Press "Enter" to skip to content

பழனி கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவின் செயலால் ஆகம விதி மீறலா? முழு பின்னணி

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக

பழனி கோவில் கருவறைக்குள் அமைச்சர் சேகர் பாபு சென்றதும் அந்த கோவிலில் இருந்து அவர் பகிர்ந்த படங்களும் ஆகம விதி மீறலானதாக சிலர் விமர்சித்துள்ள நிலையில், அங்கு நடந்தது என்ன? அதற்கு ஆன்மிக ரீதியாக தரப்படும் விளக்கம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பழனி கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் அந்த துறையின் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். அப்போது எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் பழனி கோவிலில் ஆகம விதி மீறப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த குடமுழுக்கு நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, “ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் பேசிய ஒலிநாடா ஒன்று திண்டுக்கல், பழனி சுற்று வட்டாரங்களில் வாட்ஸ்அப்பில் அதிகம் பகிரட்பட்டது.

அதில், “அன்றைய தினம் நான் அங்கு தான் இருந்தேன். அதிகாரிகள் நாம் சொல்வதற்கு மாறாக நடக்க மாட்டார்கள். ஆனால் நாம் கூறியதையும் மீறி அன்று அவர்களை அனுமதித்துள்ளார்கள். ஆகம விதி மீறப்பட்டுள்ளதை குருக்கள் கண்டும் காணாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த நிகழ்வைப் பற்றி உலகம் முழுவதுமிருந்து தினமும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அழைத்து பேசுகிறார்கள். நாம் மௌனமாக இருக்கக்கூடாது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் விரைவில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனி மாதம் மீண்டும் பிராயசித்த குடமுழுக்கு நடத்த வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட அர்ச்சகர் சங்க தலைவர் கும்பேஸ்வர குருக்களை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வானதி குறிப்பிடும் பிராயசித்த குடமுழுக்கு குறித்து கேட்டது.

பழனி கோவில்

“ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறுகையில் தவறுதலாக ஆகம விதியை மீறும் விதத்திலோ அசம்பாவிதமாகவோ ஏதாவது நடந்தால் அதற்குப் பரிகாரமாக செய்வதற்கு ஆகமத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. குடமுழுக்கு முழுமையாக ஆகம முறைப்படி நடக்காமல் இருந்து, பின்னர் நடத்தப்படுவதாக இருந்தால், அதன் பெயர்தான் பிராயசித்த குடமுழுக்கு,” என்கிறார் கும்பேஸ்வர குருக்கள்.

“கும்பாபிஷேகத்திற்கு முந்தைய தினம் நான் அங்கு தான் இருந்தேன். குடமுழுக்கு நடப்பதற்கு அர்த்த மண்டபத்தை தாண்டி ஸ்தபதி, அர்ச்சகர்கள் அல்லாதவர்கள் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் வேறு பணிகளுக்காக நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் அன்று கருவறைக்குள் சென்றதாக அங்கு இருந்தவர்கள் உள்ளுர் மக்கள் என்னிடம் கூறினார்கள். சில காணொளிக்களும் வந்தன.

ஆனால் சிவாச்சாரியார்கள் அனுமதியுடன் தான் இது நடந்ததாக செய்திகள் வெளியாகின. அதனால் தான் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்கள் சிவாச்சாரியார்கள் குழுவில் செய்தி பதிவிட்டிருந்தேன். அந்த செய்தி பரவலாக சென்றுவிட்டது. ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் மட்டுமே கருவறை வரை செல்வார்கள். அவர்கள் அல்லாமல் சிலை பராமரிப்பில் ஈடுபடும் ஸ்தபதிகள் தேவை ஏற்பட்டால் செல்லலாம். வேறு யாரும் கருவறைக்குள் செல்லக்கூடாது என்பது ஆகம விதி.

சட்டப்படி தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்த்த மண்டபம் வரை பக்தர்கள் சென்று வழிபடலாம். ஆனால் பல கோவில்களில் பாதுகாப்பு கருதி அர்த்த மண்டபம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மகா மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் பார்வையிட அர்த்த மண்டபம் வரை செல்வார்கள். ஆனால் அதை தாண்டி கருவறைக்குள் சென்றது தான் தவறாகியுள்ளது.

அர்ச்சகர் சங்கத்தில் இதை யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் நிர்பந்திக்கப்பட்டார்களா எனத் தெரியவில்லை. நான் அப்போது அங்கு இருந்திருந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் அங்கு இருந்துள்ளார்கள். எங்கள் பெயர் சம்மந்தப்படுத்தப்பட்டதால் தான் அப்படியொரு விளக்கம் தர வேண்டி இருந்தது. மகா குடமுழுக்கு வழக்கமாக ஆனி மாதத்தில் தான் நடைபெறும். ஆனால் இம்முறை தை மாதம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்திருந்தோம். ஆனாலும் கும்பாபிஷேக விழா தொடர்ந்து நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் யாருமே உள்ளே செல்லக்கூடாது என்பது தான் ஆகம விதி. ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என்பதால் அனுமதிக்கப்பட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆகம விதி மீறல் ஏற்பட்டுள்ளதால் கடவுளுக்கு மட்டும் ஒன்பது குண்ட பூசை செய்து பிராயசித்தமாக ஒரு குடமுழுக்கு நடத்த வேண்டும் என நிர்வாகத்திடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஏதாவது தவறுதலாக நடந்தால் இது போல மீண்டும் குடமுழுக்கு நடத்தப்படுவது தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ள ஒன்று தான். விரைவில் எங்கள் சங்கத்தை கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அடுத்த சில மாதங்கள் கோடை விடுமுறை என கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக நடத்தப்படும் ஆனி மாதத்தில் பிராயசித்தம் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்,” என்றார்.

“தொடரும் விதிமீறல்கள்” – பாஜக புகார்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “பழனி கோவிலில் மட்டுமில்லை கடந்த 60, 70 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ஆகம விதி மீறப்பட்டு தான் வருகிறது. கோவில்களை மேற்பார்வை செய்வது மட்டுமே அரசின் பணி என இந்து சமய அறநிலையத் துறை சட்டமே சொல்கிறது. கோவில் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடைபெற்றால் மட்டுமே அரசு தலையிட முடியும். ஆனால் கோவில் நிர்வாகத்தில் அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அரசு ஆலயத்திலிருந்து வெளியேறினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்,” என்றார்.

விளக்கம் சொல்லும் சுகி சிவம்

ஆனால் இந்த கருத்தோடு மாறுபடுகிறார் எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் சுகி சிவம்.

சுகி சிவம்

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் புத்தக திருவிழாவில் உரையாற்றியபோது, `பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும், ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். பழனி கோவில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் முருகன் பெயர் சித்தர்நாதன். தண்டாயுதத்தை ஊன்றி நிற்கும் தண்டபாணி. கோவணம் கட்டியிருக்கும் துறவி. அவர் ஒரு சித்தர். ஒரு சித்தருக்கு ஆகம பிரதிஷ்டை கிடையாது. தனி மனிதன் ஒரு கோவிலைக்கட்டி பிரதிஷ்டை செய்திருந்தால், ஆகமம் செல்லுபடியாகும். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகமம் செல்லுபடியாகாது` என்று பேசியிருந்தேன். அதே கருத்தை தான் நான் மீண்டும் சொல்கிறேன். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகம விதிகள் செல்லாது.

பழனி கோவிலுக்கு ஆகம விதி என்பது கிடையாது. முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரங்களால் வழிபாடு செய்யப்பட்டு கோவிலில் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆகம விதி மீறப்பட்டதாக கூறுபவர்கள் எந்த ஆகமத்தில் எந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதை கூற வேண்டும். கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தற்போது இந்த விவகாரம் கட்சி அரசியலாக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக விவாதம் நடந்தால் பதலளிக்கலாம். தனிநபர் பற்றி அல்லாமல் ஆகமம் சார்ந்து யாராவது கேள்விகள் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிக்கலாம்” என்கிறார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »