Press "Enter" to skip to content

“கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா உதவும்” என்று கூறிய ஜெய்சங்கர் – இலங்கை மீண்டு வர உதவுமா?

பட மூலாதாரம், Jaishankar Twitter

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்க சான்றிதழை தாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரியுடன் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

”ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்,” என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நடவடிக்கையின் ஊடாக, இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது முக்கியமானது என்று தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை இயலுமான வரை விரைவில் நடத்த வேண்டும் எனவும் தான் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது முக்கியம் எனவும் அவர் கூறினார்.

அதேபோன்று, இந்திய தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் தேவைகள் குறித்தும் ஆராய்வது முக்கியம் என எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனையோர் செய்வார்களென காத்திருக்காது, சரியானதை செய்வோம் - எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் கருத்து

பட மூலாதாரம், Ali Sabry

கடன் மறுசீரமைப்புக்கான இணக்கம்

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா அதற்கான இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டாலர் கடனை பெற்றுக் கொள்வதற்கு, இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் இணக்கம் அவசியமானதாகக் காணப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா இதுவரை தமது இணக்கத்தை வெளியிடவில்லை.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார்.

19ஆம் தேதி மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் உறுதியளித்துள்ளார்.

உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்வாய்ப்புகள், சுகாதாரம் ஆகிய துறைகள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியைத் துரிதமாக்கும் நோக்குடன், இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

ஏனையோர் செய்வார்களென காத்திருக்காது, சரியானதை செய்வோம் - எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் கருத்து

பட மூலாதாரம், cwc media

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மலையக பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பத்தாயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலைக்காகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

எனவே, மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என செந்தில் தொண்டமான், இந்தியா வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புலமையை மேம்படுத்திக் கொள்வதற்காக இந்தியா ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து ஆராயும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி வழங்கியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

ஏனையோர் செய்வார்களென காத்திருக்காது, சரியானதை செய்வோம் - எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் கருத்து

பட மூலாதாரம், cwc media

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்குத் தேவையான மருத்து வகைகளை இலகு முறையில் கொள்வனவு செய்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2022இல் பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள்

இலங்கை பொருளாதாரரீதியாக வரலாறு காணாத நெருக்கடிகளை சந்தித்த ஆண்டாக 2022ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகியது.

எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருள், எரிவாயு, பால் மா உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் இலங்கையில் கடுமையாக தட்டுப்பாடு கடந்த ஆண்டு நிலவியது.

இலங்கையில் 70ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர், வரிசை யுகத்தை ஏற்படுத்திய ஆண்டாக 2022ஆம் ஆண்டு பதிவாகியது.

இந்த நிலையில், இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு இந்தியா கடந்த ஆண்டு பாரிய உதவிகளை வழங்கியது.

இதன்படி, 2022ஆம் ஆண்டில் மாத்திரம், இந்தியா இலங்கைக்கு சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான கடனுதவியை வழங்கியது.

ஏனையோர் செய்வார்களென காத்திருக்காது, சரியானதை செய்வோம் - எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் கருத்து

பட மூலாதாரம், india high commission sri lanka

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவிகளை இந்தியா வழங்கியது.

அதன் பின்னர், எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவிகளை இந்தியா, இலங்கைக்கு வழங்கியது.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு 1500 அமெரிக்க டாலர் கடனுதவி இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது.

இலங்கையின் அந்நிய செலாவணியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவால் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.

மேலும், எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கப்பட்டதுடன், உர கொள்வனவுக்காக 55 மில்லியன் அமெரிக்க டாலர், இந்தியாவால் வழங்கப்பட்டது.

மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கான உதவிகளை இந்தியா வழக்கம் போல கடந்த ஆண்டும் இலங்கைக்கு வழங்கியது.

ஏனையோர் செய்வார்களென காத்திருக்காது, சரியானதை செய்வோம் - எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் கருத்து

பட மூலாதாரம், india high commission sri lanka

இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்புத்துறையை மேம்படுத்தும் நோக்கில், 500 பேருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இதன்படி, முதற்கட்டமாக 75 பேருந்துகள் கடந்த 8ஆம் தேதி வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், இந்தப் பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இலங்கையின் வடக்கு தொடர் வண்டிமார்க்கத்தை புனரமைக்கும் பணிகள், இந்தியாவின் உதவித் திட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாஹோ முதல் ஓமந்தை வரையான தொடர் வண்டிமார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அதுமாத்திரமன்றி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியில் இலங்கைக்குப் பெருமளவிலான அத்தியாவசிய பொருட்கள் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்படி, தமிழகம் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டு, கப்பல் வழியாக இலங்கைக்கு அந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »