Press "Enter" to skip to content

நீட் விலக்கு: “பிரதமர் மோதியிடம் இதைத்தான் பேசினேன்” – அமைச்சர் உதயநிதி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை இன்று மாலையில் சந்தித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நீட் விலக்கு மசோதா தொடர்பான தமிழக மாணவர்களின் மனநிலையை விளக்கியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர் உதயநிதி. அதன் விவரம்:

“கடந்த முறை சென்னைக்கு வந்தபோது, டெல்லி வந்தால் தன்னை சந்தித்து விட்டுப் போகும்படி பிரதமர் கூறியிருந்தார். அதன்படி இப்போது அவரை சந்தித்தேன்.

பிரதமரின் தாயாரின் மறைவுக்கு அவரிடம் இரங்கல் தெரிவித்தேன். தமிழ்நாடு முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது என்று பிரதமர் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் விளையாட்டுத் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டார். ரூ. 25 கோடி மதிப்பிலான முதலமைச்சர் கோப்பைக்கான 15 விதமான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருவதாக பிரதமரிடம் கூறினேன்.

உதயநிதி ஸ்டாலின்

அடுத்தமுறை கேலோ இந்தியா நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு வழங்குங்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் கிளையை சென்னையில் நிறுவுங்கள் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமரிடம் பேசியபோது, அவர் சில விளக்கங்களை கொடுத்தார். அவரிடம், ‘தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான். அதை தெரிவிக்க வேண்டியது எனது கடமை’ என்றேன். இந்த விஷயத்தில் திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று அவரிடம் கூறினேன்” என்றார் உதயநிதி.

இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பியபோது, மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ள மத்திய அரசின் செயல்பாடு குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு உதயநிதி, “இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு, அடிக்கல் நாட்டியது ஒன்றிய பிரதமர். இதை மக்களிடம் சொன்னது மட்டுமே நான். இது பற்றி நான் பிரதமரிடம் பேசவில்லை. தகவல் உரிமை சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நான் எதுவும் பேசவில்லை,” என்றார்.

“அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ நான் எதுவும் பேசவில்லை,” என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் உதயநிதி தெரிவித்தார்.

பிரதமரிடம் பேசியபோது, தொகுதிக்கு ஒரு சின்ன (மினி) விளையாட்டரங்கு அமைக்கும் தமிழக அரசின் முன்மொழிவு குறித்து கூறியதாகவும் அதை எப்படி பராமரிப்பீர்கள் என்று பிரதமர் தன்னிடம் கேட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார்.

அந்த விளையாட்டரங்குகளை அரசே பார்த்துக் கொள்ளுமா தனியார் பராமரிக்குமா என்று பிரதமர் கேட்டபோது அது குறித்து தாம் விளக்கியதாக உதயநிதி குறிப்பிட்டார்.

இதையடுத்து தாம் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் உதயநிதி கூறினார்.

பேனா சின்னம் கேள்வியை தவிர்த்த அமைச்சர்

அமைச்சர்

மக்கள் பிரச்னைகள் பல தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், கடலுக்குள் பேனா சின்னம் அமைப்பது அவசியமா என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் உதயநிதி, “அது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு” என்று மட்டும் பதிலளித்தார்.

பிறகு அதே செய்தியாளர், தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், கடலுக்குள் பேனா சிலை அமைப்பதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்துவது பற்றி மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளிப்பதை உதயநிதி தவிர்த்தார்.

முன்னதாக, இன்று காலையில் இந்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சித்திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாடு திட்டங்கள் மற்றும் பயிற்சிகள், மகளிர் சுய உதவிக்குழு திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் அமைச்சர் உதயநிதி விவாதித்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, ஐஏஎஸ், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷிணி, ஐஏஎஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை காலையில் டெல்லி வந்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டெல்லிவாழ் தமிழ் சங்க நிர்வாகிகள், முத்தமிழ் பேரவை நிர்வாகிகள், டெல்லி தமிழ் கல்விக்கழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அதைத்தொடர்ந்து மாலையில் அவரை டெல்லியில் பணியாற்றி வரும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்ற பிறகு டெல்லிக்கு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வந்திருப்பதால் அவரது தலைநகர் வருகை அரசியல் தளத்தில் பரவலாக கவனிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »