Press "Enter" to skip to content

கோவை கொலை: சந்தேக நபர்களை சுட்டுப்பிடித்த காவல் துறை – என்ன நடந்தது?

கோவை மாநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட சந்தேக நபர்களில் இருவர் தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவர்களை சுட்டிப் பிடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோகுல் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியைக் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மனோஜும் கத்திக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் கோகுல் கொலை வழக்கை விசாரித்த தனிப்படையினர் இதுவரை ஜோஸ்வா, கௌதம், ஹரி, பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா, டேனியல் ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

அதில் இருவர் யூசுப் என்கிற உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் காவல்துறையினர் அவர்களை சுட்டுப் பிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “கோகுல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் குன்னூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படையினர் சென்றபோது அவர்கள் அங்கிருந்து ஊட்டிக்கு சென்றது தெரிய வந்தது என்றார்.

இதையடுத்து தங்களை பின்தொடர்ந்து காவல்துறையினர் ஊட்டிக்கு வருவதை அறிந்த சந்தேக நபர்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் கோத்தகிரி வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். இது குறித்து நீலகிரி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குள் சந்தேக நபர்கள் ஏழு பேரும் பிடிபட்டதாக கோவை காவல் ஆணையர் கூறினார்.

காவல் துறை சுட்டது ஏன்?

கோவை கொலை

இதையடுத்து கோத்தகிரியில் இருந்து கோவை ஏழு பேரையும் அழைத்து வரும்போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என சிலர் கேட்டதால் வனக்கல்லூரி அருகே வாகனம் நிறுத்தப்பட்டது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை எடுத்து யூசுப் என்கிற உதவி ஆய்வாளரை சந்தேக நபர்களில் இருவர் தாக்கினர். காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக ஜோஸ்வா, கௌதம் ஆகிய இருவரை நோக்கி சுட்டதில் அவர்களின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது என்று ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து காயம் அடைந்த இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸிடம் பிடிபட்டுள்ள ஏழு பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேறு யாருக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம் என்று ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கோவை கொலை

மற்றொரு கொலை சம்பவம்

இந்த நிலையில், கோவையில் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த கொலை தொடர்பாக ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.

அந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை கேரளா சென்றுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் ஆணையர் பதிலளித்தார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சி

இதற்கிடையே, கோவை வந்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே. அண்ணாமலை, 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் வாங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி முறையீடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பாரதிய ஜனதா கட்சி இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது,” என்று கூறி அரசு பரிவர்த்தனை ஆவணங்கள் சிலவற்றை காண்பித்தார்.

இன்னும் 15 நாட்களுக்குள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வெளியே அதிகாரிகளின் புகைப்படங்களுடன் கூடிய ஊழல் தகவல்களை போஸ்டராக ஒட்டி உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்வோம் என்று அண்ணாமலை எச்சரித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் வெளிப்படையாகவே வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி பேசுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இலங்கை தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு பிரதமர் மோதி தனி கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் சிக்கல்களுக்கு 13வது சட்ட திருத்தம் தான் தீர்வு என்றும் இதை பிரதமர் மோதி, மத்திய அமைச்சர்கள் எல் முருகன், ஜெய்சங்கர் ஆகியோர் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பிரபாகரன் தொடர்பாக பழ நெடுமாறன் கூறிய கருத்திற்கு பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகிறார். குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. ஆளுநர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி தான் எந்த முடிவும் எடுப்பார் என்று அண்ணாமலை கூறினார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »