Press "Enter" to skip to content

ஈரோடு கிழக்கு: பாஜக அலுவலகம் வந்த அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு தலைவர்கள் – கூறியது என்ன?

  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அதிமுகவின் இரு அணிகளும் அறிவித்துள்ள நிலையில், பாஜக நிலை குறித்து அறியவும் சேர்ந்து முடிவெடுக்கவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவின் இரு அணித் தலைவர்களும் தனித்தனியாக பாஜகவின் மாநிலத் தலைமையகம் வந்தனர்.

சனிக்கிழமை பிற்பகல் அதிமுக எடப்பாடி அணி தலைவர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள பாஜக தலைமையகம் வந்து மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஜெயக்குமார்,

”இடைத்தேர்தலில் பாஜகவின் இறுதி முடிவு என்ன என்பதை அவர்களே  அறிவிப்பார்கள். நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.

எடப்பாடி - ஓபிஎஸ்

எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சந்திப்பை முடித்ததும், ஓபிஎஸ் தலையில் அவரது தரப்பினர் பாஜக அலுவலகத்திற்குள்  நுழைந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், கு பா கிருஷ்ணன், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய  ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறினார்.

”நாங்கள் நேரடியாக போட்டியிடப்போவதை ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டார். அதேநேரம், பாஜக கேட்டால், ஆதரவு தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். வாக்காளர்களுக்கு அதிமுக எது என்பதில் குழப்பம் வராது,”என்கிறார்.  

ஓபிஎஸ்  அணியினர் இரண்டு வாய்ப்புகளுக்கும் தயாராக இருப்பது பற்றியும், இபிஎஸ் அணியினர் பாஜக தலைவரை சந்தித்தது குறித்தும் அதிமுகவில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த வைகை செல்வனிடம் பேசினோம்.

”அதிமுக சார்பாக போட்டியிடவேண்டும் என்ற முடிவை ஏற்கனவே நாங்கள் பாஜகவிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள் வெகு விரைவில் இந்த முடிவை அறிவிப்பார்கள்.  95 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு இபிஎஸ் அணிக்குத்தான் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உண்மையான அதரங்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதால், பாஜகவுக்கு உண்மையான அதிமுக யார் என்று தெரியும். எங்களுக்கு அவர்கள் ஆதரவு தரப்போவதில் எந்த மாற்றமும் இல்லை,” என உறுதியாகப் பேசுகிறார் வைகைச்செல்வன்.

பாஜக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தெரிவித்திருந்தோம். ஆனால், பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். பாஜக தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்,” என்றார்.

காங்கிரஸ் நிலை என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார். அது முதல், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி என இரண்டு முகாம்களிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, திமுக அமைச்சர்கள் கே என் நேரு, முத்துசாமி போன்றோர் தொகுதிக்குள் தேர்தல் பணியையே தொடங்கிவிட்டனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் யார் இங்கே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  தான் இந்த முறை போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். அதேநேரம், தனது இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பு தரவேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தில் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக – பாஜக முகாமில் நிலை என்ன?

அதிமுக - பாஜக சந்திப்பு

ஆனால்,

அதிமுக – பாஜக முகாமில் இன்னும் நிலைமை தெளிவாகவில்லை. இந்த இடைத்தேர்தல் பாஜக தன் பலத்தை சோதித்துப் பார்க்கும் தேர்தலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதிமுகவின் இரு அணிகளும் இடைத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அவரது அணி)  போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரவு தரப்போவதாகவும் கூறினார்.

இரட்டை இலைக்கு என்ன ஆகும்?

இரட்டை இலை

பட மூலாதாரம், AIADMK, FACEBOOK

 ”இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆதரிப்போம். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன். தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். பி படிவத்தில் கையெழுத்திட தயாராகவே இருக்கிறேன்.  

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியும் இந்த தேர்தலில் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால், இடைத்தேர்தலில், விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்காக மூன்று  பறக்கும்படை மற்றும் மூன்று கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »