Press "Enter" to skip to content

ரொனால்டோ அல் நாசர் அணிக்காக அடித்த 4 கோல்கள்: தவிடுபொடியான அல்-வெஹ்தாவின் தடுப்பாட்டம்

பட மூலாதாரம், Getty Images

சௌதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா இடையிலான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களை அடித்துத் தனது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார்.

முதல் கோலுக்காக அவர் எதிரணியின் தடுப்பாட்டக்காரரை லாகவமாக நகர்த்திவிட்டு, அநாயாசமான தனது வின்டேஜ் இடதுகால் ஷாட் மூலம் அடித்தபோது, பந்து கோல் கீப்பரை தட்டிவிட்டு, நெட்டின் மூலையில் பறந்து சென்று விழுந்தது.

இரண்டாவது கோலுக்கு, சக வீரர் பாஸ் செய்து பறந்து வந்த பந்தை காற்றிலேயே அடித்தார். அது கோல் கீப்பரின் கால்களுக்கு இடையே புகுந்து சென்று ஸ்டைலான ஒரு கோலாக மாறியது, ரசிகர்களைக் குதூகலிக்கச் செய்தது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் மூலம் கிளப் ஆட்டத்தில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 500ஐ தொட்டது. மூன்றாவது கோலையும் அவரே அடித்ததன் மூலம், தனது ஹாட்ரிக்கை பூர்த்தி செய்தார். அதோடு நிற்காத அந்த போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான், நான்காவது கோலையும் ஒரு த்ரூ பந்தில் நேராக கோல் கீப்பர் மீது தட்டிவிட்டு, கோலாக்கினார்.

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

ஒரு வாரத்திற்கு முன்னதாக, அல் நாசர் அணி அல் ஃபாதேவுக்கு எதிராக விளையாடியபோது ரொனால்டோ தனது முதல் கோலை சௌதி அரேபிய கிளப் ஆட்டத்தில் அடித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறி இங்கு வந்தபிறகு, சௌதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த முதல் கோல் அது. அதைத் தொடர்ந்து தற்போது ஹாட்ரிக் கோல்களுடன் தடம் பதித்துள்ளார்.

1px transparent line
1px transparent line

எதிரணியின் தடுப்பாட்டத்தை உடைத்த ரொனால்டோ

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே அவருக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. ஆனால், அதில் அவர் செய்த கோல் முயற்சியை அல் வெஹ்தாவின் தடுப்பாட்டம் தடை செய்தது. ரொனால்டோ தொடர்ந்து முன்னிலையில் பந்தைத் தட்டிச் சென்று கோல் வாய்ப்புகளை ஏற்படுத்த முயன்றார்.

அவரது தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, 21வது நிமிடத்தில் கரீப் பாஸ் செய்த பந்தை எடுத்துச் சென்ற ரொனால்டோ கோல் போஸ்டை நோக்கி அடித்தார். கோல் கீப்பரை தட்டிச் சென்ற அந்த ஷாட் அவருடைய வின்டேஜ் ஷாட்களில் ஒன்றாக இருந்தது.

அல் வெஹ்தா அணியைச் சேர்ந்த ரோட்ரிகஸ் இதுவரை அந்த அணிக்காக ஆடியவர்களில் சிறந்த ஆட்டக்காரர் எனக் கருதப்படுபவர். அவர், அல் நாசர் வீரர்களை மிகவும் கடினமான சூழ்நிலையில் வைத்து பந்தை கோல் போஸ்டுக்கு கொண்டு செல்லும் முயற்சியை 28வது நிமிடத்தில் மேற்கொண்டார். ஆனால், இறுதி நேரத்தில் அல் நாசரின் தடுப்பாட்டம் அவரது முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியது.

அல் வெஹ்தாவின் தடுப்பாட்டக்காரர்கள் பலமுறை முயன்றும் அவர்களைக் கடந்து பந்தை கொண்டு சென்ற வீரர்கள் பாஸ் செய்தபோது, 41வது நிமிடத்தில் தனது அணிக்காக இரண்டாவது கோலுக்கான ஷாட்டை அடித்தார். தன் ஆட்டத்தைத் தடுக்க முயன்ற வீரர்களைக் கடந்து எதிரணியின் எல்லைக்குள் நுழைந்த ரொனால்டோ, அல்-நாசர் வீரர்கள் பாஸ் செய்த பந்தை கோல் போஸ்டுக்கு அருகே சென்று ஸ்டைலாக தட்டிவிட்டு கோலாக்கினார்.

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

அது கோல் கீப்பரின் கால்களுக்கு நடுவில் புகுந்து சென்று கோலானது. அவர் இதன்மூலம், தனது மொத்த கோல் கணக்கை 822 ஆக உயர்த்தினார். 52வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் அவர் ஹாட்ரிக் கோல் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களை, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 61வது ஹாட்ரிக் கோலை அடித்து பரவசமூட்டினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை, ரியல் மாட்ரிட் அணிக்காக 44 ஹாட்ரிட் கோல்களை அடித்துள்ளார். அதுபோக, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், யுவென்டஸ் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், போர்ச்சுகல் தேசிய அணிக்காக 10 ஹாட்ரிக் கோல்கள், ஆகியவற்றோடு தற்போது அல்-நாசர் அணிக்காக 1 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 62வது நிமிடத்தில் அல் வெஹ்தாவின் தடுப்பாட்டத்தை உடைத்து உள்ளே புகுந்த ரொனால்டோ தனது அணிக்காக நான்காவது கோலையும் அடித்து அல் நாசரை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அல் வெஹ்தாவின் தடுப்பாட்டம், “ரொனால்டோவின் அதிரடியால் தவிடுபொடியானதாக” ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

“ரொனால்டோ இருப்பது அணிக்கு ஊக்கமளிக்கிறது”

ரொனால்டோ, அல் நாசரை கடினமான அணியாக மாற்றியுள்ளதாகவும் அவர் இருப்பதாலேயே இந்த அணியை மற்ற கிளப்புகள் குறி வைக்கின்றன என்றும் அல் நாசர் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் கஸ்டாவோ கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

“நிச்சயமாக ரொனால்டோவின் இருப்பு எங்களை மிகவும் கடினமான அணியாக மாற்றியுள்ளது. அனைத்து அணிகளும் அவருக்கு எதிராகச் சிறந்த முறையில் விளையாட முயல்கின்றன. அதோடு அவரும் அனைவருக்கும் ஊக்கமாக இருக்கிறார்,” என்று கஸ்டாவோ ஆர்டி அரபிக் என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

ஐந்து முறை பேலோன் டோர் விருதை வென்ற ரொனால்டோ, அல் ஃபதேவுக்கு எதிராக 2-2 என்று டிரா செய்த ஆட்டத்தில் தனது கோல் கணக்கைத் தொடங்கினார். தற்போது 4 கோல்களை அடித்து அல் வெஹ்தாவுக்கு எதிராக அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அல் ஃபெதாவுக்கு எதிராக பெனால்டி ஷாட் மூலம் ஒரேயொரு கோல் அடித்தபோது, ரொனால்டோ மூன்று போட்டிகளில் மொத்தமே ஒரு கோல் தான் அடித்துள்ளார் என்று சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

லீக் போட்டியில் ஆடும்போது, அவருக்கு இருக்கும் புகழ், சில விமர்சனங்களைக் கொண்டு வந்தாலும், அவருடைய இருப்பு அணிக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக கஸ்டாவோ தெரிவித்திருந்தார். அதன் உண்மைத்தன்மையை இந்தப் போட்டியில் ரொனால்டோ காட்டியுள்ளார்.

மேலும் கஸ்டாவோ, “அல்-நாசரில் அவரது இருப்பு அணியினருக்கு ஒரு பெரிய நன்மையை அளிக்கிறது. நாங்கள் அவரிடமிருந்து தினமும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆட்டத்தின் நுட்பங்கள்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் அவருடைய திறன்களில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம்.

ரொனால்டோ, சவால்களுக்காக உருவாக்கப்பட்டவர். அவர் எப்போதும் சவால்களை முறியடிப்பார். இப்போது முதல் கோலை அடித்ததன் மூலம் தன் மீது இருந்த அழுத்தங்களை அவர் குறைத்துவிட்டார்,” என்று கூறினார்.

தன் மீது இருந்த அழுத்தங்களை முந்தைய ஆட்டத்தில் பெனால்டி ஷாட் மூலம் கொஞ்சம் இலகுவாக்கிய ரொனால்டோ, துல்லியமான முதல் கோல் மூலம் கிளப் ஆட்டங்களில் 500வது கோலை அடித்ததோடு, நான்கு கோல்களையும் அடித்து அல் நாசர் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை விதைத்துள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »