Press "Enter" to skip to content

இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியின்றி பின்வாங்கிய அரசு ஊழியர்கள் – என்ன காரணம்?

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் – சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதால், சில வேளைகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாயின், அவர்கள் தொழில் இன்றியும் சம்பளம் இல்லாமலும் தேர்தல் நடைபெறும் வரையில் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே, அரச ஊழியர்கள் போட்டியிடுவதற்குப் பின்னடித்துள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் அரச ஊழியர்கள் போட்டியிடுவதாயின் அவர்களின் பதவி நிலைக்கேற்ப இரண்டு வழிகளைக் கையாள வேண்டும். நிறைவேற்றுத் தரத்தைக் கொண்ட அரச அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடுவதாயின் தொழிலை ராஜினாமா செய்தல் அவசியம்.

சாதாரண தர – அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர்கள் தேர்தல் வேட்புமனு தினத்திலிருந்து தேர்தல் முடிவடையும் நாள் வரையிலும் சம்பளமில்லாத விடுமுறையை அவர்களின் நிறுவனத் தலைவர்கள் ஊடாகப் பெறுதல் வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் காலம், இம்மாதம் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒத்தி வைக்கப்பட்டால் என்ன நடக்கும்?

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிரான கருத்துகளே ஆளும் தரப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. “தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் நாடு நாசமாகிவிடும்” என, அரசாங்கத் தரப்பினர் கூறி வருகின்றனர். அதனால், தேர்தல் பெரும்பாலும் ஒத்திவைக்கப்படலாம் என்கிற எண்ணம் பரவலாக உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின், சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களாகக் குதித்துள்ள எந்த அரச ஊழியரும் தேர்தல் நடைபெறும் வரை, தமது தொழிலுக்குச் செல்ல முடியாது.

எடுத்துக்காட்டாக தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டால், அந்தக் காலம் முழுவதும் வேட்பாளர்களாகக் களமிறங்கிய அரச ஊழியர்கள் சம்பளமின்றி, வீட்டிலிருக்க வேண்டிய நிலை வரும்.

இப்படியொரு நிலை தமக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, இந்தத் தேர்தலில் கணிசமான அரச ஊழியர்கள் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டனர்.

‘ஐக்கிய சமாதான கூட்டமைப்பு’ எனும் கட்சியின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகிக்கும் இர்பான் முகைதீன் ஓர் அரச ஊழியர். இம்முறை அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் விருப்பத்துடன் இருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார். ஆனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால் சம்பளமற்ற விடுமுறையில் நீண்ட காலத்தைக் கழிக்க வேண்டியதை நினைத்து, தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து்க கொண்டதாகத் தெரிவிக்கின்றார்.

“நான் அறிந்து, பல அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைக் கொண்டிருந்தனர். ஆனாலும் சிலவேளை தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனும் அச்சத்தில் அவர்கள் களமிறங்கவில்லை,” என்கிறார் இர்பான்.

இர்பான் முகைதீன்

ஆணைக்குழு உறுப்பினரின் கருத்து

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு, தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அரச ஊழியர்களின் நிலை என்னாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரிடம் வினவினோம். தனது பெயரை கட்டுரையில் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், பிபிசி தமிழுக்குப் பதிலளித்தார்.

“தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டாலும், குறித்த தேர்தல் நடந்து முடியும் வரை விடுமுறையைப் பெற்றுக் கொண்ட அரச  ஊழியர்கள் எவரும் வேலைக்குச் செல்ல முடியாது. அந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படாது.

இதுதான் சாதாரண நடைமுறை. ஆனால், அமைச்சரவை தீர்மானமொன்றின் ஊடாக, குறித்த வேட்பாளர்கள் தத்தமது தொழில்களுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்க முடியும்.”

”புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒத்தி வைக்கப்பட்டபோது, அதில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் சில காலம் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தனர். அதன்பிறகு அமைச்சரவைத் தீர்மானமொன்று எடுகக்கப்பட்டு, அதனூடாக குறித்த அரச ஊழியர்கள் அவர்களின் வேலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்,” என்றார் தேர்தல் ஆணைக்குழுவின் மேற்படி உறுப்பினர்.

இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்?

இன்னொரு சம்பவம்

2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தலொன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலில் அரச ஊழியர்கள் உட்பட பலரும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். ஆனாலும், குறித்த தேர்தல் நாடளாவிய ரீதியில் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் – தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சம்பளமும் கிடைக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்ட அப்போதைய அரசாங்கம் விசேட அனுமதி ஒன்றைப் பெற்று அதனூடாக, தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, அவர்களை வேலையிலும் இணைத்துக் கொண்டது.

அப்போது அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கிய அரச உத்தியோகஸ்தர் என்.ரி. மசூர் என்பவர், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமையால், சம்பளமின்றி தான் எதிர்கொண்ட பிரச்னையை பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.

“தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமையின் காரணமாக, அதில் வேட்பாளர்களாகக் களமிறங்கிய அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும் சம்பளமின்றியும் சிரமப்பட்டனர். அதைக் கவனத்தில் கொண்ட அப்போதைய அரசாங்கம், விசேட அனுமதி ஒன்றைப் பெற்று, அதனூடாக என்னைப் போன்ற அரச ஊழியர்களான வேட்பாளர்களுக்கு, விடுமுறையில் இருந்த காலப் பகுதிக்குரிய சம்பளம் முழுவதையும் வழங்கியது. வேலையிலும் இணைத்துக் கொண்டது” என மசூர் விவரித்தார்.

தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் 2002 மார்ச் வரை மட்டும் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொண்ட மசூர், அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமையால், 2002 அக்டோபர் மாதம் வரையில் சம்பளமில்லாமலும் வேலைக்குச் செல்ல முடியாத நிலையிலும் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார்.

இந்தக் காலகட்டத்தில்தான், உள்ளூராட்சித் தேர்தல் வாக்கெடுப்புத் தேதியை அரசு ஒத்தி வைத்துள்ளபடியால், வேட்புமனுக்களை முன்வைத்த அரச அலுவலர்களை மீள சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு அரசு தீர்மானித்தது.

இதற்கமைவாக பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 08/2002இன் படி, மசூர் மீண்டும் அவரின் தொழிலில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

“2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் மீண்டும் வேலையில் இணைந்து கொண்டேன். எனக்கு கிடைக்காமல் போன 6 மாதத்துக்குரிய சம்பளமும் வழங்கப்பட்டது,” என மசூர் கூறினார்.

இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்?

“முன்னரைப் போல் நடக்காது”

தற்போதைய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், 2002ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டபோது, அதில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் இழந்த ‘விடுமுறை’ கால சம்பளத்தை, அப்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்ததைப் போன்று, தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுக்காது என்கிறார் இர்பான் முகைதீன்.

“அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே போதியளவு பணம் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளது. இதனால், நிறைவேற்றுத் தர அரச ஊழியர்களுக்கு ஒரு கட்டமாகவும் ஏனைய அரச ஊழியர்களுக்கு இன்னொரு கட்டத்திலும் இரண்டு தடவைகளில் மாதாந்திர சம்பளத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.”

“இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைத்தாலும், அதனால் பாதிக்கப்படும் வேட்பாளர்களான அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.”

“இந்தத் தேர்தல் நடப்பதில் ஆளும் தரப்பினருக்கு விருப்பமில்லை. எனவே, அவ்வாறானதொரு தேர்தலால் பாதிக்கப்படும் எவருக்கும் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த அரசு முயலாது,” என்று இர்பான் முகைதீன் கூறுகின்றார்.

‘தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்’ என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமிருந்தும் தவிர்த்துக் கொண்ட பல அரச உத்தியோகஸ்தர்களை சந்திக்க முடிந்தது. இந்த நிலைமையானது, பொருத்தமான வேட்பாளர்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான பரந்த சூழ்நிலையினை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »