Press "Enter" to skip to content

3 ஆண்டுகள் மகனோடு ஒரு வீட்டில் அடைபட்டு வாழ்ந்த தாய்: காரணம் என்ன? உளவியல் பாதிப்பு என்ன?

பட மூலாதாரம், ANI

இந்திய தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில் ஒரு வித்தியாசமான விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரு தாய் தன் மகனுடன் மூன்று ஆண்டுகளாக வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவந்துள்ளார். கணவர் வேறு வீடு எடுத்து தனியாக அருகே வசித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுபவை:

• இந்த பெண்ணின் மகனுக்கு 2015-2016 இல் ஆஸ்துமா ஏற்பட்டது.

• கொரோனாவுக்குப் பிறகு பயம் காரணமாக கணவரை வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை.

• இந்த பெண் ஒரு இல்லத்தரசி. அவரது கணவர் வேலை செய்கிறார்.

• கணவர் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறார்.

• உணவு பொருட்களுக்கு கணவர்தான் ஏற்பாடு செய்துவந்தார்.

• கொரோனா காலம் முடிந்ததும், தேர்வெழுதுவதற்காக குழந்தையை பள்ளிக்கு அனுப்புமாறு கணவர் கேட்டுக் கொண்டார். ஆசிரியரிடம் கூறி தேர்வை இணையத்தில் நடத்த முயற்சிப்பதாக அப்போது அந்தப் பெண் கூறியுள்ளார்.

கிழக்கு குருகிராம் காவல்துறை உதவி ஆணையர் மருத்துவர் கவிதா, குடும்பத்தின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று பிபிசியிடம் கூறினார்.

இந்த நபர் இந்த விஷயத்தில் குழந்தைகள் நலக் குழுவின் (CWC) உதவியை நாடியதாக, குடும்பத்தின் எந்த உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த குடும்பம், காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழு உதவியுடன் மீட்கப்பட்டது.

முழு விவகாரம்

“மகனுக்கு ஆஸ்துமா இருப்பதால் கொரோனாவின் போது அவனை வெளியே அனுப்பினால் அவதிப்படுவான் அல்லது இறந்துவிடுவான் என்று இந்தப்பெண் பயந்தார். கொரோனா முடிந்ததும் அந்த பெண்ணுடைய கணவர் எல்லாவற்றையும் விளக்கினார். ஆனால் ஒருவேளை அவருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது. அதன் பிறகு கணவர் உதவியை நாடினார்,” என்று மருத்துவர் கவிதா குறிப்பிட்டார்.

இந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்ட போது ஓர் அறையில் குப்பைகள் குவிந்திருந்தன என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

வீட்டை அவர் சுத்தம் செய்யவில்லை என்பது இதற்கு பொருள் அல்ல. துடைப்பதாலோ அல்லது பெருக்குவதாலோ தூசி காரணமாக மகனுக்கு ஆஸ்துமா அதிகமாகிவிடுமோ என்று அவர் பயந்திருக்கிறார்.

தமது குழுவினர் அந்தப்பெண்ணையும், குழந்தையையும் குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அந்தப் பெண், “எங்களிடம் வந்ததன்மூலம் நீங்கள் சிறப்பான வேலையை செய்துள்ளீர்கள். நான் மிகவும் பயந்துபோயிருந்தேன். இப்போது கொரோனா இல்லை” என்று கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது. அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குருகிராமில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் புதிதல்ல என்று உளவியலாளர்களும், மனநல மருத்துவர்களும் கூறுகின்றனர்.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் இரண்டு சகோதரிகள் தொடர்புடைய விவகாரம் செய்திகளில் இடம்பெற்றிருந்தது. தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பிறகு இந்த இரண்டு சகோதரிகளும் சுமார் ஆறு மாதங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தனர்.

பெண்ணின் வீடு

பட மூலாதாரம், ANI

மனம் மற்றும் உடல் மீதான விளைவுகள்

ஒரு நோய் வந்துவிடுமோ என்ற பயம் ஒருவருக்கு இருந்தால், அத்தகைய நிலை ‘ஹைபோகாண்ட்ரியாசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூருகின்றனர்.

குழந்தைக்கு கோவிட் வந்துவிடுமோ என்று இந்தப் பெண் பயந்ததாகவும், அதன் காரணமாக மூன்று ஆண்டுகள் மகனையும் தன்னையும் வீட்டில் பூட்டிக் கொண்டதாகவும் உளவியல் நிபுணர் மருத்துவர் நிஷா கன்னா கூறுகிறார். அவர் குழந்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதையும் அந்தப்பெண் மன அளவில் நிலையற்றவராக இருந்தார் என்பதையும் இது காட்டுகிறது.

அதே சமயம், இதை ஒருவித ஃபோபியா அல்லது பயம் என்று சொல்லலாம் என்றும் கொரோனா காலத்தில் இதை பலரிடம் தாம் பார்த்ததாகவும் மனநல மருத்துவர் சௌம்யா முத்கல் கூறுகிறார்.

“அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இது ஒரு மனநலப் பிரச்னையாக இருக்கலாம். அதே சமயம் இந்தப் பெண் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும்பொருட்டு இயல்பு வாழ்க்கை வாழ்வதை தடுத்துள்ளார்.”

ஒரு குழந்தை சமூக வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டால், அது என்ன வகையான விளைவை ஏற்படுத்தும்?

”இந்த குழந்தைக்கு 10 வயது என்று கூறப்படுகிறது. இந்த வயதில் குழந்தைகள் வெளியில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இது குழந்தையின் மீது சுமத்தப்பட்டதா அல்லது குழந்தை தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதைச் செய்ததா என்பதை புரிந்துகொள்வது அவசியம். அது எப்படி இருந்தாலும் குழந்தை வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குழந்தையின் மன ஆரோக்கியத்தை பாதித்திருக்கக்கூடும்,” என்று மருத்துவர் சௌம்யா முத்கல் குறிப்பிட்டார்.

அத்தகைய சூழ்நிலையில் குழந்தையின் மீது பல விளைவுகள் ஏற்படலாம் என்று இரண்டு மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

ஒரு குழந்தை நீண்ட காலம் சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டால். அதன் ஆளுமையும் பாதிக்கப்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.

• குழந்தை இண்ட்ரோவெர்ட் அதாவது அதிகம் மனம் விட்டுப்பேசாத ஆளாக மாறலாம்

• சமூகத்துடன் உறவாடுவதில் சிரமம் ஏற்படலாம்.

• குழந்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்திருந்தால், யாரோ ஒருவர் தன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சம் இருக்கலாம்.

• பய உணர்வு

• நோய் வந்துவிடுமோ என்ற பயம்

• தூய்மையில் சிக்கல்

• படிப்பில் தாக்கம்

பெண்ணின் வீடு

பட மூலாதாரம், ANI

“குழந்தை குடும்பத்தின் மீது நம்பிக்கையை இழக்கலாம். ஏனென்றால் குழந்தையின் பாதுகாப்புக்காக மூன்று ஆண்டுகள் இந்த நிலையில் அது வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தன்னைவிட மிகவும் முன்னேறியவர்களாக இருக்கும் வெளியில் உள்ள குழந்தைகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதற்கு அதிர்ச்சியும் ஏற்படும்.”

இந்த சூழலில் பிரமை ஏற்படக்கூடும் என்றும், அந்தப்பாதுகாப்பின்மை உணர்வை குழந்தை மீது செலுத்தி அதைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுவீர்கள் என்றும் கூறுகிறார் மருத்துவர் நிஷா கன்னா.

வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தாலும் அவர் எங்கிருக்கிறார் என்று திரும்பத் திரும்ப கேட்டு தெரிந்து கொள்ளும் போக்கும் பலரிடம் காணப்படுகிறது.

அந்தப்பெண்ணுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, கணவர் ஏன் இந்த நடவடிக்கையை முன்னதாகவே எடுக்கவில்லை என்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பெண்ணும், குழந்தையும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் ஏதேனும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைப் பார்த்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »