Press "Enter" to skip to content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு திமுக ஆட்சிக்கான அங்கீகாரமாக இருக்கும் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.

நீண்ட அரசியல் அனுபவம், பல முறை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ள நீங்கள் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் ஈரோடு மாநகர் என்பது என்னுடைய சொந்த ஊர், நான் பிறந்து வளர்ந்த இடம். நான் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவராகவும் ஒரு முறை செயல் தலைவராகவும் இருந்துள்ளேன். என்னைப் பொருத்தவரை நான் பிறந்த ஊருக்கு நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

மறைந்த என் மகன் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். பல விஷயங்களை செய்ய முடியவில்லை. அதற்குள் இயற்கை அவரைப் பிரித்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற பணிகளை என்னுடைய சொந்த ஊருக்குச் செய்ய வேண்டும், என் ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்ட நிலையில் உங்களின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? அதற்கான காரணமாக என்ன இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 21 மாதங்களில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பெண்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மோதியின் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. மதத்தால் மக்களைப் பிரிக்க வேண்டும், சாதியால் பிரிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவராக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பின்மை கொண்டவர்கள். அதோடு கடந்த 18, 20 மாதங்களில் என் மகன் ஈரோட்டில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

800 இடங்களில் மின் விளக்கு அமைக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியுள்ளன. சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சரி செய்யப்பட வேண்டியிருக்கிறது. அதனால் அந்தப் பணிகளைத் தொடர என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள்.

நீங்கள் வெற்றி பெற்றால் மூன்று ஆண்டுகள்தான் பதவிக்காலம் உள்ளன. அதற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக என்ன செய்துவிட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

ஏற்கெனவே பல அரசு திட்டங்கள் அமைச்சர்கள் அளவில், அதிகாரிகள் அளவில் கையெழுத்தாகி நிற்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான பணிகளைத் தொடங்க முடியாமல் போய்விட்டது. என் மகன் மறைந்த இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதனால் தமிழ்நாடு அரசால் ஈரோட்டில் எந்தப் பணிகளையும் தொடங்க முடியவில்லை. மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டார்.

திமுக - காங்கிரஸ்

தேர்தல் பிரசாரத்தில் திமுக – காங்கிரஸ் ஒருங்கிணைப்பு எந்த அளவில் உள்ளது? பல இடங்களில் திமுக அமைச்சர்கள் தனியாக பிரசாரம் மேற்கொள்வதாக செய்திகள் வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை திமுக – காங்கிரஸ் என்ற வேறுபாடே கிடையாது. திமுகவினர் கை சின்னத்தில் நிற்கும் என்னை அவர்களின் சொந்த வேட்பாளராகவே கருதி மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள்.

திமுக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் எல்லோரும் ஒன்றிணைந்தே பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உறவு சரியில்லை என விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒன்றாகவே வேலை செய்து வருகிறோம்.

இந்த இடைத்தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகத்திலும் பணப் பட்டுவாடாவிலும் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. அதற்கு உங்களுடைய பதில் என்ன?

திமுக மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் சொல்வார்கள். இன்றைக்கும் அதைத்தான் சொல்கிறார்கள். திமுகவினர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கை சின்னத்திற்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் இருந்தது. மிகத் தாமதமாக தேர்தல் களத்திற்கு வந்தார்கள். தேர்தல் களம் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. திமுக கூட்டணி வேட்பாளராக இருக்கும் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், தாங்கள் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை உணர்ந்ததால் திமுக மீது பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவார்கள். பாஜகவின் குற்றச்சாட்டிற்குச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் தேர்தல் களத்திலேயே இல்லை. வீண் பொய் குற்றச்சாட்டைப் பரப்பி வருகிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்கிற கருத்து நிலவுகிறதே. அதற்கு தங்களின் பதில் என்ன?

மிகத் தவறான கருத்து. எந்த காங்கிரஸ் தலைவர்கள் வராமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் குழுயின் தலைவர் அழகிரி ஏற்கெனவே இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தற்போது மூன்றாவது நாளாக உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளர் தினேஷ் குண்டு ராவ் இங்கு உள்ளார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்னுபிரசாத் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் வருவதில்லை எனச் சொல்வது வடிகட்டிய பொய். சிலர் வேண்டுமென்றே தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.

திமுக முதலில் பிரசாரத்தை தொடங்கியது, அதிமுக சற்று தாமதமானாலும் தற்போது தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

என்னைப் பொருத்தவரையில் இந்தத் தேர்தல் மிகச் சுலபம் தான். ஈரோடு மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து விடுவார்கள். நான் தேர்தல் பிரசாரத்திற்கு வார்டு வார்டாக செல்கிறபோது அதைப் பார்க்க முடிகிறது.

முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், ராகுல்காந்திக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்தத் தேர்தல் சுலபமான ஒன்றுதான்.

திமுக ஆட்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு, உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஓர் ஆண்டு கழித்து இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவை திமுக ஆட்சி மீதான மக்களின் மதிப்பீடாக எடுத்துக் கொள்ளலாமா?

கண்டிப்பாக இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு கொடுக்கின்ற அங்கீகாரமாகவும் ஆதரவாகவும் இருக்கும். திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »