Press "Enter" to skip to content

“அணியும் ஆடைகளே உறவுகளை அந்நியப்படுத்தின” – சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர்

“உடல் எடையை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். ஆனால், நட்புகள், உறவுகளின் புறக்கணிப்பு தந்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் என்னை ஜிம்மே கதியென கிடக்கச் செய்தது.

அதுவே, என்னை இன்று சர்வதேச அரங்கில் கால் பதிக்கச் செய்துள்ளது” என்கிறார் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி.

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி, பெண்கள் நுழையவே தயங்கும் பாடி பில்டிங் துறையில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு மத்தியில், மிகக் குறுகிய காலத்தில் அசாத்திய சாதனைகளைப் படைத்துள்ளார்.

41 வயதான அவருக்கு மணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். அண்மையில் ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் ஆறாவது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

“சுடிதார் அணியக்கூட அஞ்சிய தலைமுறை என்னுடையது”

பிபிசி தமிழுக்காக வெரோனிகா அன்னமேரியிடம் பேசினோம். “1980-களில் மதுரையில் 2 சகோதரிகளுடன் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். சமூகத்தின் விமர்சனப் பார்வைக்கு அஞ்சி சுடிதார்கூட அணியாமல் பாவாடை, சட்டையில் இளமையைக் கழித்த தலைமுறை என்னுடையது.

பொது வெளியில் விளையாடக்கூட அனுமதிக்காத சூழலில்தான் இருந்தேன். மதுரையைவிட்டு வெளியே சென்றிராத எனக்கு, 24 வயதில் மணமானதும்கூட அங்கேயேதான்.

சிறு வயதிலேயே கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு ஹீமோகுளோபின் அளவும் குறைவாக இருந்ததால் முதல் குழந்தைக்கு அதிக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இதனால், என் உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 62 கிலோவாக இருந்த என் உடல் எடை முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு கட்டத்தில் 108 கிலோவாகக் கூடிவிட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்பதைத் தவிர்க்க இயலாமல் போக, அடுத்த குழந்தையும் இதேபோல் மருந்து மாத்திரைகள், சிசேரியன் என்றே ஆனது,” என்கிறார்.

“2 சிசேரியன், மருந்து, மாத்திரைகளால் உடல் எடை 108 கிலோவானது”

27 வயதிலேயே 2 குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட வெரோனிகாவுக்கு உடல் எடைதான் பிரச்னையாக இருந்து வந்துள்ளது.

உடல் எடை 100 கிலோவுக்கு அதிகமாக இருந்ததால் 30 வயதிற்குப் பிறகு மூட்டு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. கழுத்து வலிக்கு கழுத்துப் பட்டை, மூட்டு வலிக்குத் தனி பட்டை அணிவது கட்டாயமாகிப் போயுள்ளது.

“அதிகரித்த உடல் உபாதைகளால் வீட்டில் மாடிப்படி ஏறுவதை வெகுவாகத் தவிர்த்துவிட்டேன். நடப்பதைக்கூட முடிந்த அளவுக்குக் குறைத்துவிட்டேன். இருசக்கர வாகனத்தில் செல்ல முடிந்த இடங்களுக்கு மட்டுமே சென்று வந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

“உறவுகள், நட்புகள் கிண்டல் – குழந்தைகள் ஊக்கம்”

அதிக உடல் எடை காரணமாக உறவினர்கள், நண்பர்களின் கேலிக்கு ஆளான வெரோனிகா, உடல் உபாதைகளும் அதிகரித்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டி ஜிம்முக்கு செல்லத் தீர்மானித்தார்.

தொடக்கத்தில், கணவருடன் இணைந்தே ஜிம்முக்கு செல்லத் தொடங்கினார். அப்போது, பிரச்னை புதிய வடிவில் வந்துள்ளது.

“நான் ஜிம்முக்கு செல்வதைப் பார்த்து உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். சுமார் 3 மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

நாளடைவில் அது பெரிதாக, அவர் விலகிச் சென்றுவிட்டார். உறவுகள், நட்புகளின் கேலி, கிண்டல்கள், கணவரின் பிரிவு போன்றவற்றால் தனிமையில் உடைந்து அழுதிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் குழந்தைகள்தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் ஓராண்டுக்குப் பின்னர் நான் மீண்டும் ஜிம்முக்கு செல்லத் தொடங்கினேன்,” என்றார் வெரோனிகா.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

“ஒரே ஆண்டில் உடல் எடை 30 கிலோ குறைந்தது”

மன உறுதியுடன் ஜிம்முக்கு செல்லத் தொடங்கியதும் வெரோனிகா அன்னமேரியிடம் இருந்து உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தனிமை கொடுத்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் வெரோனிகாவை ஜிம்மே கதியென கிடக்கச் செய்துள்ளன. அப்போதெல்லாம்கூட பாடி பில்டிங் குறித்த எண்ணம் அவருக்கு உதிக்கவில்லை.

சரியான நேரத்தில் சரிவிகித உணவு, முறையான பயிற்சி என்பன போன்ற பயிற்சியாளரின் ஆலோசனைகளை சரிவரக் கடைபிடித்த வெரோனிகாவுக்கு அடுத்த 6 மாதங்களிலேயே பலன் தெரிய ஆரம்பித்தது.

இதனால், கழுத்துப் பட்டை, மூட்டு வலிக்கான பட்டை போன்றவற்றை அணியத் தேவையில்லாமல் போய்விட்டது. இதுவே அவரது நம்பிக்கையை அதிகரிக்க, ஒருநாள்கூட விடாமல் பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். அதன் பலனாக, ஒரே ஆண்டில் உடல் எடையை 30 கிலோ வரை அவர் குறைத்திருக்கிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

“வாழ்க்கையில் திருப்புமுனை தந்த சென்னை பயணம்”

அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையான அந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. ஜிம்மில் பயிற்சி பெற்ற ஆண் பாடி பில்டர் ஒருவர், தேசிய போட்டி ஒன்றில் பங்கேற்க சென்னை வர, அவரது உதவியாளர்களில் ஒருவராகவே வெரோனிகாவும் சென்னை சென்றுள்ளார்.

அங்கு, அவரைக் கண்ட World Fitness Federation அமைப்பின் தமிழ்நாடு தலைவர் மோகன்குமார் ஊக்கப்படுத்த, அந்தத் தேசிய பாடி பில்டர் போட்டியின் மகளிர் பிரிவில் பங்கேற்றுள்ளார் வெரோனிகா. அந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் போட்டியாளர் வெரோனிகாதான். முதல் போட்டியிலேயே தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்து முத்திரை பதித்துள்ளார் அவர்.

அந்த தேசிய மகளிர் பாடி பில்டர் போட்டியில் பங்கேற்ற மற்ற அனைத்து வீராங்கனைகளுமே 19, 20 வயது என மிகவும் இளம் வயதினராக இருந்தனர். வெரோனிகாவின் வயதோ 39.

“வயதைப் பற்றிக் கவலைப்படாமல் உன் திறமையை வெளிப்படுத்து. உன்னால் சாதிக்க முடியும். ஏனெனில், பாடி பில்டிங் போட்டியில் இருக்கும் மற்ற வீராங்கனைகள் இளம் வயதினர் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

ஆனால், மணமாகி, 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துவிட்ட உன்னால் விரும்பியபடி தொடர்ந்து இத்துறையில் கவனம் செலுத்த முடியும்,” என்று மோகன்குமார் உற்சாகமூட்டியதாகக் கூறுகிறார் வெரோனிகா.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் 6-வது இடம்

பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய வெரோனிகாவுக்கு காலப்போக்கில் பளு தூக்குதலிலும் ஆர்வம் வந்துள்ளது.

இதையடுத்து, முறையான பயிற்சிக்குப் பின்னர் பளு தூக்கும் போட்டிகளிலும் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார். பாடி பில்டிங்கோ, பளு தூக்குதலோ எந்தப் போட்டியானாலும் வெரோனிகா பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.

மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தொடர்ச்சியாகப் பரிசுகளை வென்று வந்துள்ளார். அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

Indian Fitness Federation நிறுவனரும் அதன் பொதுச் செயலாளருமான ஜெகநாதனும் வெகுவாக ஊக்கப்படுத்தியதாக வெரோனிகா கூறுகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

வீட்டில் பொறுப்புள்ள தாய், விளையாட்டிலும் கவனம்

பாடி பில்டிங் துறையில் நுழைந்த நான்கே ஆண்டுகளில் வெகுவாக கவனம் ஈர்த்துவிட்ட வெரோனிகா அன்னமேரி, தனது வீட்டில் பொறுப்புள்ள தாயாக இருப்பதில் தவறியதே இல்லை. பிளஸ்டூ படிக்கும் மகள் தன அட்சயா, 9-வது வகுப்பு படிக்கும் மகன் கெவின் சந்தோஷ் ஆகியோரின் படிப்புக்காக தனது ஜிம் வேலையை அவர் விட்டுள்ளார்.

ஜிம்மில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்த அவர், குழந்தைகளின் படிப்புக்காக அந்தப் பணியில் இருந்து விலகியுள்ளார்.

காலை 5 முதல் 9 மணி, மாலை 5 முதல் 9 மணி என்ற ஜிம் பணி நேரம், தனது குழந்தைகளின் படிப்பு, டியூஷன் போன்றவற்றுடன் குறுக்கிடுவதால் அந்த வேலையை விட்டுள்ளார்.

தற்போது, அவரைப் போல உடல் எடையைக் குறைக்க வேண்டி பயிற்சி செய்வோருக்கு வீட்டிற்கே சென்று பயிற்சி அளிக்கும் வேலையை வெரோனிகா செய்து வருகிறார். இதன்மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டே அவர் குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

திருச்சியில் நடக்கவுள்ள போட்டிக்காகத் தயாராகிறார்

ஜிம் பயிற்சியாளர் வேலையை விட்டு வெரோனிகா ஏற்றிருக்கும் புதிய பணி, அவருக்கு உற்சாகமூட்டும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அவர்கள் ஊக்கம் தருவதோடு, பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான பண உதவிகளையும் செய்திருப்பதாக அவர் கூறுகிறார். ஓபன் ஆசிய மகளிர் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதில் அவர்களின் பேருதவியும் இருந்ததாகத் தெரிவித்தார்.

எலும்பு பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 3 மாதங்களாக கைவிட்டிருந்த பயிற்சியை, தற்போது அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். திருச்சியில் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய பாடி பில்டர் போட்டியில் சாதிக்கத் தயாராகி வருகிறார் வெரோனிகா அன்னமேரி.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

வெரோனிகா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட 4 ஆண்டுகள்

பாடி பில்டிங் துறையில் சாதிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் வெரோனிகா, 4 ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்து நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

தீராத உடல் உபாதைகளை ஏற்படுத்தும் உடல் எடையைக் குறைக்க வேண்டி ஜிம்முக்கு போகத் தொடங்கிய அவர், அதன் தொடர்ச்சியாக தனிப்பட்ட வாழ்க்கை தந்த வெறுமையால் ஜிம்மே கதியாக இருக்க, இன்று சர்வதேச அரங்கில் மின்னும் பெண்ணாக மாறியுள்ளார்.

“ஜிம்மிலும், பாடி பில்டிங் போட்டிகளிலும் அணியும் ஆடைகளே உறவுகள், நட்புகள் மத்தியில் என்னை அந்நியமாக்கிவிட்டன. சேலை அணியாத பெண்ணை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அவர்களிடம் இருந்து நானும் விலகிவிட்டேன்.

ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. தொடக்கத்தில் உறுதுணையாக இருந்த கணவரே, ஒரு கட்டத்தில் விலகிச் செல்ல உடைந்துவிட்டேன்.

இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டிருந்த நான், 2 குழந்தைகளுடன் தனிமரமாகிவிட்டதால் சுய பாதுகாப்புக்காக மொட்டை அடித்துக் கொண்டேன்.

பின்னர் ஆண்களைப் போலவே முடி திருத்திக் கொண்டேன். பெண்ணுக்கான அடையாளங்களாக சமூகம் கற்பித்திருந்த தளைகளில் இருந்து விடுபட்டதே என்னை படிப்படியாக தைரியசாலியாக மாற்றியது. பின்னாளில், சமூகத்தின் விமர்சனப் பார்வைகளை அலட்சியப்படுத்தி என் லட்சியத்தில் கவனம் செலுத்த அதுவே உதவியது,” என்கிறார் வெரோனிகா அன்னமேரி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »