Press "Enter" to skip to content

சீன அரசியல்: ஷி ஜின்பிங் ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த 6 பேர் யார்?

பட மூலாதாரம், EPA

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சீனாவை ஆட்சி செய்யப்போகும் நபர்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இறுதி செய்து அறிவித்துள்ளது. சீனாவின் அரசியல் தலைமை நிலைக்குழு என்பது சீன அதிபரின் அமைச்சரவைக்கு சமமானதாகும்.

இது கட்சிக்குள் உள்ள உயர்மட்டத்தின் உயர்மட்டமாக கருதப்படுகிறது. மேலும் இந்த உயர்மட்டத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் ஒரு நட்சத்திர அரசியல் சாதனை மட்டுமன்றி, உள்கட்சி போட்டிகளில் திறமையான சூழ்ச்சியும் தேவைப்படுகிறது.

ஓர் ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகு, நிலைக்குழுவில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. இந்த முறையும் அப்படித்தான்.

இந்த நிலைக்குழுவுக்கு அதிபர் ஷி ஜின்பிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள், ஜாவோ லெஜி மற்றும் வாங் ஹுனிங்கைத் தவிர பெரும்பாலானோர் அணிக்கு புதியவர்கள். இதிலும் பெரும்பாலானோர் அதிபரின் விசுவாசிகளாகவே காணப்படுகின்றனர்.

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில், சீனாவின் அதிகார மையத்தை உருவாக்கும் மனிதர்களின் பட்டியல் இதோ.

சிவப்புக் கோடு

லி கியாங்

லி கியாங்

பட மூலாதாரம், Reuters

வயது: 63

தற்போதைய அரசியல் பதவி: ஷாங்காய் கட்சியின் செயலாளர்

ஷி ஜின்பிங்கின் மிக நம்பகமான இளைய சக ஊழியராகக் கருதப்பட்ட இவர், ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சிறிய பிராந்தியங்களில் பணிபுரிந்தவர். ஷீஜாங் கட்சியின் தலைவராக ஷி ஜின்பிங் இருந்தபோது, அவரது தலைமை அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷாங்காயில் கோவிட் பெருந்தொற்றை அவரது குழு கையாண்டது சர்ச்சைக்குரியதாகவும் அப்பகுதி வாழ் மக்களால் விமர்சிக்கப்படுவதாகவும் இருந்தது. இதனால் அவரது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் தற்போது இந்த நியமனத்தின் மூலம், ஷி மீதான அவரது விசுவாசம் அவரை நல்ல நிலையில் வைத்துள்ளது என்பது தெளிவாகிறது. நிலைக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் பொறுப்புகள் அடுத்த ஆண்டு உறுதி செய்யப்படும். இந்த வரிசையில் ‘லி’ அடுத்த பிரதமராகவும், ஷி ஜின்பிங்குக்குப் பிறகு இரண்டாவது-தலைவராகவும் வருவார் என்று பலர் நம்புகிறார்கள்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஜாவோ லெஜி

ஜாவோ லெஜி

பட மூலாதாரம், Reuters

வயது: 65

தற்போதைய அரசியல் பதவி: மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் தலைவர்

ஜாவோ சீனாவின் தலைவர்களுள் வளர்ந்து வரும் நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார். மேலும் ஷி ஜின்பிங் போலவே ஷான்சி மாகாணத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார்.

கிங்காய் மாகாண அரசாங்கத்தில் நுழைந்த பிறகு, அவரது வளர்ச்சி வேகமெடுத்து தமது 42 ஆவது வயதில் ஆளுநரானார். சீனாவில் மிகவும் இளம் வயதில் மாகாண ஆளுநராக ஆனவர் இவர்.

ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவராக, ஜாவோ கட்சி ஒழுக்கத்தை பராமரிக்கும் பொறுப்பை வகிக்கிறார். மேலும் பல மூத்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கியதாக இவர் புகார் அளித்துள்ளார்.

சிவப்புக் கோடு

வாங் ஹுனிங்

வாங் ஹுனிங்

பட மூலாதாரம், Reuters

வயது: 67

தற்போதைய அரசியல் பதவி: கம்யூனிஸ்ட் கட்சியின் செயலகத்தின் முதன்மை செயலாளர்

முன்னாள் ஆய்வறிஞரும் பேராசிரியருமான வாங், மூத்த அரசியல்வாதிகளின் கண்களைக் கவர்ந்த பின்னர் தரவரிசையில் உயர்ந்தார். அப்போதைய அதிபர் ஜியாங் ஜெமினுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் ஜியாங்கின் ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.

கட்சியின் அரசியல் கோட்பாட்டாளரான வாங் மூன்று தலைவர்களுக்கான சித்தாந்தங்கள் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியின் பல கருத்தியல்களுக்கு பின்னால் இருந்த மூளையாகக் கருதப்படுகிறார். ஜியாங் ஜெமினின் மூன்று பிரதிநிதிகள், ஹூ ஜின்டாவோவின் வளர்ச்சி குறித்த அறிவியல் பார்வை மற்றும் ஜி ஜின்பிங் சிந்தனை. அத்துடன், சீனாவின் லட்சிய திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ முன்னெடுப்பும் அவரது யோசனையாகவே நம்பப்பட்டது.

கட்சியில் உள்ள அனைத்து கோஷ்டிகளுடனும் அவர் நன்றாக பழகுவார் என கூறப்படுகிறது.

சிவப்புக் கோடு

காய் குய்

காய் குய்

பட மூலாதாரம், Reuters

வயது: 66

தற்போதைய அரசியல் பதவி: பெய்ஜிங்கின் மேயர்

அதிபர் ஷி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியான அவர், ஃபுஜைன் மற்றும் ஷெஜாங் ஆகிய மாகாணங்களின் சீனத் தலைவரின் கீழ் பணிபுரிந்துள்ளார். ஷிக்கு முழுமையான விசுவாசத்தைக் காட்ட இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், தொற்றுநோய் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பெய்ஜிங்கில் நடத்துவது இவருக்கு கட்சிக்குள் ஒரு வெற்றியாகக் காணப்பட்டது. அதுவும் இவருக்கு நன்விளைவுகளை உருவாக்கியது.

ஆனால் 2017இல் தலைநகரின் மக்கள்தொகையைக் குறைக்கும் திட்டத்தை அவர் தொடங்கியதால் சர்ச்சைக்குள்ளானார். இறுதியில், குறைந்த வருமானம் பெறும் பலரை அந்தத் திட்டம் நகரத்திலிருந்து வெளியேற்றியது.

சிவப்புக் கோடு

டிங் சூசியாங்

டிங் சூசியாங்

பட மூலாதாரம், Reuters

வயது: 60

தற்போதைய அரசியல் பதவி: பொதுச்செயலாளர் அலுவலகம் மற்றும் அதிபர் அலுவலகத்தின் இயக்குநர்

பயிற்சி பெற்ற பொறியாளரான டிங் தனது அரசியல் வாழ்க்கையை ஷாங்காயில் உள்ள, அரசாங்கத்தின் கீழ் இயங்கக்கூடிய ஓர் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கினார்.

மாகாண அளவிலான கட்சிச் செயலாளராகவோ அல்லது ஆளுநராகவோ அவருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அவர் 2007இல் அதிபர் ஷி ஜின்பிங்கின் செயலாளராக ஆனார். 2014 முதல் அவர் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவராக இருந்து வருகிறார், திறம்பட அதிபரின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

ஷி ஜின்பிங் சிந்தனையின் வலுவான ஆதரவாளரான இவர், ஜின்பிங்கின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவர். அவர் சீனாவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் பல பயணங்களுக்கு சீனத் தலைவருடன் சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் வேறு எந்த அதிகாரியையும் விட அவர் ஷி ஜின்பிங்குடன் இவர் அதிக நேரம் செலவிட்டிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

சிவப்புக் கோடு

லி ஷி

லி சி

பட மூலாதாரம், Reuters

வயது: 66

தற்போதைய அரசியல் பதவி: குவாங்டாங் மாகாணத்தின் கட்சி செயலாளர்

சீனத் தலைவரின் குடும்பத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு ஷி ஒரு விசுவாசி. லோனிங் மாகாணத்தில் 2017ஆம் ஆண்டு நடந்த பொய்யான பொருளாதாரத் தரவுகள் தொடர்பான ஊழலைக் கையாண்டதற்கு பிறகு, இவர் நெருக்கடியைத் தீர்ப்பவராகக் கருதப்படுகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது கட்சியின் தலைமையகமாக மா சேதுங் பயன்படுத்திய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமான யானானில் அவர் கட்சித் தலைவராக இருந்தார். அங்கு ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகள் கட்சிக்கு கடின உழைப்பாளியாக இருந்தார்.

குவாங்டாங்கில், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்காக லி முன்வந்தார். இதற்காக, புதிய வர்த்தகக் கொள்கைகளை வெளியிட்ட அவர், அந்தப் பகுதியில் பிராந்திய ஒருங்கிணைப்பையும் ஊக்குவித்தார்.

சிவப்புக் கோடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »