Press "Enter" to skip to content

ஈரோடு இடைத் தேர்தல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், MK STALIN

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவும் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். யுவராஜாவும் போட்டியிட்ட நிலையில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார்.

இந்தச் சூழலில்தான், திருமகன் ஈவெரா மறைவையடுத்து இந்த இடைத்தேர்தலானது நடைபெறுகிறது.

’’பொதுவாக இடைத்தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. மிகப்பெரிய தலைவர்களின் தொகுதியாக அல்லது பாரம்பரியமாக ஒரு கட்சியின் வசமுள்ள தொகுதியாக இருந்தால் மட்டுமே உற்று கவனிக்கப்படும். ஆனால், இது திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தல் முடிவை வைத்து புது பிரசாரத்தை உருவாக்க முடியும் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது’’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் கணிசமான இடங்களை வென்ற திமுகவிற்கு கொங்கு மண்டலம் கைகொடுக்கவில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் மொத்தம் 65 இடங்களை கைப்பற்றிய அதிமுகவிற்கு கொங்கு மண்டலம் பெரிய அளவில் கைகொடுத்திருந்தது. இதையடுத்து, கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்டது. இதை ஒரு கௌரவப் பிரச்னையாக கருதிய திமுக, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் தனிக்கவனம் செலுத்தி பெருவாரியான இடங்களை வென்றது.

தற்போது தேர்தல் நடைபெறும் தொகுதி கொங்கு மண்டலத்தில் உள்ளதால் திமுக நேரடியாக களம் காணுமா அல்லது கூட்டணி கட்சிக்கே மீண்டும் அந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது அரசியல்வட்டாரத்தில் கேள்வியாக இருந்த நிலையில், திமுக கூட்டணியில் அந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸிற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மற்றொரு மகனுக்கு சீட் வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் ஆனால், திமுக தலைமை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட விரும்புவதாகவும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பாஜக தனித்து போட்டியா?

கூட்டணியின் வெற்றியை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை தாங்கள் ஏற்பதாக அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமாகா அறிவித்துவிட்ட நிலையில், தற்போது பாஜகவும் அதிமுகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்குமா என்பதே கேள்வியாக உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் பணிகளை மேற்பார்வையிட 14 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைத்தது.

கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது கூட்டணியாக இருந்த அதிமுக மற்றும் பாஜக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தனித்து போட்டியிட்டன. கொங்கு பகுதியில் அண்மைக்காலமாக தீவிரமாக செயல்பட்டுவரும் தமிழக பாஜகவினர் இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால், தமிழக பாஜகவின் விருப்பம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், தேசிய தலைமைக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கும். அதனடிப்படையிலேயே கூட்டணியா தனித்துப் போட்டியா என்பது முடிவு செய்யப்படும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

”பாஜகவின் கூட்டணி தொடர்பான இறுதிமுடிவுகள் டெல்லியில்தான் எடுக்கப்படுகின்றன. அதிமுக மூலம் நாம் சாதிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று தேசிய தலைமையிடம் ஒரு கணக்கு இருக்கும். அதை வைத்துதான் முடிவு செய்யப்படும். குறிப்பாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டுதான் முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலுக்காக அதிமுக, தாமகா உறவை இழக்க பாஜக தேசிய தலைமை விரும்பாது” என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்துவாரா ஓபிஎஸ்

அதிமுகவில் வெடித்த ஒற்றைத்தலைமை விவகாரத்திற்கு மத்தியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான பொதுக்குழு முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு விசாரனை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ்சின் பங்கு என்னவாக இருக்கும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை அவர் முடக்குவாரா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

“தற்போது வழக்கு விசாரணை முடிந்துவிட்டதால் இடைத்தேர்தலை காரணங்காட்டி எடப்பாடியோ ஓபிஎஸ்ஸோ விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இருவருமே தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி முறையிட்டால் நிச்சயம் சின்னம் முடங்கும். தேர்தல் நடைபெறுவது தன்னுடைய தலைமையின் கீழ் இருக்கும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலம் என்பதால் ஒருவேளை சின்னம் முடங்கினாலும், சேவல் போன்ற சுயேட்சை சின்னம் வாங்கியாவது தன்னுடைய வலிமையைக் காட்ட எடப்பாடி நினைப்பார்’’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

ஒற்றைத்தலைமையாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்தத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்றும் குபேந்திரன் கூறுகிறார்.

ஆனால், யாரை ஓரங்கட்ட வேண்டும், யாரை உடன் வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவை பாஜக இப்போதே எடுக்க விரும்புகிறதா அல்லது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எடுக்க விரும்புகிறதா என்பதைப் பொறுத்துதான் இந்த தேர்தலில் ஓபிஎஸ்ஸின் பங்கு இருக்குமா இல்லையா என்பது தெரியும் என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

“அண்மைக்காலங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். மோதி, அமித் ஷாவின் விரும்பத்தைத்தான் அவர்கள் முடிவாக எடுக்கிறார்கள். எடப்பாடிதான் அதிமுக என்று பாஜக முடிவெடுத்துவிட்டால் சின்னம் முடங்க வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.

அதிமுக சின்னம் முடங்கினால் அதில் பாஜகவுக்கு என்ன லாபம் உள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த குபேந்திரன், “ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடங்கினால் பாஜக தனித்தே களம் காணும். இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் அதிமுகவின் தயவு பாஜகவிற்கு தேவைப்படாது. கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருப்பதாக கூறிக்கொள்ளும் பாஜக ஒருவேளை தனித்து போட்டியிட்டு தனக்கு கிடைக்கும் வாக்குவீதத்தை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் பேரம் பேச பயன்படுத்தலாம். 4 சதவிகிதம்வரை வாக்குவங்கி வைத்திருக்கும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் இந்த முறை அதிகரித்தால் அது பாஜகவிற்கு பலன்தானே. ஆனால், பாஜக தேசிய தலைமையின் திட்டம் என்ன என்பது நமக்குத் தெரியாது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவு கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நிறைய திருப்பங்கள், பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது’’ என்றார்.

காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுக ஆட்சி மீது இருக்கும் திருப்தியையோ அதிருப்தியையோ வெளிப்படுத்துவதற்கான களமாகவே இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படும் என்பதால் இந்த தேர்தலை திமுக மிகுந்த கவனத்துடன் அணுகும் என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »