Press "Enter" to skip to content

சௌதி புரோ லீக்: முதல் போட்டியிலேயே ரொனால்டோவை திணற வைத்த எட்டிஃபாக் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

சௌதி புரோ லீக்கில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது ஆட்டம் எப்படி இருந்தது? தன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா?

கால்பந்து வரலாற்றில் பெரும் ஊதியத்துடன் சௌதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அங்கு நடைபெறும் உள்நாட்டு கால்பந்து தொடரில் முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

சௌதி புரோ லீக்கில் அல் நாசர் – எட்டிஃபாக் அணிகளுக்கு இடையிலான அந்த ஆட்டம், ரியாத் நகரில் கிங் சவுத் யுனிவெர்சிட்டி மைதானத்தில் நடைபெற்றது.

ரொனால்டோவின் அல்-நாசர் அணியின் சீருடை போல ரசிகர்கள் ஆடை அணிந்து திரண்டிருந்ததால், மைதானமே மஞ்சள் கடல் போலக் காட்சியளித்தது.

முதல் போட்டியிலேயே, எதிர்பார்க்கப்பட்டபடி அல்-நாசர் அணியை ரொனால்டோ தலைமை தாங்கி வழிநடத்தினார். ரொனால்டோவை முன்னிறுத்தி அல்-நாசர் அணி 4-2-3-1 என்ற வியூகத்தை வகுத்திருந்தது.

ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காகத் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கினார் ரொனால்டோ. 

மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்களும் ரொனால்டோவை உற்றுநோக்கியபடியே இருந்தன. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே அவரிடம் இருந்து கோலை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். 

அணியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ரொனால்டோ தலைமை தாங்கி தாக்குதல் ஆட்டத்தைத் தொடுத்தார். 

அண்மையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிராக ஆல் லெவன் சௌதி லீக் அணி மோதிய காட்சிப் போட்டியில் 2 கோல்களை அடித்து சூப்பர் ஃபார்மில் இருந்த ரொனால்டோ அதை இந்தப் போட்டியிலும் தொடர முற்பட்டார். ஆனால் அவருக்குத் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. 

ரொனால்டோ முன்னின்று தாக்குதல் ஆட்டத்தைத் தொடுத்தாலும் எட்டிஃபாக் சற்றும் அசரவில்லை. ரொனால்டோவின் சவாலை அவர்கள் துணிச்சலாக எதிர்கொண்டனர். இதனால், ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்தில் கோல் ஏதும் விழவில்லை. 

31வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் நடுக்கள வீரரான ஆண்டர்சன் தலிஸ்கா முதல் கோலை அடித்தார். அந்தரத்தில் பறந்து வந்த பந்தை, தலையால் முட்டி அபாரமாக அவர் கோலடித்தார். 

ஆண்டர்சனுக்கு முன்பாக நின்றிருந்த ரொனால்டோவும் பந்தை தலையால் முட்டி கோலடிக்க செய்த முயற்சி  கைகூடவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால், இதுவே சௌதி புரோ லீக்கில் ரொனால்டோவின் முதல் கோலாக அமைந்திருக்கும். 

முதல் கோல் கொடுத்த உற்சாகத்தில் அல்-நாசர் அணி தாக்குதல் ஆட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. ரொனால்டோவிடம் இருந்து முதல் கோலை ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருந்தனர். அதற்கான வாய்ப்பு முதல் பாதி ஆட்டம் முடிய 9 நிமிடங்கள் இருக்கும் போது வந்தது. 

எட்டிஃபாக் அணியின் கோல் கம்பம் அருகே கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை ரொனால்டோ கோலாக்குவார் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பாத்திருந்தனர். ஆனால், அவரோ கோல் கம்பத்திற்கு மேலே பந்தை அடித்து வாய்ப்பை வீணடித்துவிட்டார். 

ரொனால்டோ நல்ல ஃபார்மில் இருக்கும்போது இதுபோன்ற வாய்ப்புகளை எளிதில் கோலாக்கிவிடுவார். ஆனால், இந்த முறை அவர் கோலை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். 

முதல் பாதி ஆட்டத்தில் அல்-நாசர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆண்டர்சன் அடித்த முதல் கோல், ஃப்ரீ கிக் என்று 2 வாய்ப்புகளை ரொனால்டோ தவற விட்டிருந்தார். ரொனால்டோவின் சவாலை எட்டிஃபாக் அணி சிறப்பாக எதிர்கொண்டது என்று சொல்லும் வகையிலேயே ஆட்டம் இருந்தது. 

இரண்டாவது பாதி ஆட்டத்தில் அல்-நாசர் அணி தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் முனைப்புடன் ஆடியது. இதனால், முதல் 10 நிமிடங்களிலேயே அல்-நாசர் அணி கோலடிக்க அடுத்தடுத்து 2 வாய்ப்புகள் கிட்டின. 

ரொனால்டோ தனது திறமையான ஆட்டத்தால் புத்திசாலித்தனமாக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை கோலாக்க சக வீரர்கள் தவறிவிட்டனர். அடுத்தபடியாக, முதல் கோலை அடித்த ஆண்டர்சன் தலிஸ்கா கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை எட்டிஃபாக் அணி கோல் கீப்பர் பவுலோ விக்டர் அபாரமாகச் செயல்பட்டு தடுத்துவிட்டார்.

ஆட்டத்தின் கடைசிக்கட்டம் நெருங்க நெருங்க, எந்த அணி வெல்லும் என்பதைக் காட்டிலும் ரொனால்டோ கோல் அடிப்பாரா, இல்லையா என்ற கேள்வியே ரசிகர்களின் மனதில் மேலோங்கியிருந்ததை அவர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. 

ஜாம்பவான் வீரரான ரொனால்டோ ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் மாயாஜாலம் காட்டியவர் என்ற வரலாறு அவர்களின் மனக்கண் முன்னே வந்து ஆறுதல் தந்தது. அந்த மாயாஜாலம் இங்கேயும் நிகழும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

போட்டி வர்ணனையாளர்களின் உதடுகளும்கூட குறைந்தபட்சம் நிமிடத்திற்கு ஒருமுறையாவது ரொனால்டோவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தன. 

கடைசி 5 நிமிடங்களுக்கு ஆட்டம் நகர்ந்த போதும்கூட ரொனால்டோ கோலடிப்பதை காண ஆவல் கொண்டிருந்த ரசிகர்கள், அவரை உற்சாகப்படுத்திய வண்ணமே இருந்தனர். ஆனால், கடைசி வரை ரசிகர்களின் எண்ணம் ஈடேறவே இல்லை. 

முழுமையாக 90 நிமிடங்கள் களத்தில் இருந்தும் ரொனால்டோவால் கோலடிக்க முடியவில்லை. எனினும், அவரது சிறப்பான ஆட்டத்திறனை அவ்வப்போது காண முடிந்தது. 

ரொனால்டோவின் அல்-நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. ரொனால்டோ கோல் ஏதும் அடிக்காவிட்டாலும், அவரது இருப்பு இந்த ஆட்டத்தில் வெகுவாக உணரப்பட்டது. வீரர்களிடையே இருந்த சிறப்பான ஒருங்கிணைப்பு மூலம் அல்நாசர் அணி, ஆட்டத்தின் பெரும்பகுதி நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 

எட்டிஃபாக் அணியைப் பொருத்தவரை, கோல் கீப்பர் பவுலோ விக்டர் கதாநாயகனாக ஜொலித்தார். கோல் கம்பத்தின் அருகே கோலியாத் போல நின்ற அவர், அல்-நாசர் அணியின் கோலடிக்கும் முயற்சிகளை அசராமல் தடுத்து நிறுத்தினார்.

இரு நாட்களுக்கு முன்பு ரியாத்தில் மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் ஆகியோரை உள்ளடக்கிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஆல் சௌதி லெவன் அணியை வீழ்த்தியது. அந்தப் போட்டியின் மூலம் வளைகுடா மண்ணில் முதன் முதலாக ஆடிய ரொனால்டோ ஆல் விண்மீன் லெவன் அணிக்காக 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 

இந்த வெற்றியின் மூலம் சௌதி புரோ லீக் தொடரில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதன் பரம வைரியாகக் கருதப்படும் அல்-ஹிலால் அணி இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. 

அடுத்தக்கட்டமாக, சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அல்-நாசர் அணி, அல் இட்டிஹாட் அணியை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் ஜொலிக்கத் தவறிய ரொனால்டோ, அடுத்து வரும் ஆட்டங்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »