Press "Enter" to skip to content

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் இந்தியாவை வேறு வகையில் பாதிக்கிறதா?

  • இக்பால் அகமது
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், EPA

2022 பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. அதை சமாளிக்க சர்வதேச சந்தையை விட குறைந்த விலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்தது.

ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு காரணமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தது.

ஆனால், இந்தியாவின் இந்த முடிவு இப்போது கவலையை ஏற்படுத்தும் விஷயமாகவும் ஆகக்கூடும்.

கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி முகமை தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், வெளிநாட்டு வர்த்தகத்தை ரூபாயில் செய்யும் மோதி அரசின் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அமிதாப் சிங் இதைப்பற்றி விளக்கமாக கூறுகிறார்.

தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ள, இந்தியாவிலும் ரஷ்யாவிலும் முன்பு வர்த்தகம் எவ்வாறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் அவர்.

இந்தியா தனது பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்துள்ளது. ஆனால் இந்த வணிகத்தின் முறை என்னவென்றால், இந்தியா தனது ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தும் அதே அளவு பணத்திற்கு ரஷ்யாவிற்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்யும். எனவே உண்மையான பணப் பரிமாற்றம் நடக்கவில்லை.

ஆனால், 2022 பிப்ரவரிக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத்தொடங்கியதில் இருந்து நிலைமை மாறிவிட்டது.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி

கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

“இதுவரை இந்தியா ரஷ்யாவில் இருந்து ஒரு சதவிகித கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது,” என்று பேராசிரியர் அமிதாப் சிங் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தினமும் சுமார் 12 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்குகிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி ரஷ்யாவிலிருந்து சமையல் எண்ணெய் மற்றும் உரங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

ஆனால் இரண்டாவது கவலை என்னவென்றால் இறக்குமதி அதிகரித்து வரும் அதே நேரம் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இறக்குமதி சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் ஏற்றுமதி சுமார் 14 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் உள்ளூர் பணம்யில் (ரூபாய் மற்றும் ரூபிள்) வர்த்தகம் செய்ய முடிவு செய்திருந்தன.

இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கி 2022 ஜூலையில் இதை அறிவித்தது. கூடவே ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் Vostro கணக்குகளை திறக்க அனுமதித்தது.

ரஷ்ய வங்கிகளில் குவியும் இந்திய ரூபாய்

இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கு டாலருக்கு பதிலாக ரூபாயில் தொகையை செலுத்தும் வசதியை வோஸ்ட்ரோ கணக்கு மூலம் பெறுகின்றன. இந்தியாவில் Vostro கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ரஷ்யாவுடன் ரூபாய் மூலமான அதிக கொடுக்கல் வாங்கல் நடக்கவில்லை. ஏனெனில் இந்தியாவின் அதிக இறக்குமதி காரணமாக இந்திய ரூபாய் ரஷ்யாவில் அதிகமாக குவிந்து வருகிறது.

தங்களிடம் ரூபாய் அதிகமாக சேர்வதை ரஷ்யாவின் வங்கிகள் விரும்பவில்லை.

இந்தியா இதுவரை சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது, அந்த பணம் ரஷ்ய வங்கிகளில் கிடக்கிறது என்று பேராசிரியர் அமிதாப் சிங் கூறுகிறார்.

“தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த இந்திய பணத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு, ரஷ்யா பயன்படுத்த முடியாது. அதனால், ரஷ்யாவிடம் வைப்பீடு செய்யப்பட்டுள்ள ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரஷ்ய பணமான ‘ரூபிளின்’ மதிப்பும் குறைந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

பல தசாப்தங்களாக ரஷ்யாவில் வசிக்கும் மூத்த செய்தியாளர் வினய் சுக்லா, ரஷ்ய வங்கிகள் இரண்டாம் கட்ட தடைக்கு பயப்படுகின்றன என்று கூறுகிறார்.

இன்னொரு காரணத்தைக் குறிப்பிடும் வினய் சுக்லா, ரஷ்யாவில் மக்களின் விருப்பங்கள் மாறிவருவதாகவும், இந்திய தொழிலதிபர்களால் ரஷ்ய மக்களுக்கு விருப்பமான பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் கூறுகிறார்.

“இதுவரை இந்தியாவில் இருந்து வந்த அல்லது வரக்கூடிய பல பொருட்களை சீனாவில் இருந்து ரஷ்யா இப்போது இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்,” என்று வினய் சுக்லா குறிப்பிட்டார்.

இந்திய ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

மௌனம் ஏன்?

ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா, அந்த கச்சா எண்ணெய்யை இந்தியாவில் சுத்திகரித்து மேற்கத்திய நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்தியா தற்போது இதன் மூலம் டாலர்களை சம்பாதித்து வருவதால், இந்தியாவில் யாரும் இது குறித்து கவலை தெரிவிக்கவில்லை என்று பேராசிரியர் அமிதாப் சிங் கூறுகிறார். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது என்கிறார் அவர்.

முன்னதாக இந்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து ரஷ்யாவிடம் கொடுத்து வந்தன. இந்திய வங்கிகளுக்கு சிங்கப்பூரில் கணக்கு இருந்தது. ஆனால் ரஷ்யாவுடன் வணிகம் செய்ய முடியாது என்று அமெரிக்கா அதன் மீது தடை விதித்தது. தற்போது ஹாங்காங் வங்கி மூலம் பணம் செலுத்தும் முறை செயல்பட்டு வருகிறது. அது நீண்ட காலம் நீடிக்காது என்று பேராசிரியர் அமிதாப் சிங் தெரிவித்தார்.

“நீண்ட கால அடிப்படையில் இது இந்தியாவுக்கு கவலையளிக்கும். கூடவே அது பொருளாதாரத்திற்கு தீங்கும் விளைவிக்கும்,”என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக இந்திய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் கடந்த மாதம் ஒரு கூட்டத்தை நடத்தினர். ஆனால் குறிப்பிடத்தக்க முடிவு எதுவும் வெளியாகவில்லை.

திர்ஹாமில் பணம் செலுத்துதல்

தற்போது இரு நாடுகளாலும் இதற்கான எந்த தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பேராசிரியர் அமிதாப் சிங் கூறினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை பெரிய அளவில் இறக்குமதி செய்து ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பணம்யான திர்ஹாம் மூலம் ரஷ்யாவுக்கு பணம் செலுத்தி வருகிறது. ஆனால் இதுவும் நீண்ட காலம் நீடிக்காது என்று பேராசிரியர் அமிதாப் சிங் குறிப்பிட்டார்.

“ரஷ்ய வங்கிகளில் ரூபாய் வைப்பீடு செய்யப்படுவதைப் போலவே, திர்ஹாமும் தொடர்ந்து வைப்பீடு செய்யப்பட்டால், ரஷ்ய வங்கிகள் அவற்றை என்ன செய்யும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

என்ன தீர்வு?

பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நாடுகளுக்கு இடையே ஒரு நியூ டெவெலெப்மென்ட் வங்கி உருவாக்கப்பட்டது. அதில் பிரிக்ஸ் நாடுகள் உள்ளூர் நாணயத்தில் வணிகம் செய்யலாம் என்று பேராசிரியர் அமிதாப் சிங் சுட்டிக்காட்டினார்.

ஆனால் சீனா தனது வங்கிகளில் கடுமையான விதிகளை அமல்படுத்துகிறது. கூடவே சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரியது என்பதால் அதன் உதவியின்றி இது வெற்றி பெற முடியாது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் வர்த்தக சமநிலை பராமரிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் அது சாத்தியமில்லை, ஏனெனில் இந்தியாவால் தனது ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை. கூடவே இறக்குமதியையும் குறைக்க முடியாது.

“ரஷ்யாவின் மத்திய வங்கி உள்ளூர் நாணயத்தில் சர்வதேச வர்த்தகம் செய்ய புதிய துறையை உருவாக்கியுள்ளதாக புதன்கிழமை அறிவித்தது. இந்த முடிவின் மூலம் விஷயங்கள் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார் செய்தியாளர் வினய் சுக்லா.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »