Press "Enter" to skip to content

ஒரே நாடு ஒரே தேர்தல் – ஆளுங்கட்சியாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்போது ஆதரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Twitter/AIADMKOfficial

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகப் பதவி வகித்த போது எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் நிலைப்பாடு

மத்திய சட்ட ஆணையம் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தன. இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்குமாறு, ‘அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்’ எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தது சட்ட ஆணையம். 

அந்தக் கடிதத்தைக் காட்டி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 16ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பதாகக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

அதிமுக ஏன் ஆதரிக்கிறது?

சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பாக அனுப்பியுள்ள பதில் கடிதம் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழிடம் பேசினார். 

“ஒரு 5 ஆண்டு காலகட்டத்தில் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் என பல தேர்தல்கள் நடக்கின்றன. இதனால் கால விரயம் ஏற்படுவது மட்டுமின்றி, மக்களின் வரிப்பணமும் செலவாகிறது. 

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

மேலும் தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளினால், மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பல நேரங்களில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்,” என்று தெரிவித்தார் அவர்.

2018ஆம் ஆண்டு இருந்த நிலைப்பாட்டை ஏன் மாற்றியது என்ற கேள்விக்கு, “அப்போதைய சூழ்நிலையில் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம்,” என்று வைகைச்செல்வன் கூறினார். 

அதிமுகவை விமர்சிக்கும் காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Twitter/AIADMKOfficial

“எப்படியாவது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட மாட்டோமா என்ற நப்பாசையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது,” என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அதிமுக ஆட்சியின் போது அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

“இத்திட்டத்தின் மூலம் அதிமுக அரசின் பதவிக்காலம் முன்கூட்டியே முடியும் என்பதால், அதிமுக இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காது என்று எடப்பாடி பழனிசாமி சட்ட ஆணையத்திற்கு கடிதம் மூலம் எழுதி இருந்தார். ஆனால் ஆட்சியில் இப்போது இல்லாத நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு ஆட்சிக்கு வர முடியும் என்ற நப்பாசையில் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவர்களின் எண்ணம் துளியும் ஈடேறாது,” என்று அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அட்டவணைக்கு பத்துக்கு ஆபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

சட்ட ஆணையம் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களும் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பிபிசி தமிழிடம் பேசிய போது, “அதிமுகவின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முரணாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார்,” என்று கூறினார்.

சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை தளர்த்தும் வகையில் அட்டவணை பத்தில் மாற்றங்களை கொண்டு வரும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

இது நடைமுறைக்கு வந்தால், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ‘தொங்கு பாராளுமன்றம்’ அமையும் போது எளிதாக மாநிலக் கட்சி உறுப்பினர்களை தங்கள் அணிக்கு வளைத்து போடும் வசதி இதில் இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும், என்று அவர் தெரிவித்தார். 

திமுகவின் நிலைப்பாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக திமுகவின் நிலைப்பாடு குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த கட்சி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிந்து பேசினாரா, தெரியாமல் பேசினாரா எனத் தெரியவில்லை.

அதிமுகவுக்கு இப்போது இருக்கும் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்க மாட்டார்கள்,” எனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »