Press "Enter" to skip to content

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

பட மூலாதாரம், DINESH GUNAWARDENA FACEBOOK

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகின்ற யோசனையொன்றை, அரசாங்கத்திலுள்ளவர்கள் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதில் உண்மை இருக்கின்றதா?

ஷன்ன ஜயசுமன: உண்மையிலேயே, பிரதமர் பதவியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பிலுள்ள எமது நண்பர்கள் எம்மிடமும் அவ்வாறான யோசனையொன்று முன்வைத்திருந்தார்கள்.

தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டுமொரு முறை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதாக அவர்கள் கூறினார்கள். தலைவலிக்கு, தலையணையை மாற்றினால், தீர்வு கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அதைவிடுத்து, பிரதமரை மாற்றினால் மாத்திரம், இந்த நாட்டிலுள்ள பிரச்னைகள் தீரும் என நாம் நினைக்கவில்லை. அது மாத்திரமல்ல, பிரதமரை மாற்றும் இந்த யோசனைக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம்.

மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, ஓய்வு பெறுவதே சிறந்ததாக அமையும். அப்படியென்றால், நாட்டிற்காக அவர் ஏதேனும் செய்திருந்தால், அந்த நற்பெயர் பாதுகாக்கப்படும் என்பதே எமது நம்பிக்கை.

மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA’S MEDIA

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து, தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி சுயாதீன குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன தற்போது செயற்பட்டு வருகின்றார்.

ஷன்ன ஜயசுமனவின் இந்த கருத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவிக்கு கொண்டு வரும் முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த கருத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவிக்கு கொண்டு வரும் முயற்சி உண்மையிலேயே முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பலரும் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகின்றமை குறித்து, ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வினவியிருந்தார்கள்.

ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் பிரதமராக போவதாக கூறப்படுகின்றது?

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க: (சிரிக்கின்றார்) இதற்கான பதில் இவ்வளவு தான்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சிரித்து விட்டு, இதற்கான பதில் இவ்வளவு தான் என கூறி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இலங்கையில் மீண்டும் பிரதமராகின்றாரா மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம், DINESH GUNAWARDENA FACEBOOK

நாமல் ராஜபக்ஷவின் பதில்

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இதற்கு பதிலளித்தார்.

”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையிலும், ஆளும் கட்சி என்ற வகையிலும் பிரதமர் ஒருவரை நாம் நியமித்துள்ளோம். பிரதமர் ஒருவர் இருக்கின்றார். பிரதமர் ஒருவர் இருக்கின்ற போது, மற்றுமொரு பிரதமரை தேடுவதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது” என நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA’S MEDIA

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹண லியனகேவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமருக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கைகளோ அல்லது அழுத்தங்களோ பிரயோகிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியின் ஒரு அங்கமே இந்த கருத்து எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »