Press "Enter" to skip to content

பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் தரப்புக்கிடையே பதற்றம். நடந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக காவல் துறை கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த சிறிய மோதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக, கடந்த சனிக்கிழமையன்று (செப்.17) இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே லெஸ்டர் நகரில் நடந்த இந்த மோதல், ஒரு ‘திட்டமிடப்படாத போராட்டத்துக்கு’ பிறகு தீவிரமடைந்தது என்கிறது காவல்துறை.

சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு லெஸ்டரில் வசிக்கும் மக்களில் 37% பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 15 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இரவுக்குப் பின் நகரில் எந்தவிதமான வன்முறைகளோ குழப்பமோ நடைபெறவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இரு பிரிவின் பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் 16 காவலர்கள் காயம்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்திய நேரப்படி செப்டம்பர் 20ஆம் தேதி மதியம் 12மணி வரை 47 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து லெஸ்டர் பகுதியிலுள்ள முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த சுலேமான் நாக்டி பிபிசியிடம் பேசியபோது, “வீதியில் நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கு பிரச்னைகள் இருந்தன. போட்டிக்கு பிறகு வீதியில் அடிக்கடி  கூட்டம் கூடிய நிகழ்வுகள் நடந்தன. ஆனால், அவை இவ்வளவு மோசமானதாக மாறவில்லை.  எங்களுக்கு அமைதி தேவை. இது இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். மிகவும் அதிருப்தி அடைந்த சில இளைஞர்களே இந்த குழப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

கடந்த சனிக்கிழமையன்று லெஸ்டர் நகரில் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னை தன்னை மிகவும்  கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்த பகுதியிலுள்ள இந்து மற்றும் ஜெயின் கோவில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சஞ்சீவ் படேல் கூறுகிறார்.

“நாங்கள் பல தசாப்தங்களாக இந்த நகரத்தில் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் கடந்த சில வாரங்களாக மக்கள் அதிருப்தியுடன் இருப்பதற்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகிறது. வன்முறையைக் கையாள்வது இதுபோன்ற சூழ்நிலையை சமாளிப்பதற்கான வழி அல்ல. நேற்றும் கடந்த இரண்டு வாரங்களாகவும் நிலவி வரும் சூழ்நிலை குறித்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்; இதற்காக வருத்தப்படுகிறோம்.  சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றும் கூறுகிறார்.

பாட்டில் வீச்சு

இந்த நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கிழக்கு லெஸ்டர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெப், “அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாதுகாப்பு குறித்து  குடும்பத்தினர் கவலைப்படுவார்கள், பதற்றத்தை தணிக்க முயற்சி செய்ய அழைப்பு விடுத்துள்ள காவல்துறையினரின் ஆலோசனையை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான காணொளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதை பார்க்கமுடிகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் வாழும் பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில், மோதல் நடைபெற்றது. அதன் நீட்சியாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

இரவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர்

சனிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், “திட்டமிடப்படாத போராட்டத்திற்கு” பிறகு இந்த புதிய பிரச்னை வெடித்ததாகவும்,  கிழக்கு லெஸ்டரில்  தங்களது பாதுகாப்பு பணி தொடரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக லெஸ்டர் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிகளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அமைதியை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வன்முறை மற்றும் சேதம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், வழிபாட்டுத்தலம் ஒன்றின் வெளியே இருந்த கொடியை ஒருவர் அகற்றுவது போன்ற காணொளி பரவி வருவது குறித்து எங்களுக்கு தெரியும். இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர்

இதுதொடர்பாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லெஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் இந்து மத வழிபாட்டுத்தலத்தின் வளாகங்கள், சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த விஷயத்தை நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »