Press "Enter" to skip to content

சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.

இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. முக்கியமான நாட்களில் கூட்டு வழிபாடு செய்வது அதற்கொரு சான்று.

கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதில்லை என்பதற்கான பதில் பைபிளில் உள்ளது.

பைபிளின் ‘புதிய ஏற்பாட்டின்’ படி, யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் விருத்தசேதனம் பற்றிய எதிரெதிரான கருத்து கி.பி 50இல் ஏற்பட்டது.  இந்த விஷயத்தில் புனித பௌலுக்கும் புனித பீட்டருக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்தது.

உருகுவே கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மதத் தத்துவப் பேராசிரியரான மாகியல் பாஸ்டோரினோ பிபிசி முண்டோ சேவையிடம் பேசினார். அப்போது அவர், “இது தேவாலயத்தின் முதல் சர்ச்சையாக இருந்தது,” என்றார்.

புனித பௌலுக்கு அதுவரை புனிதர் அந்தஸ்து வழங்கப்படவில்லை, அவர் தர்சஸ் பால் என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டார்.

பௌல் ஆரம்பத்தில் ஒரு பரிசேயராக இருந்தார், அதாவது ஹஸ்ரத் மூசாவின் (மோசஸ்) ஷரியத் (சட்டம்) சட்டவாதியாக இருந்தார் மற்றும் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்களைத் துன்புறுத்தவும் செய்தார்.

ஆனால் பைபிளின் படி, அவர் மதம் மாறி, இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பினார். கலீல் அல்லது அல்-ஜலீல் நகரத்தைச் சேர்ந்த பீட்டர், இயேசு கிறிஸ்துவை போன்ற ஒரு யூத கிறிஸ்தவர், அவர் நாசரேத் அல்லது அல்-நசிரா நகரத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் விருத்தசேதனம் செய்யப்பட்டார்.

அந்த நேரம் வரை, யூத மதம் ஒரே கடவுளை வணங்குவதைப் போதித்த ஒரே மதம், அதே நேரத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் எகிப்தியர்கள் பல கடவுள்களை நம்பினர்.

கடவுள் இப்ராகிமிடம் (ஆபிரகாமிடம்) கூறினார், “உங்களில் ஒவ்வோர் ஆணுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று எனக்கும் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்,” என்பது யூதர்களின் நம்பிக்கை. யூதர்கள் தவிர, இஸ்லாமியர்கள்கூட இன்று வரை இந்தச் சடங்கைப் பின்பற்றுகிறார்கள்.

சுன்னத் போன்ற சடங்கைக் கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

விருத்தசேதனத்தின் வரலாறு

ஆண்களின் பிறப்புறுப்பில் இருந்து நுனித்தோலை அகற்றும் சடங்கு விருத்தசேதனம் என்று அழைக்கப்படுகிறது. இது மதங்கள் உருவாவதற்கும் முன்பே தொடங்கியது.

இதுவே உலகின் மிகப் பழைமையான அறுவை சிகிச்சை. இதைப் பற்றி விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் அஹ்மத் அல் சலீமின் ‘ஆன் இல்லஸ்ட்ரேட்டட் கைடு டு பீடியாட்ரிக் யூரோலஜி’ புத்தகத்தின்படி, இது 15,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

சுத்திகரிப்பு முதல் வயதுக்கு வரும் சடங்குகள் வரை பல்வேறு காரணங்களுக்காக எத்தனை சமூகங்கள் விருத்தசேதனத்தைத் தொடர்ந்து செய்து வந்தன என்பதை அல் சலீம் விளக்குகிறார், இதன் நோக்கம் தங்கள் கடவுளைத் திருப்திப்படுத்துவதும் தங்கள் கலாசார அடையாளத்தை வெளிப்படுத்துவதுமாகும்.

“சுகாதாரம் முதல் உணவு, உடலுறவு மற்றும் அரசியல் வரை அனைத்தையும் மதம் ஆட்சி செய்தது ஒரு காலம். ஒரு நாகரிகத்தில் பிறக்கும் அனைத்தையும் போலவே, மத அமைப்பும் உடன் பிறந்தது, பண்டைய காலங்களில் அவற்றைப் பிரிப்பது கடினம்,” என்கிறார் மாகியல் பாஸ்டோரினோ.

“சுத்தம் பற்றிய சில வழிமுறைகளை சட்டம் இயற்ற வேண்டியிருந்தபோது, ​​அதற்கு மதம் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் சட்டம் என்றால், கடவுளின் சட்டம், வேறு எந்த சட்டமும் இல்லை.”

யூத மதத்தில் இந்த யோசனை நிராகரிக்கப்படவில்லை, ஆனால் அது சற்று வேறுபடுகிறது.

ரபி டேனியல் டோலென்ஸ்கி, “மதக் கண்ணோட்டத்தில் இல்லாமல் சுகாதாரம் கருதி இது பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது ஒரு மதக் காரணத்திற்காகத் தொடங்கியதா அல்லது சுகாதார அடிப்படையில் தொடங்கியதா என்பது நமக்குத் தெரியாவிட்டாலும்கூட, சுகாதாரத்திற்கும் இந்தச் சடங்குக்கும் மறுக்க முடியாத தொடர்பு உள்ளது,” என்று கூறுகிறார்.

பண்டைய காலங்களில், சுமேரிய மற்றும் செமிடிக் சமூகங்களில் விருத்தசேதனம் நடைமுறையில் இருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் திட்டத்தின் 2007 அறிக்கையின்படி, இந்த கலாசாரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள மாயா மற்றும் ஆஸ்டிக் சமூகங்களிலும் இது நடைமுறையில் இருந்துள்ளது தெரிகிறது.

ஆனால் இந்தச் சடங்கு பரவலாக இருந்தபோதிலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சுன்னத் போன்ற சடங்கைக் கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பண்டைய கிரேக்க கலாசாரத்தில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் ஆணின் நிர்வாணம் மிகவும் விரும்பப்பட்டது. அந்தச் சமூகத்தில், பிறப்புறுப்பு தோல், அழகின் சின்னமாகக் கருதப்பட்டதால் விருத்தசேதனம் விரும்பப்படவில்லை.

அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசின் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசின் இதழில், 2001ஆம் ஆண்டு புல்லட்டின் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசினுக்கான கட்டுரையில், ஃபிரடெரிக் எம். ஹோட்ஜஸ்,  “நீண்ட மற்றும் படிப்படியாகக் குறுகலான தோலை விரும்புவது, கலாசார அடையாளம், ஒழுக்கம், ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறைகள், நல்லொழுக்கம், அழகு மற்றும் ஆரோக்கியத்தின் நாட்டம் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விருத்தசேதனம் செய்யப்படாத பிறப்புறுப்பின் சவ்வு சிறியதாக இருந்தாலோ, முழு பிறப்புறுப்பையும் மறைக்கவில்லை என்றாலோ, அது ஒரு குறையாகப் பார்க்கப்பட்டது.

கனடாவின் மெக்ஆசிரியர் டிவினிடி கல்லூரியின் புதிய ஏற்பாட்டின் பேராசிரியை சிந்தியா லாங் வெஸ்ட்ஃபால் தனது ‘பௌல் அண்ட் ஜெண்டர்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “ஹெலனிஸ்டிக் காலத்தில் யூதர்கள் நடைமுறையில் உள்ள கலாசாரத்திற்கு இணங்க விரும்பியதால் விருத்தசேதனம் செய்யும் பழக்கம் யூதர்களுக்கு ஒரு பிரச்னையாக மாறியது.”

“ஒரு காலத்தில் விருத்தசேதனம் செய்வது சட்டவிரோதமாகக்கூட அறிவிக்கப்பட்டது. “

சுன்னத் போன்ற சடங்கைக் கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

புனித பௌல் மற்றும் புனித பீட்டர் இடையே இருந்த கருத்து வேற்றுமை

யூதர்கள்  மதப் பிரசாரம் செய்து பிறரை மதம் மாற்றவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய போதனைகளை முடிந்தவரை பரப்பும்படி தம்மைப் பின்பற்றுபவர்களைக் கேட்டுக் கொண்டார்.

பௌல், தனது இளமையின் அனேக காலத்தை ஜெருசலேமுக்கு வந்து தனது குழந்தைப் பருவத்தை கிரேக்கர்களிடையே கழித்தவர். இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு முன்னணி பிரசாரகர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இப்போது இஸ்ரேல், லெபனான், சிரியா, துருக்கி, கிரீஸ் மற்றும் எகிப்தாக இருக்கும் அலெக்சாண்டரின் பேரரசின் பகுதிகளுக்குச் சென்றார். யூதருக்கு எதிரானவர்களிடையே  இயேசு கிறிஸ்துவின் செய்தியைப் பரப்பினார்.

பேராசிரியர் சிந்தியா லாங் வெஸ்ட்ஃபால் கூறுகையில், யூதர் அல்லாதவர்களைப் பொருத்தவரை,  விருத்தசேதனம் செய்வது பாலின உறுப்பை நசுக்கி அழிப்பதைப் போன்றது. எனவே கிரேக்க-ரோமானிய பகுதியில் விருத்தசேதனம் செய்வது ஒரு பெரிய களங்கமாகப் பார்க்கப்பட்டது.  மேலும் இது வயதுக்கு வரப்போகும் ஆண்களுக்கு வலி ஏற்படுத்தும்,” என்று விளக்குகிறார்.

பௌல் தனது போதனையில், மக்கள் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார், மாறாக இரட்சிப்புக்கு விசுவாசம் மட்டுமே அவசியம் என்று கூறினார்.

அவர் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், “நான் எல்லா தேவாலயங்களிலும் இந்தச் சடங்கின் அடிப்படையை நிறுவுகிறேன், யாராவது விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தால், அதை மறைக்க வேண்டாம். எவராவது விருத்தசேதனம் செய்யாதவராக இருந்தால், அவர் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் இருக்கட்டும். இதைச் செய்து கொள்வதற்கும் கொள்ளாததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மைகில் பாஸ்டாரினோ, “தர்சஸ் பௌல் ஒரு யூதர். அவர் ஒரு ரோமன் (ரோம் தலைநகர், இத்தாலி) குடிமகன். அவருடைய கலாசாரம் கிரேக்கம். அவர் உயர் கல்வி கற்றவர். யூத, கிரேக்கம் மற்றும் ரோமன் என மூன்று கலாசாரங்களிலும் சம அதிகாரம் பெற்றவர். அவற்றை  மொழிபெயர்க்கவும் அறிந்திருந்தார்,” என்று குறிப்பிடுகிறார்.

பௌல், கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில், விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்ட மோசேயின் சட்டத்தைக் குறிப்பிட்டு, “இயேசு நம்மை சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தார்” என்று கூறினார்.

ஆனால் மற்ற ஆதரவாளர்கள் அவருடைய கருத்தை ஏற்கவில்லை.

கிறிஸ்தவ பைபிளில் உள்ள தனது கடிதத்தில், “பல கலகக்காரர்கள், இழிவானவர்கள் மற்றும் துரோகிகள் உள்ளனர், குறிப்பாக விருத்தசேதனத்தை ஆதரிப்பவர்கள். நீங்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும்,” என்று பௌல் எழுதியுள்ளார்.

பௌலின் கூற்றுப்படி, பீட்டர் யூதர்கள் அல்லாதவர்களுடன் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் சீடர் ஜேம்ஸ் (ஜேக்கப்) இன் ஒரு பிரதிநிதிக் குழு அந்நகரத்திற்கு வந்தபோது, ​​அவர் “விருத்தசேதனத்தின் ஆதரவாளர்களுக்கு பயந்ததால்” அவர்களிடமிருந்து தனியாகப் பிரியத் தொடங்கினார்.

“இந்தக் கண்டிக்கத்தக்க மனப்பான்மைக்காக நான் அவரைக் கண்டித்தேன்” என்று கலாத்தியர்களிடம் கூறினார்.

“அனைவருக்கும் முன்னிலையில் நான் பீட்டரிடம், ‘யூதரான நீங்கள் யூதரல்லாதது போல் வாழ்கிறீர்கள் என்றால், யூதர்கள் அல்லாதவர்களை யூத மதத்தைப் பின்பற்றும்படி ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்”, என்று அவர் கூறுகிறார்.

சுன்னத் போன்ற சடங்கைக் கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஒருமித்த கருத்து உருவான போது..

‘புதிய ஏற்பாட்டின்’ படி, இந்த பாரம்பரியத்தையும் இயேசுவின் சட்டத்தையும் பின்பற்றும் சில யூத கிறிஸ்தவர்கள் கிரேக்க நகரமான அந்தியோக்கிற்கு சென்று, ஆரம்பகால கிறிஸ்தவத்தில் ஈர்க்கப்பட்ட யூதர் அல்லாதவர்களிடம், அவர்கள் விருத்தசேதனம் செய்யாவிட்டால், அவர்களுக்கு முக்தி கிட்டாது என்று கூறினார்கள்.

எனவே பௌல் எருசலேமுக்கு திரும்பினார், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எருசலேம் கவுன்சில் என்ற சீடர்களின் கூட்டம் இருந்தது.

அங்கு பௌல் யூத ராஜ்ஜியத்துக்கு  வெளியே கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கூறி எச்சரித்தார்.  அவரது கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

சீடர் ஜேம்ஸ் ஆரம்பத்தில் இதை எதிர்த்தார் ஆனால் பின்னர் ஆதரவாளராக மாறினார், “யூதர் அல்லாதவர்கள் கடவுளிடம் வருவதைத் தடுக்கக்கூடாது,” என்று கூறினார்.

பீட்டரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். “நம்மால் அல்லது நம் முன்னோர்களால் தாங்க முடியாத ஒரு பாரத்தை அந்த விசுவாசிகளின் கழுத்தில் போட்டு கடவுளை ஏன் கோபப்படுத்த வேண்டும்? இது நடக்காது,” என்றார்.

இதையடுத்து, சீடர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தகராறு முற்றியது. விக்கிரக வழிபாட்டாளர்களிடையே பௌல் தொடர்ந்து மதத்தைப் போதித்தார் என்றும், பீட்டரும் ஜேம்ஸும் யூதர்களுக்கு மதத்தைப் போதித்தார்கள் என்றும் பாஸ்டோரினோ விளக்குகிறார்.

பைபிளின் படி, பின்பற்றுபவர்கள் அந்தியோக், எகிப்து, சிரியா மற்றும் சலிசியா (இன்றைய துருக்கி) பகுதிகளில் இருந்த யூதரல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள், அவர்கள் சிலை வழிபாடு, ரத்தம், கழுத்தை நெரித்து விலங்குகள் பலி போன்றவற்றைத் தவிர வேறு எதற்கும் எந்தத் தடையும் இல்லை என்று முடிவு செய்ததாகக் கூறினர்.

இந்தக் கடிதம் அந்தியோக்கை அடைந்ததும், விசுவாசிகள் அதை வாசித்து, இனி விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை என்று மகிழ்ச்சியடைந்தனர்.

பேராசிரியர் சிந்தியா வெஸ்ட்ஃபால், பௌல் யூதரல்லாவதரிடையே ஒரு கதாநாயகனாக மாறினார் என்றும் அவர் இஞ்சில் (யூத மத புத்தகம்) போதனைகளைப் பரப்புவதற்கு இருந்த ஒரு பெரிய தடையை அகற்றினார் என்றும் கூறுகிறார்.

சுன்னத் போன்ற சடங்கைக் கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கிறிஸ்தவர்களும் இதைப் பின்பற்றுகிறார்கள்

கிறிஸ்தவ திருச்சபை மோசஸின் சட்டத்தின் கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், ஆப்பிரிக்காவில் விருத்தசேதனம் ஒரு சடங்காக இருக்கும் பகுதிகள் உள்ளன. எகிப்தில் உள்ள கிபதி கிறிஸ்தவர்கள், எத்தியோப்பியாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் கென்யாவில் உள்ள நோமியா தேவாலயங்கள் இதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

உலகில் கிறிஸ்தவ கலாசாரத்தைக் கடைபிடிக்கும் ஐந்து நாடுகளில், வேறு காரணங்களுக்காக சிறுவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது.

அதில் ஒன்று அமெரிக்கா. 1870ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் நிறுவன உறுப்பினரான மருத்துவர் லூயிஸ் சாயர், சில நோய்களைத் தடுப்பதற்காக அல்லது சிகிச்சைக்காக விருத்தசேதனம் செய்யத் தொடங்கினார்.

அவரது விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் விருத்தசேதனத்திற்கான ஆதரவின் காரணமாக, கிட்டத்தட்ட அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டதாக அஹமது அல்-சலீம் கூறுகிறார்.

அமெரிக்காவிலிருந்து இந்தப் பாரம்பரியம் கனடா மற்றும் பிரிட்டனுக்கும் பரவியது. அதன் பிறகு அது நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் பரவியது.

பின்னர் பல நாடுகளில் நன்மைகள் மற்றும் தீங்குகள் குறித்த அறிவியல் விவாதங்கள் காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளின் விருத்தசேதனம் நிறுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் பெரும்பாலான ஆண்கள் இன்னும் விருத்தசேதனம் செய்யப்படுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »