Press "Enter" to skip to content

‘மரணச் சாலை’: உலகின் மிக ஆபத்தான இந்தச் சாலை உங்களை எங்கு அழைத்துச் செல்லும்?

  • ஷபீக் மேக்ஜி
  • பிபிசி டிராவல்

பட மூலாதாரம், Streetflash/Getty Images

பொலிவியாவின் பிரபலமற்ற அந்த “மரணச் சாலை” வழியாக பயணிப்பது உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த உலகம் பல நூற்றாண்டுகளாக கோகா (கொக்கைன் தயாரிக்க பயன்படும் தாவரம்) மற்றும் தங்கம் தொடர்பான பேரார்வம், தவறான புரிதல் மற்றும் சர்ச்சைகளால் நிரம்பியது

4,800 மீ கும்ப்ரே கனவாயைக் கடந்த பிறகு, நான் பயணித்த வாகனம் சுழலும் மூடுபனி மேகத்தினுள் மூழ்கியது. வாகனத்தின் உள்ளே ஒரு குமிழியில் சிக்கிக்கொண்டது போல, விசித்திரமான அமைதியை நாங்கள் உணர்ந்தோம். இது மரணச் சாலை பயணத்தில் எங்களுக்கு கிடைத்த சிறந்த அனுபவம் அது.

உயரமான ஆண்டிஸ் மலை நகரமான லா பாஸில் இருந்து வெப்பமண்டலப் பகுதிகளை அண்மித்துள்ள யுங்காஸ் பள்ளத்தாக்குகள் மற்றும் அமேசானிய தாழ்நிலங்களுக்கு அப்பால் இருக்கும் 64 கி.மீ. யுங்காஸ் சாலை, 3,500 மீ தூரத்திற்கு கூரான இறக்கம் கொண்டது. 3 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட அந்த நெடுஞ்சாலையில், கூர்மையான திருப்பங்களும் ஆபத்தான வளைவுகளும் இருந்தன. சிறிய நீர்வீழ்ச்சிகள் அருகேயிருந்த பாறையில் பட்டு தெறித்தன. அங்கு சாலையோர ஆலயங்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.

1932 முதல் 1935 வரை நடந்த அழிவுகரமான சாக்கோ போரைத் தொடர்ந்து, பராகுவேயின் போர்க் கைதிகளால் உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலையில், 1990களில் சாலை விபத்துகளால் பலர் உயிரிழந்தனர். இண்டர்-அமெரிக்கன் வளர்ச்சி வங்கி இந்தச் சாலையை ”உலகின் மிகவும் ஆபத்தான சாலை” எனக் குறிப்பிடுகிறது.

நாங்கள் பயணித்த வாகனம் மெதுவாகப் பயணித்தது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது செங்குத்தான 1,000 மீ பள்ளத்தாக்கு தெரிந்தது. எதிர்ப்புறத்தில் ஓர் இருசக்கர வாகனம் எங்களை வேகமாகக் கடந்து சென்றது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அதற்கு முன்பாக, சைக்கிளில் வந்த மூவர், ஒரு பள்ளத்தை எச்சரிக்கையுடன் கடந்தனர். மிகவும் ஆபத்தான பகுதியைச் சுற்றி புறவழிச்சாலை கட்டப்பட்டிருந்தாலும், இந்தச் சாலையின் கொடூரமான நற்பெயர் அதை ஒரு சுற்றுலாத் தலமாக மாறி, ஆர்வமுள்ள பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.

இந்தப் பாதை கவனிக்கப்படாத பகுதிக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. யுங்காஸ் பகுதி ஆண்டிஸ் மற்றும் அமேசான் இடையே உள்ள வளமான மற்றும் பல்லுயிர்கள் வேறுபடும் மண்டலமாகும். பேரார்வம், தவறான புரிதல் மற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இரு வளங்களான தங்கம் மற்றும் கோகாவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட பகுதியாகவும் யுங்காஸ் உள்ளது.

இரண்டு மணிநேர மரணச் சாலை பயணத்தைத் தொடர்ந்து, ஒரு காலத்தில் தங்கச் சுரங்க மையமாக இருந்த கொரோய்கோ நகருக்குள் நுழைந்தோம். தற்போது அது பொலிவிழந்த சுற்றுலா நகரமாக உள்ளது.

இனிமையான காலநிலை, ஏற்றமும் இறக்கமுமான பரந்த மலைகள் மற்றும் உண்பதற்கும் உறங்குவதற்கும் இனிமையாக இருந்த அந்த இடத்தைவிட்டுக் கிளம்புவது கடினம். பயணக் கலைப்பு காரணமாக ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு, நவீன பொலிவியாவை வடிவமைக்க இந்தப் பகுதி எவ்வாறு உதவியது என்பது பற்றி அறிய சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்குச் சென்றேன்.

வளமான மண் மற்றும் ஏராளமான மழைப்பொழிவு ஆண்டிஸின் கிழக்கு சரிவுகளில் ஓடும் யுங்காவை விவசாய மையமாக மாற்றியிருந்தது. இப்பகுதி இன்கா மற்றும் திவானகு போன்ற முந்தைய பேரரசுகளின் தானிய உற்பத்தி மையமாகவும் இருந்தது.

ரியோ கொரோய்கோவை நோக்கி பல நூற்றாண்டுகள் பழமையான பாதையில் நான் நடைபயணம் மேற்கொண்டபோது, காபி, வாழைப்பழங்கள், மரவள்ளிக்கிழங்கு, கொய்யா, பப்பாளி மற்றும் சிட்ரஸ் பழங்கள் பயிரிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மெல்லிய கிளைகள், முட்டை வடிவ இலைகள் மற்றும் சிவப்பு நிற பழங்களுடன் கூடிய புதர் செடியான கோகாவும் பயிரிடப்பட்டிருந்தது.

ஆயிரமாண்டுகளாக, தென் அமெரிக்க கலாசாரங்களில் கோகா முக்கிய அங்கம் வகித்துவருகிறது. நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டரில் கோகா பயிர் செய்யும் பொலிவியா, தென் அமெரிக்க கண்டத்திலேயே அதிக கோகா உற்பத்தி செய்யும் நாடாகும். அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு யுங்காஸில் விளைகின்றது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த அதன் இலைகள் மலை உயரம் தொடர்பான நோய்களுக்கும், பசி, தாகம் மற்றும் சோர்வைத் தடுக்கவும், செரிமானத்தை சீராக்கவும், மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. 8,000 ஆண்டுகளாக மத விழாக்களிலும் கோகா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

The world's most dangerous road

பட மூலாதாரம், Filrom/Getty Images

ஸ்பானியர்கள் ஆரம்பத்தில் கோகாவை தீய பொருளாகக் கருதினர். ஆனால் சுரங்கங்களிலும், தோட்டங்களிலும் உழைக்கும் பழங்குடியின மக்களுக்கு அது ஏற்படுத்தும் நன்மைகளை உணர்ந்த பிறகு, காலனித்துவ அதிகாரிகள் மனம் மாறி கோகா பயிரை வணிகமயமாக்கினர். அதன் பிறகு கோகா மீதான ஆர்வம் தென் அமெரிக்க கண்டத்திற்கு அப்பாலும் பரவியது. கோகா பற்றிய முதல் ஆங்கில மொழிக் குறிப்பாக லண்டன் ஆபிரகாம் கௌலி 1662ஆம் ஆண்டு எழுதிய கவிதையான ‘எ லெஜண்ட் ஆஃப் கோகா’ பார்க்கப்படுகிறது.

கோகா மற்றும் அதிலிருந்து கிடைக்கும் கொக்கைன், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமடைந்தது. பானங்கள், மருந்துகள் உட்பட பல்வேறு தயாரிப்புகளில் கோகா பயன்படுத்தப்பட்டது. அவற்றில் லிட்டருக்கு 200 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமான கொக்கைன் கொண்ட வின் மரியானி பிரெஞ்ச் ஒயினும் அடங்கும். இது உடல் மற்றும் மூளையை புத்துணர்ச்சியூட்டும் என்று கூறி விளம்பரங்கள் செய்யப்பட்டன.

அமெரிக்க மாநிலமான ஜோர்ஜாவில், வின் மரியானி போன்ற தயாரிப்புகளின் வெற்றி, மருந்துக் கடைக்காரரான ஜான் பெம்பர்டனை பெம்பர்டனின் பிரெஞ்சு ஒயின் கோகாவை உருவாக்கத் தூண்டியது. இதில் கொக்கைன் மற்றும் ஆல்கஹால் கலவையும், காஃபின் நிறைந்த கோலா விதைச் சாறும் அடங்கும்.

அது பின்னர் கோகோ கோலாவாக வளர்ந்தது. கொக்கைன் மற்றும் ஆல்கஹால் நீக்கப்பட்டுவிட்டாலும், கொக்கைன் இல்லாத கோகோ இலைச் சாறு சுவைக்காக இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் கொக்கைன் மற்றும் கொக்கைன் சார்ந்த தயாரிப்புகள் சட்டப்பூர்வமாக இருந்தன.

ஆஸ்திரிய நரம்பியல் வல்லுநரான சிக்மண்ட் பிராய்ட் அதனை பெரிதும் ஆதரித்தார். கொக்கைன் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ள அவர், சிறிய அளவிலான கொக்கைன் எடுத்துக்கொள்ளும்போது அது தன்னை வேறு உயரத்திற்கு உயர்த்தியதாகக் கூறுகிறார். பின்னர், குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக அது மாறியதால் உலகின் பெரும் பகுதிகளில் கொக்கைன் தடை செய்யப்பட்டது. இருப்பினும், பொலிவியாவில் தொடர்ந்து சட்டப்பூர்வமாக உள்ளது.

1980களில் கொக்கைனுக்கான தேவை மீண்டும் அதிகரித்ததால், அமெரிக்கா தலைமையிலான ‘போதைப்பொருள் மீதான போர்’ நடவடிக்கை பொலிவியாவின் பெரிய கோகோ உற்பத்தி செய்யும் பகுதியான சாப்பரே பிராந்தியத்தை அழித்தது. இந்த நடவடிக்கைகள் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள், கொலை, துன்புறுத்தல், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல், தாக்குதல் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் முடிந்தன.

இது, கோகா விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான கொச்சபாம்பா டிராபிக்ஸின் ஆறு கூட்டமைப்புகளின் தலைவரான ஈவோ மொரேல்ஸின் எழுச்சிக்கு உதவியது.

கொச்சபாம்பா நகரில் நகராட்சி நீர் விநியோக நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 1999-2000 காலகட்டத்தில் நடந்த போராட்டத்தில் கோகா விவசாயிகள் முக்கிய பங்கு வகித்ததாக சமூகவியலாளரும் வரலாற்று ஆசிரியருமான சில்வியா ரிவேரா குசிகன்கி கூறுகிறார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்தப் போராட்டம் மொரேல்ஸின் அரசியல் உயர்வுக்கும் வழிவகுத்தது. 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மொரேல்ஸ் பொலிவியாவின் அதிபரானார். அய்மாராவைச் சேர்ந்த மொரேல்ஸ் அமெரிக்க கண்டத்தின் முதல் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த அதிபர் ஆவார்.

மொரேல்ஸ் பதவியேற்றதும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் மட்டும் கோகோவை பயிரிட விவசாயிகளை அனுமதிக்கும் அமெரிக்கா தலைமையிலான கோகா ஒழிப்பு மற்றும் தடை அணுகுமுறையிலிருந்து விலகினார்.

இன்று, கோகா பல பொலிவியர்களால் புனிதத் தாவரமாகக் கருதப்படுகிறது. அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கோகாவைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். ‘கோகா வேண்டும் கோகோயின் வேண்டாம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் தாமஸ் கிரிசாஃபி, கோகா பெரும்பாலான துறைகள், பிராந்தியங்கள் மற்றும் இனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பிரிட்டானியர்கள் தேநீர் குடிப்பது போல, கோகா எடுத்துக்கொள்வது ஒரு தேசிய வழக்கமாக கருதப்படுவதாகவும் கூறுகிறார்.

யுங்காஸ் பள்ளத்தாக்கு

பட மூலாதாரம், Mathess/Getty Images

இறுதியில், யுங்காஸின் தங்க வளத்தின் அடையாளமான கொரோய்கோ நதியை அடைந்தேன். தங்கப் பாதை என்று அழைக்கப்படும் அதன் நீர்வழிகள் அண்டைப்பகுதியான அமேசான் வரை நீண்டு, மொத்தம் 350 கி.மீ நீளம் கொண்டது. இந்த ஆறு, ஓடை, சிற்றோடைப் படுகைகள் மற்றும் தங்கப் படிவுகள் நிறைந்தவை என்பதை நிரூபித்திருந்தாலும், படையெடுப்பாளர்களின் தேவையை தணிக்கும் அளவிற்கு அவை ஒருபோதும் உற்பத்தி செய்யவில்லை.

இதன் விளைவாக, இழந்த அதிர்ஷ்டம் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பற்றிய எண்ணற்ற வதந்திகள் யுங்காஸ் மற்றும் அதன் அண்டை பகுதிகளைச் சுற்றி பரவியுள்ளன.

பல கட்டுக்கதைகள் ஜேசுயிட்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஜேசுயிட்கள் (கிறிஸ்தவ மத போதனை செய்யும் இயேசு சபையினர்) பழங்குடி மக்களைச் சுரண்டி, தென் அமெரிக்காவில் பெரும் செல்வத்தை குவித்தவர்கள். ஸ்பானிய கிரீடத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த அவர்கள் சக்திவாய்ந்த மற்றும் சுதந்திரமான சிந்தனையுடன் வளர்ந்த பிறகு, 1767இல் வெளியேற்றப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென் அமெரிக்கா வழியாக பல ஆண்டுகள் பயணம் செய்த விசித்திரமான பிரிட்டிஷ் ஆய்வாளரான பெர்சி ஹாரிசன் ஃபாசெட், ‘Exploration Fawcett’ என்ற தன்னுடைய புத்தகத்தில் தெற்கு யுங்காஸ் வழியாகச் செல்லும் சகாம்பயா நதிக்கு அருகிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஜேசுயிட்களால் புதைக்கப்பட்ட பெரிய புதையல் பற்றி விவரித்துள்ளார்.

எந்த நேரத்திலும் நடைபெற இருந்த தங்கள் வெளியேற்றத்தைப் பற்றி அறிந்ததும், ஜேசுயிட்கள் தங்கம் சகாம்பயாவில் சேகரிக்கப்பட்டது என்றும் அந்தச் சுரங்கப்பாதையை மூட ஆறு மாதங்கள் ஆனது என்றும் ஃபாசெட் எழுதியுள்ளார். ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக சுரங்கப்பாதை தோண்டிய ஆறு பழங்குடி பொலிவியர்கள் மற்றும் எட்டு பாதிரியார்களில் ஏழு பேர் பின்னர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘Z’ என்ற தொலைந்து போன அமேசானிய நகரத்தைத் தேடும் போது ஃபாசெட் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவான ஆதாரம் இல்லாத போதிலும், இந்த வகையான கட்டுக்கதை குறிப்பிடத்தக்க வகையில் மீள்தன்மையை நிரூபித்துள்ளது.

இந்தக் கதைகளையெல்லாம் தாண்டி, 2007-2008 உலக நிதி நெருக்கடியால் தங்கத்தின் விலை உயர்ந்த பிறகு யுங்காஸ் மற்றும் பொலிவியன் அமேசான் பகுதிகளில் தங்க வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. 2018ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணியான அமேசான் சமூக-சுற்றுச்சூழல் புவி-குறிப்பு தகவல் திட்டத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, அங்குள்ள பல சுரங்கங்கள் சட்டவிரோதமானவை.

மேலும், அந்தப் பகுதிகள் காடுகள் அழிப்பு, நீர்வழிகள் நஞ்சாக்கப்படுதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. ஆனால் கோரோய்கோவில் இதற்கான சிறிய அறிகுறியே இருந்தது.

சிவப்புக் கோடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »