Press "Enter" to skip to content

பகாசூரன்: அனுராக் கஷ்யப் பகிர்ந்த ட்வீட்டால் எழுந்த சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படம் குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் பகிர்ந்த ட்விட்டர் பதிவு ஒன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பகாசூரன். இதில் இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிய அடிப்படையிலான படங்களை எடுத்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் மோகன் ஜியின் இந்த படமும் சர்ச்சை கலந்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பகாசூரன் படத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ‘பெண்களின் ஒழுக்கம்’, ‘பெண் கெளரவம்’ என அதீத பழைய பார்வை மற்றும் பிற்போக்கான கருத்துக்களைப் படம் முன் வைக்கிறது பல பல்வேறு ஊடக விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களையும் பலர் பகிர்ந்திருந்த நிலையில் பகாசூரன் படம் குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அனுராக் கஷ்யபின் ட்வீட்

இந்தியில் பாம்பே வெல்வெட், கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர், மர்மெர்சியான் போன்ற படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். குறிப்பாக அவரின் கேங்ஸ் ஆஃப் வசேப்பூர் திரைப்படம் பாலிவுட்டில் புதிய கோணத்திற்கான கதவுகளை திறந்து வைத்ததாக பாராட்டுகளை பெற்றது. சமீபமாக காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரிக்கும் அனுராக் கஷ்யப்பிற்குமான விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புஷ்பா மற்றும் காந்தாரா போன்ற படங்கள் பாலிவுட்டை அழிப்பதாக அனுராக் கஷ்யப் தெரிவித்தாக ஒரு செய்தியை பகிர்ந்து விவேக் அக்னி ஹோத்ரி, ‘பாலிவுட்டின் ஒரே பெருமகன் அனுராக் கஷ்யப்பின் கருத்துக்களை நான் ஒப்புக் கொள்ளவில்லை’ என பகிர்ந்திருந்தார்.

அதற்கு பதில் ட்வீட் செய்திருந்த அனுராக் கஷ்யப், “இது உங்களின் தவறில்லை. உங்களின் படத்திற்கான ஆய்வுகளை போலவே எனது ட்வீட்டையும் நீங்கள் ஆய்வு செய்துள்ளீர்கள், நீங்களும் உங்களின் ஊடகமும் ஒன்றுதான். அடுத்த முறை சரியான ஆய்வை மேற்கொள்ளவும்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இருவருக்கான விவாதம் தொடர்ந்து கொண்டே சென்று சர்ச்சையை உருவாக்கியது.

“பகாசூரன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெற்கிலிருந்து வரும் செய்தியின் மூலம் நான் கேள்வியுற்றேன். எனது நண்பர் நட்டி மற்றும் இயக்குநர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் ,”என்று ட்விட்டரில் அனுராக் கஷ்யப் பதிவிட்டுள்ளார்.

‘வெளிப்படையாகவும் முற்போக்கு கருத்துக்களையும் பேசும் அனுராக் கஷ்யப் சாதி ரீதியாக தவறான கண்ணோட்டத்தில் படங்களை எடுக்கும் இயக்குநரின் படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளதாக’ டிவிட்டரில் பலர் அனுராக் கஷ்யப்பை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு அனுராக் கஷ்யப் படத்தை பார்க்காமல் அதுகுறித்து வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும், விவரம் தெரியாமல் படம் குறித்து பாராட்ட வேண்டாம் எனவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு சாரர் இது அனுராக் கஷ்யப்பின் ட்வீட் என்று நம்ப முடியவில்லை என்றும், அவரின் கருத்துக்களுக்கு இது முரணாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

“கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர் படத்தை எடுத்த அனுராக் கஷ்யப்பா இது?” என்றும் சிலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ஒரு சிலர் பகாசூரன் படத்தின் கதையோடு அனுராக் கஷ்யப் ஒத்துப் போகவில்லை அதனால்தான் ‘வாய்வழியாக வந்த செய்தி’யின் மூலம் படம் நன்றாகவுள்ளது என்று கேள்வியுற்றேன் என தெரிவித்துள்ளார் என்றும் பதிவிட்டுள்ளனர்.

மறுபுறம் மோகன் ஜியின் ரசிகர்கள் அனுராக் கஷ்யப்பின் ட்வீட்டுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். படம் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தையே முன் வைக்கிறது என்றும், பலர் படத்தை பார்க்காமல் அதை விமர்சனம் செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »