Press "Enter" to skip to content

வீட்டில் சிறுமி கொடூர கொலை; பெற்றோர் கைது – என்ன நடந்தது ?

’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. நெகிழி (பிளாஸ்டிக்) பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’.  


தனது மகளின் மரணித்திற்காக இப்போது அந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அழுக்கு நிறைந்த தனது படுக்கையில் மரணித்து கிடந்த அந்த சிறுமிக்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

போவிஸ், நியூ டவுன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஆலன் டிட்ஃபோர்ட் மற்றும் சாரா லாய்ட் ஜோனஸ். இவர்களுடைய 16 வயது மகள் கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட். இவர் பிறவியிலேயே ’ஸ்பைனா பிஃபிடா’ (spina bifida ) என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறக்கும் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் முதுகு தண்டுவட பகுதிகளில் ஏற்படும் ஒருவித பாதிப்பே ‘ஸ்பைனா பிஃபிடா’ என்னும் நோயாக அறியப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு  இடுப்புக்கு கீழே அசைவதிலும், எழுந்து நடப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் நடப்பதற்கும், உடல் அசைவிற்கு வழியின்றியும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வாழ்ந்து வந்தார்.


இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தனது மகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை என கெய்லியின் பெற்றோர்கள் அவசர உதவி சேவையை தொடர்பு கொண்டுள்ளனர். அவசர உதவி சேவையாளர்கள் அங்கு வந்த பின்புதான் கெய்லியா எவ்வளவு மோசமான நிலையில் அத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது. 


பிறவியிலேயே உடல் பாதிக்கப்பட்டு, கடுமையான உடல் பருமனோடு போராடி வந்த  தனது மகளை டிட்ஃபோர்ட் தம்பதியினர் கொஞ்சம் கூட மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை என்பதே கெய்லியா டிஃபோர்டின் மரணத்திற்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

போவிஸ் சிறுமி

இதுகுறித்த வழக்கு போவிஸின் மோல்டு கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’அவளது அறை மிகவும் அழுக்கு நிறைந்ததாக இருந்தது. அந்த அறை உண்மையிலேயே மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அங்கு இருந்த துர்நாற்றத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ’ என்கிறார் சம்பவத்தன்று கெய்லியின் வீட்டிற்கு சென்ற மருத்துவர் கரேத் வின் ஈவான்ஸ்.


கெய்லியாவிற்கு இருந்த முதுகு தண்டுவட பிரச்சனையால்   அவரது உடல் இடுப்பிற்கு கீழே செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் சக்கர நாற்காலி பயன்படுத்தி வந்த கெய்லியாவிற்கு அதுவே அவரது உடல் எடை அதிகரிக்க காரணமாகவும் அமைந்தது. 16வயதே நிரம்பியிருந்த அந்தச் சிறுமியின் எடை அவரது இறப்பின்போது 146 கிலோவாக இருந்திருக்கிறது. 


பல மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த கெய்லியாவிற்கு டிட்ஃபோர்ட் தம்பதியினர் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை என்பதும், ஒரு குழந்தை பெற்றோர்களிடம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அன்பை கூட  அவர்கள் தங்களுடைய மகளுக்கு வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து தான் மரணித்த நாள் வரை கெய்லியா வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததாகவும், அவர் வெளியுலகிற்கே அழைத்துச்செல்லபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

போவிஸ் சிறுமி

பட மூலாதாரம், ATHENA PICTURES

‘கெய்லியாவின் உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. நெகிழி (பிளாஸ்டிக்) பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. குளியலறை சுவர்கள் முழுவதும் மலம் படிந்துகிடந்தது’ என்கின்றனர் கெய்லியாவின் உடலை தூக்கிய மருத்துவ உதவியாளர்கள்.


அதேப்போல் கெய்லியாவின் உடலை புகைப்படம் எடுத்த கிரைம் சீன் போட்டோகிராபர் கூறும்போது, ’அவரது கால்கள் மிகவும் அசாதாரணமாக காணப்பட்டது. கால் முழுவதும் அவர் துணி வைத்து கட்டியிருந்தார். அதிலிருந்து நீர் போன்று எதோ வழிந்துக்கொண்டிருந்தது. அவரது காலுறைகளை கவனித்தபோது அது அவருடைய சதையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. பாதங்கள் வெளுத்துப்போய் வீங்கியிருந்தது. அது மனிதர்களின் கால்கள் போலவே தெரியவில்லை. மற்றும் அங்கே அழுகிய நாற்றமும், அமோனியா வாசமும் இணைந்து மிகவும் மோசமான நிலையை உருவாக்கியிருந்தன’ என்று தெரிவித்தார்.

பெற்றோர்களின் புறக்கணிப்பே கெய்லியாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது என எதிர்தரப்பு வழக்கறிஞர் உறுதியாக வாதாடி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணையில் கெய்லியாவின் தாய் சாரா லாய்ட் ஜோனஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் கெய்லியாவின் தந்தை ஆலன் டிட்ஃபோர்ட் தன் மீது வைக்கப்படும் குற்றத்தை தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வழக்கு மீதான விசாரணை மோல்டு டவுன் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »