Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? எங்கிருந்து எதற்காக தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்?

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் முதலில் காணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவி, தெற்கே கன்னியாகுமரி மீன்பிடி தொழில் வரையிலான எல்லா தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது.

பொதுவாக வட இந்தியத் தொழிலாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்? எதற்காக வருகின்றனர்? உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.

தற்போதைய சூழலில் புலம்பெயர் தொழிலாளிகள் ஒரிசா, பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் என பொதுவாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாநிலங்களிலிருந்து அதிகம் வருகிறார்கள்.

இவர்களை பொதுவாக “வட இந்திய தொழிலாளர்கள்” என்ற பெயரில் அழைத்தாலும் அதிகம் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இவர்கள் உள்ளனர்.

காரணம் என்ன?

புலம்பெயர்தலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன அதில் முக்கிய காரணம் வேலை வாய்ப்பு. மேலும் சில இடங்களில் இயற்கை பேரழிவு, சாதிய பாகுபாடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளற்ற நிலை ஆகிய காரணங்களுக்காக வெளி மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பணி செய்கின்றனர்.

தனியாக வருவது, பழகியவர்கள் தெரிந்தவர்கள் மூலமாக வருவது, முகவர்கள், நிறுவனங்களால் பணியமர்த்தப்படுவது என பல்வேறு வழிகளில் இத்தொழிலாளர்கள் வருகின்றனர்.

பெரும்பாலும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்த வெளி மாநில தொழிலாளிகள் தற்போது பெரிய உணவகங்கள் தொடங்கி சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வண்டி, நட்சத்திர விடுதிகள், முடித் திருத்தகம் கடைகள் பல்வேறு சிறு வணிக நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்ந்துவிட்டனர். சிற்றுண்டிக் கடை போன்ற சிறுவணிகங்களில் அவர்களே ஈடுபடுவதும் உண்டு. மாநகராட்சி தூய்மை பணியில்கூட அவர்களைப் பார்க்கமுடிகிறது. பாரம்பரிய தொழிலாக சொல்லப்பட்ட மீன்பிடி தொழில் வரையிலும், அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் உள்ளனர்.

இதற்கான காரணம் என்பது இருதரப்பிலும் ஏற்பட்ட சூழ்நிலைகளாக உள்ளது. அதாவது ஒருபுறம் வாய்ப்பு தேடி வரும் வெளி மாநில தொழிலாளிகள், மறுபுறம் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பணிகள். அதனால் ஏற்பட்ட காலியிடங்கள். இவைகளே தமிழ்நாட்டுக்குள் வடமாநிலத் தொழிலாளிகளின் இந்தப் பரவலுக்குக் காரணம்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, கன்னியாகுமரி மீன்பிடி தொழில் என அனைத்திலும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளின் போதாமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை தற்போது வெளி மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பி வருகின்றனர்.

“தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட மக்கள் திருப்பூருக்கு வந்து தங்கி இங்கே பணி செய்தார்கள். ஆனால் இப்போது அடுத்த தலைமுறை மக்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். திருப்பூரில் தற்போது 50 சதவீத அளவில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

திருப்பூர் ஆடை தயாரிப்பு துறையில் சுமார் 3 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். தையல், செக்கிங், ப்ராசசிங் என பல்வேறு துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம்.

மீன்பிடி தொழிலில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடும் நிலை ஏற்பட்டதற்கும் கிட்டதட்ட இதே காரணத்தைதான் முன்வைக்கிறார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் சர்ச்சில்.

“மீன்பிடி தொழில்களில் இருக்கும் கடினங்களையும் ஆபத்துக்களையும் கருதி அடுத்த தலைமுறையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க சென்றனர். படித்து அதற்கேற்ப வேலை வாய்ப்புகளை தேடிச் சென்றனர். மீன்பிடி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது அந்த நேரத்தில்தான் வட இந்திய தொழிலாளர்கள் இங்கே வந்தனர். முதலில் அவர்கள் உதவியாளர்களாக வந்தனர். பின் பயிற்சிப் பெற்று மீனவர்களாக தொழில் செய்ய தொடங்கினர்,” என்கிறார் சர்ச்சில்.

தமிழ்நாட்டு மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறதா?

வட இந்திய தொழிலாளர்கள் எங்கும் உள்ளனர். அவர்களால் தமிழ்நாட்டு மக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற கூற்றுகளை சமீபமாக நாம் பார்க்க முடிகிறது. புலம்பெயர் தொழிலாளிகள் குறித்தான விவாதம் திருப்பூரில் நடந்த தொழிலாளர் மோதல் சம்பவத்திற்குப் பிறகு மேலும் அதிகரித்தன.

ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பல்வேறு இடங்களில் ஏற்படும் ஆட் பற்றாக்குறை காரணமாகவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாக நிறுவனங்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. மறுபுறம் இவர்களுக்கான ஊதியம் என்பது குறைவே. அதுவே நிறுவனங்கள் இவர்கள் பணியில் அமர்த்துவதன் முக்கிய காரணம் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

“வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலியில் பெரும் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு கிட்டதட்ட உள்ளூர் பணியாளர்கள் பெறும் ஊதியத்தில் பாதியளவே ஊதியமாக கிடைக்கிறது. முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை பணியமர்த்துவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது,” என்கிறார் அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் கீதா.

ஆனால், வேறுபலரும் ஊதிய வேறுபாடு, கேலி காணொளிக்களில் பரப்பப்படுவது போல அவ்வளவு அதிகம் இல்லை என்கிறார்கள்.

மறுபுறம் பல இடங்களில் இவர்களுக்கான பணி குறித்த போதிய தகவல்கள் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்படுவதில்லை என்கின்றார் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த பால முருகன்.

“பல புலம்பெயர் தொழிலாளிகள் ஏமாற்றித்தான் அழைத்து வரப்படுகிறார்கள். பெரும்பாலனவர்களுக்கு இவர்களை அழைத்து வரும் முகவர்கள் சரியான தகவல்களை சொல்லி அழைத்து வருவதில்லை,” என்கிறார் அவர்.

வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்துவதன் காரணம் என்ன?

விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவது, கடின உழைப்பு போன்ற காரணங்களால் வடமாநிலத்தவரை வேலைக்கு எடுப்பதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

பணியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

அதேபோல வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழில்கள் முடங்கும் நிலையும் ஏற்படுகிறது என்கின்றனர்.

“தமிழ் ஊழியர்கள் வாரம் நான்கு நாட்களுக்கு மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு மாதம் 26 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் உண்டு.

50 சதவீத வேலையாட்கள் தட்டுப்பாடு என்பதால் ஊதியம் கொடுப்பதில் பெரிய வித்தியாசம் இல்லை. வெளிமாநில தொழிலாளர்களை நம்பிதான் நாங்கள் உள்ளோம். அவர்கள் மாதம் பூராவும் வேலை செய்கின்றனர். அவர்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. திருப்பூருக்கு வரும் வட இந்திய தொழிலாளிகள் ஒரு மாதத்தில் தொழிலை கற்று கொள்கின்றனர். அவர்கள் அதிகம் வேலை செய்கின்றனர் அதற்கேற்ப அவர்கள் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

வட இந்திய தொழிலாளர்கள் இல்லை என்றால் திருப்பூர் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால் இது ஏதோ ஒரு நாளில் நடந்தது இல்லை. 10 வருடங்களுக்கும் மேல் நடந்த மாற்றம் இது” என்கிறார் முத்துரத்தினம்.

“வட இந்தியர்கள் மீன் பிடிக்க வராத பட்சத்தில் இங்கே பல படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கிட்டதட்ட ஒவ்வொரு மீன்பிடி படகிலும் 5 முதல் 7 வட இந்தியர்கள் வரை இருப்பார்கள்,” என்கிறார் சர்ச்சில்.

ஒரு தொழிலாளி மாநிலம்விட்டு மாநிலம் செல்லும்போது அவரின் உழைப்பு அதிகமாகிறது. முழுத்திறனையும் வெளிப்படுத்துகின்றனர். ஒருவர் அவரின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது அவரின் பணித்திறன் அதிகரிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது இந்தியாவுக்கான ஒரு நேர்மறையான விஷயம் என்கிறார் முன்னாள் அமைச்சரும் மனித வள நிறுவனத்தை நடத்தியவருமான மாஃபாய் பாண்டியராஜன்.

மனித உரிமை மீறல்கள்

கட்டுமானப் பணியாளார்கள்

பட மூலாதாரம், Getty Images

இவர்களுக்கான வாய்ப்புகள் இங்கே வழங்கப்பட்டாலும் இவர்களுக்கான குறைந்த ஊதியம், அதிக பணி நேரம், பணிபுரியும் இடத்தின் சூழ்நிலை மற்றும் குடியிருப்பு வசதி குறைபாடுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து புலம்பெயர் தொழிலாளார்கள் நலனுக்காக செயல்படும் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

“பிகார் போன்ற மாநிலங்களில் 60 லிருந்து 100 ரூபாய் வரை கூலி தரப்படுகிறது. இங்குள்ள ஊதியம் அவர்களுக்கு சொர்க்கம். ஆனால் இங்கு கேள்வி என்ன வென்றால் அங்கு பெறுவதைக் காட்டிலும் அதிகம் பெறுகிறார்களா என்பது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அது கொடுக்கப்படுகிறதா என்பதுதான்,” என்கிறார் பால முருகன்

ஊதிய வேறுபாடு சிக்கல் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை களைய “கட்டுமான வேலைகளில் பெரிய முதலாளிகளாக இருந்தாலும் சிறிய முதலாளிகளாக இருந்தாலும் 50 சதவீத அளவில் உள்ளூர் பணியாளர்களுக்கு அதில் வேலை கொடுக்க வேண்டும். அந்த வகையில் உள்ளூர் தொழிலாளிக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் தொழிலாளிகளுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும்,” என்கிறார் கீதா

இதில் என்ன சிக்கல்?

வேலைவாய்ப்பு என்ற கோணத்தை தவிர பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டுக்கு இது வேறொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பால முருகன்.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள்

பட மூலாதாரம், Getty Images

“ஐந்து ஆண்டு கழித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் அட்டை பெறுவார்கள். ஆனால் இவர்கள் சம்பாதிக்கும் பணம் ஊருக்கு அனுப்பப் படும். இங்கிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பெரிதாக செலவு செய்வதில்லை. இவர்கள் சம்பாதிப்பது ஊருக்கு அனுப்பப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் பெரிதாக பணப்புழக்கம் இருக்காது. அப்போது இங்குள்ள சிறு வியாபாரங்கள் பெரிதும் அடி வாங்கும். பல கோடி ரூபாய் பணப்புழக்கம் இங்கு குறையும். உடனடியாக அதன் தாக்கம் தெரியாது. மிக மோசமாக உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்படும். பொருளாதாரம் புத்தாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். எனவே அதற்கு உண்டான விஷயங்களை இப்போதே கவனிக்க வேண்டும்.” என்கிறார் அவர்.

தீர்வு என்ன?

“தமிழ்நாட்டிலும் மக்களுக்கு வேலை தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் ஏன் வருவதில்லை என்றால், இங்கு படித்தவர்களுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு இங்கு கிடைக்கும் ஊதியமே ஒப்பீட்டளவில் அதிகமாகத் தெரிகிறது,” என்கிறார் பாலமுருகன்.

“அரசுப் பணிகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகின்றனர் என்பதே தற்போது முக்கிய கவலையாக இருக்கிறது. அரசுப் பணிகளில் உள்ளூர் ஆள்களுக்கே 90 சதவீதம் வாய்ப்பு தரவேண்டும் என்ற அரசாணை முந்தைய அரசாங்கம் கைவிட்டது. மாநில மக்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான விஷயம்,” என்கிறார் கீதா.

தமிழ்நாட்டில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அவர்களுக்கான நான்கு சேவை மையங்களும் இயங்கி வருவதாக தெரிவிக்கிறார் பால முருகன்.

ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் மாநிலத்தோடு சமூக ரீதியாக ஒன்றிணைய மாநில அரசு மற்றும் மத்திய அரசு பயிற்சிகளை வழங்க வேண்டும், மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மாஃபாய் பாண்டியராஜன்.

“தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி கட்டாயமாக 200 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் தினக்கூலிக்காக தொழிலாளர்கள் புலம்பெயர்கின்றனர். எனவே இந்த பிரச்னையை அதன் வேரிலிருந்து நாம் அணுக வேண்டும்,”என்கிறார் கீதா.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »