Press "Enter" to skip to content

உங்கள் வருவாயை பாதிக்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நிதி சுயசார்பு என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அதில், நம்முடைய நிதித்தேவையைச் சமாளிக்க உரிய நேரத்தில் போதுமான பணம் கையில் வைத்திருப்பதும் ஒன்று.

நாம் செய்யும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டியது அவசியம். நம்முடைய முதலீட்டின் செயல்பாட்டை கணக்கிடுவதற்கான முக்கிய அளவீடு நம்முடைய நோக்கத்துடன் அவை ஒத்துப் போகிறதா இல்லையா என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பதே.

இது கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதைப் புரிந்துகொண்டு பொருத்தமான முதலீட்டை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.

இது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

உதாரணமாக, 2030ஆம் ஆண்டில் 10 லட்ச ரூபாய் கையில் இருக்க வேண்டும் என்பது உங்களது நிதி இலக்கு என வைத்துக்கொள்வோம். அதை அடைய 12 சதவிகித வட்டி தரும் முதலீட்டில் மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் மாதந்தோறும் இந்தத் தொகையை முதலீடு செய்தாலும், சில காரணங்களால் 10 லட்சத்தைவிட குறைவான பணம் உங்கள் கையில் இருக்கவும் வாய்ப்புள்ளது.

இதற்கு காரணமான மூன்று விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

சந்தை அபாயம்

சந்தை அபாயம்

பட மூலாதாரம், Getty Images

எந்த முதலீட்டிலும் அபாயம் இல்லாமல் இல்லை. எனவே நாம் செய்யும் அனைத்து முதலீட்டிலும் குறிப்பிட்ட வகையில் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலே நாம் கண்ட உதாரணத்தில், 12 சதவிகிதம் வட்டி தரும் முதலீடு குறித்து பார்த்தோம். ஆனால், அதே அளவிலான வட்டி தொடர்ந்து கிடைக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

வட்டி விகிதம் அடிக்கடி மாறக்கூடியது. உதாரணமாக, எல்ஐசி கொள்கையில் முன்பு கிடைத்த வருமானம் தற்போது கிடைப்பதில்லை.

முதலீட்டில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிக வருமானம் தரும் முதலீட்டில் அடிப்படையிலேயே அதிக ஆபத்துகள் இருக்கும்.

ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்ட் அதிக வருவாய் தரக்கூடியதாக இருந்தாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன. இங்கு ஆபத்து என்பது உரிய நேரத்தில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத போது நம்முடைய இலக்கை அடைய முடியாததைக் குறிக்கிறது.

இது போன்ற நிலையைச் சமாளிக்க குறைந்த ஆபத்துகள் உள்ள முதலீட்டில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் மேலே கண்ட உதாரணத்தின்படி பார்த்தால் 2028ஆம் ஆண்டுவரை ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துவிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆபத்துகள் குறைந்த முதலீட்டில் முதலீடு செய்யலாம்.

இவ்வாறு செய்யும் போது, 2028-2030க்கு மத்தியில் சந்தை மதிப்பு குறைவாக இருந்தாலும் நமக்குத் தேவையான காலத்தில் சந்தை மதிப்பு உயர வாய்ப்புள்ளது.

நம்முடைய நிதி இலக்கின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே டெப்ட் ஃபண்ட் போன்ற ஆபத்துகள் குறைந்த முதலீட்டிற்கு மாறிவிட வேண்டும் என நிதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதற்கு ஈக்விட்டியில் உள்ள முதலீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று அர்த்தமில்லை. அவ்வாறு செய்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் வருமான வரி இரண்டையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

நமக்கு பணம் தேவைப்படும் காலத்திற்கு மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு முன்பே போதுமான பணம் சேர்ந்துவிட்டால் நம் முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ஏனெனில், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால் அதிலிருந்து மீள வழக்கமாக ஆறு மாதங்கள் காலம் எடுக்கும்.

2020ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடி காலத்தின் போது பங்குச்சந்தை ஆறு மாதங்களில் மீண்டது. 2008 பொருளாதார மந்தநிலையின் போது பங்குச்சந்தை மீள 11 மாதங்கள் எடுத்தது.

தேவையான நேரத்திற்கு முன்பே பணம் எடுத்தால், நம் வருமான வரி அடுக்குகளின்படி வங்கிக் கணக்கில் உள்ள தொகைக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது, 2030ஆம் ஆண்டு தேவைப்படும் பணத்தை எடுத்து 2028ஆம் ஆண்டிலேயே வங்கிக்கணக்கில் போட்டு வைத்தால் அந்தத் தொகைக்கு நம் வருமான வரி அடுக்கிற்கு ஏற்ப நாம் வரி செலுத்த வேண்டும்.

நீண்டகால மூலதன ஆதாய வரியும் வருமான வரியும் அதிகமாக இல்லாததை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்த இரண்டில் எந்த வரி குறைவாக உள்ளதோ அதற்கேற்ப நம் முதலீட்டை நிர்வகிக்கலாம்.

உங்கள் வருமானவரி அடுக்கு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் முதலீட்டை திரும்பப் பெற்று பணத்தை வங்கிக்கணக்கில் வைத்துக்கொள்வது நல்லது.

30 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானவரி அடுக்கு கொண்டவர்கள் தங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பணவீக்கம்

பணவீக்கம்

பட மூலாதாரம், Getty Images

பணவீக்கம் என்பது நம்முடைய வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கக் கூடியது. நிதி இலக்குகளை நிர்ணயிக்கும் போதே அதிகபட்ச பணவீக்க அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, தற்போதைய பணவீக்க அளவான 6 சதவிகிதம், 8 சதவிகிதமாக அதிகரித்தால் நம்முடைய தற்போதைய முதலீடு போதுமானதாக இருக்காது. எனவே நம்முடைய முதலீட்டு தொகையை அதிகரிக்க ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் நாம் மேலே கண்ட உதாரணப்படி, பணவீக்கம் அதிகரித்தால் நம்முடைய தேவை 10 லட்சத்திலிருந்து 13 லட்சமாக அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் 8,000 ரூபாய்க்குப் பதிலாக 10,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அரசுக்குச் செலுத்தும் வரி

பங்குச்சந்தை முதலீடுகளுக்கு தற்போது 10 சதவிகித நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட உதாரணப்படி, 7 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 8,000 ரூபாய் முதலீடு செய்தால் மொத்த அசல் தொகையாக ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரமும், அதற்கு கிடைத்த வட்டியாக மூன்று லட்சத்து எண்பதாயிரமும் உங்களிடம் இருக்கும்.

இந்த வட்டித்தொகையில் இருந்து ஒரு லட்ச ரூபாய் கழிக்கப்பட்டு, மீதமுள்ள பணத்திற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அதாவது இந்த முதலீட்டிற்கு 28,000 ரூபாய் நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

இந்த வரியைக் கழித்த பிறகும் கையில் கிடைக்கும் தொகை 10 லட்சமாக இருந்தால் நம்முடைய நிதி இலக்கை நாம் அடைந்துவிட்டோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »