Press "Enter" to skip to content

சாதனை படைப்பதில் புதிய எல்லைகள் தொட்ட விராட் கோலி: சச்சினை விஞ்சுவது எட்டும் தூரத்தில்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலியும் பல்வேறு சாதனைகளை இந்த ஆட்டத்தின் மூலம் படைத்துள்ளார். 

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் (114*) அடித்திருந்தார். அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் சுமார் 3 ஆண்டுகளுக்கு அவர் சதம் அடிக்கவில்லை. இதனால், விராட் கோலி ஃபார்மில் இல்லை என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில்தான், 10, டிசம்பர் 2022ல் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்தார். அடுத்த ஒரே மாதத்தில் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து, தொடர்ச்சியாக இரு சதங்களை அவர் பதிவு செய்திருந்தார். ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அவர் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 166* ஓட்டங்கள் எடுத்து 50 நாட்களுக்குள்ளாக தனது மூன்றாவது சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். 

திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் ஒரு  பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த 166* ஓட்டத்தை உள்ளது. 2வது அதிகபட்ச ஸ்கோராக இதே ஆட்டத்தில் சுப்மன் கில் எடுத்த 116 ஓட்டத்தை உள்ளது. 

சச்சினின் சாதனை முறியடிப்பு

ஒருநாள் போட்டிகளில் 258 சுற்றுகளில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார்.  இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார். 

இலங்கைக்கு எதிராக விராட் கோலி இதுவரை 10 சதம் அடித்துள்ளார். ஒரு நாட்டின் அணிக்கு எதிராக தனிப்பட்ட ஒருவர் அடித்துள்ள அதிகபட்ச சதம் இதுவாகும். மேற்கு இந்திய அணிக்கு எதிராக விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 9 சதங்கள் அடித்துள்ளது அடுத்த இடத்தில் உள்ளது. 4வது இடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 8 சதங்களுடன் விராட் கோலியே உள்ளார். 

ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2012ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ஓட்டங்கள் எடுத்துள்ளதே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 

மேலும், இந்த ஆட்டத்தில் விராட் கோலி மொத்தம் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 7 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

சாதனை படைப்பதில் புதிய எல்லைகள் தொட்ட விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலியின் ஜனவரி 15 மேஜிக்

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம்(122) அடித்திருந்தார். அதேபோல், 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சோதனை போட்டியில் 153 ரன்களும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104 ரன்களும் விராட் கோலி எடுத்திருந்தார். அதேபோல், ஜனவரி 15ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையான ஆட்டத்தில் இலங்கை அணி 76 ஓட்டங்களில் ஆட்டம் இழந்ததால் இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டத்தை (317) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

மேலும், ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 96 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டு அணிக்கு எதிராக மற்றொரு நாட்டு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச வெற்றி இதுவாகும். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 95 வெற்றிகளை பதிவு செய்து 2வது இடத்தில் உள்ளது. இதேபோல், டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள 19 வெற்றியும் ஒரு நாட்டு அணிக்கு எதிராக மற்றொரு நாட்டு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச வெற்றியாகும். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »