Press "Enter" to skip to content

அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட சிக்கல் – இந்தியாவின் பசுமை ஆற்றல் திட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Reuters

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா பசுமை ஆற்றல் பயன்பாட்டில் கோலோச்சி நிற்கும் என பல லட்சிய திட்டங்களை பிரதமர் மோதி அறிவித்திருந்தார்.

அதாவது ‘நெட் ஜீரோ’ என்று சொல்லக்கூடிய பசுமைக் குடில் வாயுவில் மேலும் கார்பனை சேர்க்காத நிலையை 2070-ல் இந்தியா அடையும் என உறுதியளித்தார்.

பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேபோல 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா பாதியளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறியிருக்கும் என மோதி உறுதியளித்தார்.

மோதியின் இந்த பசுமை ஆற்றல் பயன்பாட்டு திட்ட அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் இந்தியாவின் தொழிலதிபர் கெளதம் அதானி. ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி, ‘அதானி க்ரீன் எனர்ஜி’ என்ற நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அதன்மூலம் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து 20230ஆம் ஆண்டிற்குள் சர்வதேச அளவில் பசுமை ஆற்றலில் கால் பதிக்கவுள்ளார். இந்த பணம் புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பு, மின்கலவடுக்கு (பேட்டரி)கள் தயாரிப்பு, சூரிய தகடுகள், காற்றாற்றல் மற்றும் பசுமை ஹைட் ரோஜனில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானிக்கு சமீபமாக எழுந்த சிக்கலால் இந்தியா தனது பசுமை ஆற்றல் திட்ட இலக்கை அடையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் தனது சந்தை மதிப்பை இழந்துள்ளன.

ஹிண்டன்பர்க் அறிக்கை கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அதானி குழுமத்தின் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது பொய்யானது என்றும் இது இந்தியா மீதான தாக்குதல் இது என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக ‘டோடல்எனர்ஜீஸ்’ என்ற பிரஞ்சு எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவனம் அதானி குழுமத்தின் பசுமை ஹைட்ரோஜன் திட்டத்தில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் திட்டத்தை, தற்போதைய சூழல் குறித்து மேலும் தெளிவு பிறக்கும் வரை நிறுத்தி வைத்துள்ளது.

தங்களது முதலீட்டாளர்களை சாந்தப்படுத்த தங்களது நிறுவனம் தற்போது நிதி சிக்கலை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

“பசுமை ஆற்றல் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை” என அதானி குழுமம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தியாவின் பருவநிலை திட்டத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை தற்போதைய நிலையில் சொல்ல இயலாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“பசுமை ஆற்றல் சந்தையில் அதானி குழுமம் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் சில புதிய முதலீடுகள் தாமதமாகலாம். அதேபோல அதிகம் பணம் திரட்ட முடியவில்லை என்றால் அவர்கள் திட்டமிட்ட பசுமை ஆற்றல் முதலீடுகளில் தாக்கம் ஏற்படலாம்,” என இன்ஸ்ட்டியூட் ஆஃப் எனர்ஜி எக்னாமிக்ஸ் அண்ட் ஃபினான்சியல் அனலிஸிஸின் விபுதி கார்க் தெரிவிக்கிறார்.

ஆனால் தற்போதைய சூழலில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்

adani

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆற்றல் மாற்றம்தான் உலகில் பெரிதாக இருக்கும். இந்தியா போன்று அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அதன் தொழில் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அதேபோல வெப்ப அலை போன்ற அதி தீவிர வானிலைகளையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதும் மின்சாரத்திற்கான தேவையை அதிகரிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார தேவை இருமடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் நிலகரியை உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே அளவிற்கு நிலகரி பயன்பாடும் அதிகமாகவுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரம் முக்கால்வாசி நிலக்கரியை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா மேலும் அனல் மின் நிலையங்களை கட்டுமானம் செய்கிறது. 2070 ‘நெட் சீரோ’ நிலையை அடைய இந்தியாவுக்கு ஒவ்வொரு வருடமும் 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது என்கிறது சர்வதேச ஆற்றல் முகமை. அது தற்போதைய முதலீட்டை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

அதானி குழுமத்தை தவிர்த்து பசுமை ஆற்றல் சந்தையில் அம்பானி குழுமமும் கால்தடம் பதித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் 80பில்லியன் அமெரிக்க டாலர்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தில் செல்விட திட்டமிட்டுள்ளார்.

டாடா குழுமமும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் அதீத தேவைக்கு இன்னும் அதிகப்படியான நிறுவனங்கள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“நமக்கிருக்கும் மிகப்பெரிய ஆற்றலை பூர்த்தி செய்ய இந்த சந்தையில் சில பெரிய நிறுவனங்கள் மற்றும் சில சிறிய நிறுவனங்கள் என அனைத்தும் தேவை,” என்கிறார் டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் கொள்கை ரிசர்ச் ஆய்வுக் கழகத்தை சேர்ந்த அஷ்வினி கே ஸ்வெயின்.

எனவேதான் அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள சிக்கல் பிற சிறிய நிறுவனங்களுக்கான வாய்ப்பாக உள்ளது என்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள பருவநிலை ஆற்றலுக்கான நிதியத்தை சேர்ந்த டிம் பக்லி.

பிற தேசிய நிறுவனங்கள், “தங்களின் உள்ளூர் திறனுடன் சர்வதேச மூலதன அனுகலை விரிவுப்படுத்தி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மற்றும் அதற்கான அமைப்புகளில் முதலீடு செய்யலாம்.” என்கிறார் அவர்.

இந்தியா தற்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் என இரண்டும் சேர்த்து 400 கிவாட் ஆற்றலை தயார் செய்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலமாக மட்டும் 500 கிவாட் ஆற்றலை உற்பத்தி செய்ய முயற்சித்துள்ளது. இது ஒரு துணிச்சலான இலக்கு. பெரிதும் நிலக்கரி மற்றும் எண்ணெய்யை நம்பிக் கொண்டிருந்த ஒரு நாடு இந்த இலக்கை எட்டுவது எளிதானது அல்ல.

இந்தியா தனது நிலக்கரி பயன்பாட்டை விரிவுப்படுத்துவதை விடுத்து, தனது புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான இலக்கை நோக்கி செயல்படலாம். எடுத்துக்காட்டாக இந்தியாவில் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. அதற்கு பகலில் சூரிய ஆற்றலை பயன்படுத்தலாம் என்கிறார் ஸ்வெயின்.

“இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய பயணம் பாராட்டும் விதமாக உள்ளது. இதில் சில தாமதங்கள் ஏற்படலாம் ஆனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது.” என்கிறார் விபூதி கார்க்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »