Press "Enter" to skip to content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆளும் திமுக கூட்டணியின் வெற்றி எதை காட்டுகிறது?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி. இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

வாக்குகள் இன்னமும் எண்ணப்பட்டுவரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 74 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சுமார் 25,000 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

சுமார் 2,27,000 வாக்காளர்களைக் கொண்ட ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகின. தற்போது வாக்கு எண்ணிக்கையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்துவரும் வாக்குகளைப் பார்க்கும்போது பதிவான வாக்குகளில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்று வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.

அ.தி.மு.க. தவிர களத்தில் இருந்த மற்ற பிரதான கட்சிகளான நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகியவை சொற்ப வாக்குகளையே பெற்றிருக்கின்றன.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 1,50,800 வாக்குகள் பதிவாகின. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வே.ரா. 67,300 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்துவந்த த.மா.காவின் யுவராஜ் 58,396 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கோமதி 11629 வாக்குகளையும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் 10,005 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், இந்த முறை தி.மு.க. – காங்கிரஸ் வேட்பாளர் தனக்கு அடுத்த வேட்பாளரைவிட கூடுதலாகப் பெறும் வாக்குகளின் வித்தியாசமும் வாக்குகளின் சதவீதமும் மிக அதிகமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்ததும், அந்தத் தொகுதியில் தனது அடுத்த மகனை நிற்க வைக்கவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விரும்பினார். ஆனால், அவரையே போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தியது. திருமகன் ஈவேரா உயிரிழந்ததால் ஏற்பட்ட அனுதாபம், ஓரளவுக்கு வாக்குகளை ஈ.வி.கே.எஸ்.சிற்குப் பெற்றுத்தரும் என்பது ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக, இந்தத் தேர்தலை மிகப் பெரிய கௌரவ பிரச்னையாக தி.மு.க. எடுத்துக்கொண்டது. இதையடுத்து, ஒன்றிரண்டு அமைச்சர்களைத் தவிர, அனைத்து அமைச்சர்களும் இந்தத் தொகுதிக்கு தேர்தல் பணிகளை கவனிக்க அனுப்பப்பட்டனர்.

ஒவ்வொரு அமைச்சரும் வெறும் இரண்டு, மூன்று வார்டுகளைப் பார்த்துக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு கண்ணில்படும் இடங்களில் எல்லாம் அமைச்சர்கள் தென்பட்டனர்.

இந்தத் தேர்தலில் அந்தத் தொகுதியில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் செலுத்திய கவனத்தைவிட, தி.மு.கவினர் அதிக கவனம் செலுத்தினர். கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சிகள் பணியாற்றுகிறார்களா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலையே படாமல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இதையெல்லாம் விட மிக முக்கியமான காரணம், தொகுதியில் ஆறாக ஓடிய பணம். இதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமே இருக்கவில்லை. ஒரு கட்சி ஒரு வாக்கிற்கு ஐயாயிரம் ரூபாய் பணம், வெள்ளி விளக்கு, கொலுசு, உடைகள் என வாக்காளர்களுக்கு பரிசளித்து, வாக்குகளைக் கேட்டது. மற்றொரு கட்சி, மூவாயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

இரண்டு கட்சிகளுமே தேர்தல் பணிமனைகளில் ஆட்களை அமரவைத்து தினமும் சம்பளம் கொடுப்பதைப் போல 500 ரூபாய் வரை வழங்கினர். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அதுவே தினசரி இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தது.

பத்து நாட்களில் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை இந்த இடைத்தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்தது. இது தவிர, வாக்காளர்களுக்கு வாக்கிற்காக அளிக்கப்பட்ட பணம் தனி. பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கப்பட்ட கதைகளும் உலா வந்தன.

இதுதவிர, முக்கியமான தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும்போது, கூட்டத்தைத் திரட்ட அளிக்கப்பட்ட பணமும் பெரிய அளவில் இருந்தது.

ஈரோடு கிழக்கு ஒரு நகர்ப்புறத் தொகுதியாக இருந்ததாலும், குறிப்பிட்டுச் சொல்லும்வகையில் முக்கியமான பிரச்னைகள் ஏதும் இல்லை என்பதாலும் இரு கட்சிகளுமே மாநில அளவிலான பிரச்னைகளையே தங்கள் பிரசாரத்தில் முன்வைத்தன. அ.தி.மு.கவினர் பிரசாரத்தைத் துவங்கும்போதே, “விடியா தி.மு.க. அரசு” என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரத்தை மேற்கொண்டனர்.

தி.மு.கவைப் பொறுத்தவரை, மகளிருக்குப் பேருந்து கட்டணம் இலவசம், பால் விலை குறைப்பு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற நிறைவேற்றிய வாக்குறுதிகளைச் சொல்லியும், மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறியும் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஊடகப் பேட்டிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்க அ.தி.மு.கவின் வேட்பாளர் தென்னரசு ஊடகங்களிடமிருந்து விலகியே இருந்ததும் பின்னடைவாக இருந்தது. இது தவிர, இதே காலகட்டத்தில் அ.தி.மு.க. யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு, அது தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவையும் அ.தி.மு.கவுக்கு பாதகமாக இருந்தன. தேர்தல் நெருங்கிய நிலையில், வழக்கின் முடிவு எடப்பாடிக்கே சாதகமாக வந்தாலும் கூட, அது பெரிய அளவில் உதவவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, எளிய முறையில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பது, அதி காலையிலேயே முக்கியமான சந்திப்புகளில் பதாகைகளுடன் நின்று வாக்கு சேகரிப்பது என்ற பாரம்பரிய முறைகளில் வாக்குசேகரித்தனர். கடந்த முறை பெற்ற சுமார் 11,600 வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெறுவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரங்களில் பேசிய சில சர்ச்சைக்குரிய கருத்துகள் அங்கிருந்த சில அமைப்புகள் எதிர்ப்புக்குரலை எழுப்ப காரணமாக அமைந்தது.

தேர்தல் முடிவுகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே வெற்றி என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், “இந்த இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். ஆகவே, திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு தர வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் தந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தன்னை மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல பேசிய பேச்சுக்கு மக்கள் இடைத்தேர்தல் மூலம் நல்ல பாடத்தை வழங்கியுள்ளார்கள்.

கடந்த 20 மாதகால தி.மு.கவின் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு அங்கீகாரம் தர வேண்டும் இந்த தேர்தலை இடைத்தேர்தலாக மட்டுமல்லாமல் இந்த ஆட்சியை எடைபோட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பாருங்கள் என்றேன். ஆகவே மக்கள் நல்ல எடைபோட்டு, இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும்வகையில் நல்ல வெற்றியை தந்துள்ளனர். விரைவில் சந்திக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பெய்த பணமழையைப் பார்க்கும்போது இந்த ஆட்சிக்குத் தந்த மதிப்பெண்ணாகவோ, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாகவோ கருதினால், தி.மு.க. கூட்டணி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாக அமையும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »