Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: “ஓராண்டு நிறைவு நாளில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடக்கலாம்” – எச்சரிக்கும் உளவு அமைப்பு

பட மூலாதாரம், Reuters

  • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு பிப்ரவரி 24ஆம்தேதி நிறைவடையவுள்ளது. அன்றைய தினம் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று யுக்ரேன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
  • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து, விரைவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, உலகின் கூட்டு நிலைக்கு இழைக்கப்பட்ட “அவமானம்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஷ் தெரிவித்துள்ளார்.
  • விளாதிமிர் புதினின் “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மறைமுக அச்சுறுத்தல்களையும்” குட்டெரெஷ் கண்டித்தார்.
  • இன்று யுக்ரேனிய தலைநகர் கியவில் அங்குள்ள தலைவர்களை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் சந்திக்கவுள்ளார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ரஷ்ய தரப்பில் இருந்து ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று யுக்ரேனிய உளவு அமைப்பு எச்சரித்திருக்கிறது.

ஒரு உள்ளூர் செய்தித் தளத்திற்கு யுக்ரேன் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் கைரிலோ புடானோவ் அளித்த பேட்டியில், ரஷ்யா “பிப்ரவரி 23-24 தேதிகளில் சிறிய ஏவுகணைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது” என்று கூறினார்.

“யுக்ரேனியர்கள் இதுபோன்ற தாக்குதல்களை இதற்கு முன்பு பலமுறை பார்த்துள்ளனர். எனவே அவை எங்களுக்கு “அசாதாரணமான ஒன்று அல்ல” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், யுக்ரேனுக்கு வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கியவுக்கு வந்து யுக்ரேனிய அதிபரை சந்தித்து விட்டுச் சென்ற நிலையில் இன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கிய்வ் வந்திருக்கிறார். அவர் யுக்ரேனி தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அழுத்தம் தரும் ஸெலென்ஸ்கி

யுக்ரேன் ரஷ்யா போர்

பட மூலாதாரம், EVN

யுக்ரேனிய அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கி “ராஜீய மாரத்தான்” போல தமது தேசத்துக்கு ஆதரவு கோரி பல நிலைகளில் பல நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக பரந்த அளவிலான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான தமது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமது சமீபத்திய மாலை உரையில், பாகிஸ்தான், உகாண்டா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் தான் நடத்திய சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளை அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக் உடனான தனது சமீபத்திய கலந்துரையாடலைப் பற்றிப் பேசும்போது, “பாதுகாப்பு தளவாடங்களின் வேகமான விநியோகம் ஏற்படுத்தும் தாக்கத்தை பிரிட்டன் போன்ற எங்களின் அனைத்து கூட்டாளி நாடுகள் புரிந்து கொண்டால் அது மிகவும் நன்றாக இருக்கும்,” என்றார்.

மேலும் யுக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதியை உறுதிப்படுத்தும் தமது வேலைகளை முன்னிலைப்படுத்திய அவர், ரஷ்யா உலகளாவிய உணவு பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

ஐ.நா கண்டனம்

யுக்ரேன் ரஷ்யா

பட மூலாதாரம், Reuters

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பேசிய அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஷ், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகின் “கூட்டு எண்ணத்துக்கு” இழைக்கப்பட்ட “அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடுகள், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என குட்டரெஷ் கூறினார்.

“சுழல் போல நடக்கும் இந்த மோதல்” சாத்தியமான விளைவை ஏற்படுத்தக் கூடியது என்பது “தெளிவான செய்தி மட்டுமின்றி தற்போதைய ஆபத்தும் கூட” என்று அவர் விவரித்தார்.

யுக்ரேன் மீதான படையெடுப்பு தொடங்கி ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், யுக்ரேன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேறக் கோரும் ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை எப்படியும் தோற்கடிக்க மேற்கு நாடுகள் விரும்புவதாக கிரெம்ளின் (ரஷ்ய அதிபர் மாளிகை) குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான கிரெம்ளின் தூதர் வசிலி நெபென்சியா, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முழு உலகையும் போரில் மூழ்கடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்த செய்தி பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் குட்டரெஷ், “யுத்தம் தீர்வல்ல. அதுவே ஒரு பிரச்னை தான். யுக்ரேனில் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். யுக்ரேனியர்கள், ரஷ்யர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு அமைதி தேவை,” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »