Press "Enter" to skip to content

கருணாநிதியின் பேனா சிலை அமைத்தால் ‘கடலுக்கு நல்லது’ – அரசு சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடற்கரையிலிருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது.

இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது.

பேனா நினைவுச் சின்னம்

இதனைச் சுட்டிக்காட்டி, சூழலியல் ஆர்வலர்கள், பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜன. 31ஆம் தேதி இத்திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மீனவ சங்கங்கள், வணிக சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை பேசவிடாமல் அங்கு குழுமியிருந்த திமுகவினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த கூட்டத்தில், “கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் நான் அதை உடைப்பேன்” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். இது அன்றைய தினத்தின் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், கருத்துக் கேட்புக் கூட்ட நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு தெரிவித்தனர், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தனர் போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இத்திட்டத்திற்கு 22 பேர் ஆதரவும் 11 பேர் எதிர்ப்பும் தெரிவித்திருப்பதாக, அக்குறிப்பில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

மேலும், “பேனா சிலையை கடலுக்குள் அமைத்தால் அதனை உடைப்பேன்” என சீமான் பேசியதும் அரசின் குறிப்பில் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான்

பட மூலாதாரம், SEEMAN

அதேபோல, பாஜகவின் மாநில மீனவர் பிரிவைச் சேர்ந்த முனுசாமி என்பவர், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையுடன் பேனா நினைவுச் சின்னத்தின் உயரத்தை ஒப்பிட்டுப் பேசியதால் கூட்டத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்ததாக, அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களுள் பலரும் திட்டத்தை எதிர்ப்பதற்கு பதிலாக சூழலியல் தாக்கங்களை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், “பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைப்பதால் சர்வதேச சுற்றுலாத்துறையின் கவனத்தை ஈர்க்கும்” என திட்டத்திற்கு ஆதரவாக திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பேசினார்.

இத்திட்டத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தால் சூழலியலுக்கு சாதகமான சூழலே நிலவும் என சிலர் அக்கூட்டத்தில் பேசியிருக்கின்றனர்.

பொதுமக்கள் சார்பாக கலந்துகொண்ட தண்டையார்பேட்டையை சேர்ந்த இளங்கோ என்பவர், இத்திட்டம் அமைந்தால் சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டும் நிலையில், “இத்திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் மேம்படும்” என கூறியிருக்கிறார்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு எழும்போது, பேசவிடாமல் கூச்சலிடும் ஒரு நபர்

அதேபோன்று, பழவேற்காடு மீனவர் பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவர் கூறுகையில், “முன்மொழியப்பட்ட பேனா நினைவுச் சின்னம் கடல் அரிப்பைத் தடுக்கும் அமைப்பாக செயல்படும். உயிரினப் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும். கட்டுமானத்தின் காரணமாக மீன்வளங்களும் பெருகும்” என தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு பல மீனவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சில மீனவ சங்கங்கள் ஆதரவாகவும் பேசியுள்ளன.

“இந்த பேனா நினைவுச் சின்னம் பாம்பன் பாலம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதை காணொளி காட்சிகளில் கண்டறிந்ததிலிருந்து இத்திட்டத்திற்கான வடிவமைப்பு முறை கடல் சூழலுக்கு சாதகமாக உள்ளது” என, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் மகேஷ் என்பவர் தெரிவித்தார்.

திமுகவை பெரும்பான்மையான நேரங்களில் விமர்சித்துவந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “கடல்சார் பிரச்னைகளை கருத்தில்கொண்டு இத்திட்டம் நிறுவப்பட வேண்டும் என விரும்புவதாக” தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், “இத்திட்டத்தளம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் வருவதாக” கூறி, இந்திய அரசின் உத்தரவின்படி விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே அப்பகுதிகளில் நினைவுச் சின்னங்கள் அமைக்க முடியும் என்றும், “இது விதிவிலக்கான சூழ்நிலை அல்ல” எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீன்கள், இறால்கள், ஆமைகள் போன்ற கடல்வளத்திற்கும் இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »