Press "Enter" to skip to content

“விமானம் ஒரு வெடிகுண்டு போல வெடித்தது” – நேபாள விமான விபத்தை நேரில் கண்ட சாட்சிகள்

பட மூலாதாரம், ASHOK DAHAL/BBC

நேபாளத்தின் போக்கராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்துக்கு கடைசி நேரத்தில் ‘தரையிறங்குவதற்கான ஓடுதளத்தை மாற்றியது காரணமா என்ற கேள்வி நிலவுகிறது.

பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணித்த விமானம், நேபாள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விபத்திற்குள்ளானது. அதில் 68 பேர் உயிரிழந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில்
பயணித்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளது.

பிபிசி நேபாளி சேவையின் செய்திப்படி, இதுவரை நடந்த விசாரணைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தரையிறங்கும் முன் விமான ஓடுதளத்தை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது குறித்துப் பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

விமான நிலைய அதிகாரி ஒருவர், போக்கராவில் விழுந்து நொறுங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து 24.5 கிமீ தொலைவு வரை நெருங்கிய நேரத்தில் தரையிறங்கும் தளத்தை மாற்றியது எனக் கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கேப்டன் கமல் கேசி தலைமையில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை விமானம் மற்றும் அது பறப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

ஆனால், திடீரென விமானத்தில் இருந்த விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம், “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

“விமானிக்கு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரினார்,” என்று அதிகாரி கூறினார்.

‘விமானம் கீழே விழுந்தது’

தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்ததும், விமானம் ‘விசிபிலிட்டி ஸ்பேஸில்’ வந்துவிட்டது. அதாவது, கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும் பகுதிக்கு வானில் நெருங்கி வந்துவிட்டது. இதன் அடிப்படையில் விமான ஓடுதளத்தில் 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஆனால், “திருப்பத்தின்போது விமானத்தின் தரையிறங்கும் கியர் திறக்கப்பட்டது. அப்போது விமானம் ‘ஸ்தம்பித்து’ கீழே விழத் தொடங்கியது,” என்று பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறிப் பேசிய விமான நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்து சார்ந்த பதங்களில் ‘கடை’ என்பதற்கு விமானம் அதன் உயரத்தைத் தக்கவைக்கத் தவறியதைக் குறிக்கிறது.

அந்த அதிகாரி பேசும்போது, “கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து விமானம் தெளிவாகத் தெரிந்தது,” என்றார்.

போக்கரா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரியும், “ஞாயிற்றுக்கிழமை இங்கு வானிலை தெளிவாக இருந்ததாகவும் அனைத்து விமானங்களும் வழக்கமானவையாக இருந்ததாகவும்” கூறினார்.

நேபாள விமான விபத்து

பட மூலாதாரம், KRISHNA MANI VIRAL

நேரில் கண்ட சாட்சிகள் என்ன சொல்கிறார்கள்?

பிபிசியின் நேபாள சேவையுடனான உரையாடலில், சில நேரில் கண்ட சாட்சிகள், தரையிறங்குவதற்கு முன்பாக விமானம் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறினார்கள்.

விபத்து குறித்த கூடுதல் தகவலுக்காக விபத்தை நேரில் கண்ட பல சாட்சிகளிடம் பிபிசி பேசியது. அவர்களுடைய கூற்றுப்படி, இவையனைத்தும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு திடீரென நடந்துவிட்டன.

இதுகுறித்து 43 வயதான கமலா குருங் பேசியபோது, “ என் கண் முன்னே விமானம் எரிவதைப் பார்த்தேன்,” என்றார்.

கமலா குருங், கரிபடன் பகுதியில் வசிப்பவர். அங்குதான் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. விமானத்தின் ஜன்னல்கள், தேநீர் கோப்பைகள், எரிந்த பொருட்கள் அங்கு சிதறிக் கிடக்கின்றன.

நேபாள விமான விபத்து

பட மூலாதாரம், Empics

‘விமானம் வெடிகுண்டு போல வெடித்தது’

விபத்தை நேரில் பார்த்த குழந்தைகள் பயந்து வீட்டிற்குள் ஓடியதாக கமலா கூறுகிறார்.

“காலை 11:30 வரை அனைத்தும் சாதாரணமாக இருந்தது. நான் வழக்கம் போல மொட்டை மாடியில் குழந்தைகளுடன் சூரியக் குளியல் செய்தேன். வீட்டிலிருந்து விமானங்கள் வந்து செல்லும் சத்தம் வழக்கமாகக் கேட்கக்கூடியது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் விமானம் மேலே செல்லும் சத்தம் வழக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தது. நான் பார்த்த நேரத்தில், விமானம் கீழே விழுந்துவிட்டது,” என்று கமலா குருங் கூறுகிறார்.

இதுபோன்ற பயங்கரமான விமான விபத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும் கமலா கூறினார்.

“விமான கீழே விழுந்தபோது, மிகப்பெரிய சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு, சிறிது நேரத்திற்குக் கருமேகம் மட்டுமே தெரிந்தது. அதைப் பார்த்த போது, தீப்பிழம்புகள் எழத் தொடங்கின,” என்றார் அவர்.

அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சில உயரமான வீடுகள் உள்ளன. மற்றொரு உள்ளூர்வாசியான பால் பகதூர் குருங் பேசியபோது, “விமானம் மிகவும் தாழ்வாக வந்தது. பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டு போல வெடித்துச் சிதறியது. சுற்றியுள்ள காட்டுப்பகுதியும் தீப்பிடித்து எரிந்தது,” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் போக்கராவில் விபத்திற்குள்ளான செய்தி பரவியது.

குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமான பாகங்கள்

புறப்படவிருந்த விமானம்

போக்கராவில் உள்ள சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. கிழக்கு, மேற்கு திசைகளில் இருந்து விமானங்கள் அங்கு தரையிறங்குகின்றன.

விமானங்கள் கிழக்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 30 மற்றும் மேற்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 12ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்தில் பலியான விமானி ‘விஷுவல் ஃப்ளைட் ரூல்ஸ்’ நுட்பத்தைப் பயன்படுத்தித் தரையிறங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

விஆர்எஃப் தொழில்நுட்பம், தெளிவான வானிலையில் விமானத்தைப் பறக்க வைக்கவும் தரையிறக்கவும் விமானிகளால் பயன்படுத்தப்படுகிறது.

“விமானம் முதலில் தொடர்புகொண்டபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதியளித்தது. ஆனால், 24.5 கி.மீட்டருக்கு அருகில் வந்த பிறகு, விமானம் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரியது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாள விமான விபத்து

விமானத்தின் விமானி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன், நான் மேற்கிலிருந்து தரையிறங்குகிறேன்,” என்று கூறியுள்ளார்.

புதிய விமான நிலையத்தின் தொழில்நுட்பம் தான் விபத்திற்குக் காரணமா என்ற கேள்விக்கு விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரி, “இந்த நேரத்தில் எதையும் கூறுவது கடினம். விரிவான விசாரணைக்குப் பிறகே விபத்திற்கான காரணம் தெரிய வரும்,” என்றார்.

போக்கரா விமான விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய 5 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. இதோடு, விமான விபத்துகளைத் தடுக்க, அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் விமானம் கிளம்புவதற்கு முன்பாக தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்த பிறகு, நேபாளில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான எண்களை வெளியிட்டுள்ளது:

  • காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021
  • போக்கரா : லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »