ விமான நிலையத்திலிருந்து பக்கிங்ஹாம் மாளிகைக்கு எடுத்துச் செல்லப்படும்.

புதன்கிழமை பிற்பகல், அது வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பிரிட்டிஷ் நேரப்படி மதியம் 3 மணியளவில் அங்கு சென்றடையும். இறுதிச் சடங்குக்கு முன், நான்கு நாட்களுக்கு ராணியின் சவப்பெட்டி வைக்கப்படும்.

19ஆம் தேதி 11 மணிக்கு நீண்ட நடை உட்பட விண்ட்சர் கோட்டை வரை ஊர்வலத்துடன் அரச இறுதிச் சடங்குகள் நடக்கும். விண்ட்சரில் உள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் ராணி அடக்கம் செய்யப்படுவார்.

நாடுகளுக்குச் செல்லும் அரசர்

இறுதிச் சடங்குக்கு முன்னதாக, புதிய அரசர் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

அரச இறுதிச் சடங்கு நடைபெறும் நாள் வரை தேசிய துக்கம் தொடர்ந்து கடைபடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பிறகு ஏழு நாட்களுக்கு அரச குடும்பத்தினர் துக்கம் அனுசரிப்பார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்பது பிரிட்டனின் அரசர்களும் ராணிகளும் முடிசூட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம். ஆனால், 18ஆம் நூற்றாண்டிலிருந்து அங்கு அரசரோ ராணியோ ஒருவர் இறுதிச் சடங்கு கூட நடைபெறவில்லை. 1900களில் ராணியின் தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டி விக்டோரியா ராணியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றன.

ராணியின் வாழ்க்கை மற்றும் சேவையை நினைவுகூரும் வகையில், அரச குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்திருக்க உலக நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்.

மூத்த பிரிட்டன் அரசியல்வாதிகள், தற்போதைய பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.

இறுதிச் சடங்கின் நாளில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளை ரத்து செய்வதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அரசாங்க வழிகாட்டுதல்கள் விளையாட்டுப் போட்டிகள் அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கள், ஜெபக்கூட்டம் அல்லது ஊர்வலங்கள் நடக்கும் நேரத்தில் அவர்களுடைய நிகழ்வுகளின் நேரம் இருந்தால், அதை மாற்றிக்கொள்ள விரும்பலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

ராணியின் மரணத்திற்குப் பிறகு சில நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன, சில ஒத்தி வைக்கப்பட்டன. ப்ரீமியர் லீக், இங்கிலீஷ் கால்பந்து லீக், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கால்பந்து போட்டிகள் செவ்வாய்க்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பெண்கள் சூப்பர் லீக், மகளிர் சாம்பியன்ஷிப், மகளிர் எஃப்ஏ கோப்பை ஆகியவற்றில் அனைத்து கால்பந்து ஆட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல குதிரைப் பந்தங்கள், கோல்ஃப், குத்துச்சண்டை போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட பெரியளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. தொழிற்சங்க காங்கிரஸ், பிரைட்டனில் நடக்கவிருந்த அதன் ஆண்டுதோறும் நடக்கும் மாநாட்டை ஒத்தி வைப்பதாகக் கூறியது.

லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் சனிக்கிழமையன்று சார்ல்ஸ் அரசராக அறிவிக்கப்பட்டபோது, இறுதிச் சடங்கின் நாள் பொது விடுமுறை என்று உறுதி செய்தார்.

அவர் தனது உரையில், ராணியின் “ஈடுசெய்ய முடியாத ஆட்சியை” பாராட்டினார்.

பிரிட்டனின் அரசராக மூன்றாம் சார்ல்ஸ் பிரகடனப்படுத்தப்பட்டார்

பட மூலாதாரம், Jonathan Brady/PA

அரசர் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு அரசரானார். ஆனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மதகுருமார்களைக் கொண்ட தனிப்பட்ட குழுவின் சந்திப்பு அதை முறையாக உறுதிப்படுத்தியது.

பிரிட்டின் ஆறு முன்னாள் பிரதமர்கள் உட்பட, நிரம்பியிருந்த அறையில் இருந்தோர், அந்த வாசகத்தை மீண்டும் மீண்டும் கூறினர். பிறகு செயின்ட் ஜேம்ஸ் மாளிகையிலுள்ளா ஃப்ரைரி நீதிமன்றத்திற்கு மேலே இருக்கும் மாடத்தில் இந்தப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இந்த தனிப்பட்ட குழுவின் எழுத்தர் ரிச்சர்ட் டில்ப்ரூக், சார்ல்ஸை “அரசர், காமன்வெல்த் தலைவர், மத நம்பிக்கையின் பாதுகாவலர்” என்று அறிவித்து, “கடவுளே அரசரைக் காப்பாற்றும்” என்று அறிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »