Press "Enter" to skip to content

அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் மதிப்பின் திடீர் உயர்வு பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையுமா?

பட மூலாதாரம், Getty Images

பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை, பொருளாதார ரீதியில் இன்று படிப்படியாக முன்னேற்றத்தை கண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 351 ரூபா 72 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 95 சதமாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சி பீடம் ஏறும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 177 ரூபாவில் காணப்பட்டது.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி, அதாவது சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 201 ரூபா 89 சதமாக காணப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் பாரிய சரிவை சந்தித்திருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 202 ரூபா 09 சதமாக காணப்பட, அடுத்த நாள் 229 ரூபா 50 சதம் வரை சடுதியாக வலுவிழந்தது.

இந்த பெறுமதி வலுவிழப்பானது, தொடர்ந்தும் பல மடங்குகளாக வலுவிழந்தது, இலங்கை பொருளாதாரத்தை பாரிய சவாலுக்கு உட்படுத்தியிருந்தது.

குறிப்பாக 2022ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையான காலத்திற்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபா 76 சதமாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் பிரகாரம், 364 ரூபா 76 சதமாக நிர்ணயிக்கப்பட்ட அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, தனியார் முகவர் நிலையங்கள் மற்றும் கருப்பு சந்தையின் ஊடாக சுமார் 410 ரூபா வரை சென்றிருந்தது.

2019ம் ஆண்டிற்கும், 2022ம் ஆண்டிற்கும் இடையிலான காலப் பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 187 ரூபா வரை வலுவிழந்திருந்தது.

இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் வசம், டாலர் கையிருப்பு பாரியளவில் குறைவடைந்ததை அடுத்து, நாடு பாரியதொரு தாக்கத்தை எதிர்நோக்கியிருந்தது.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

டாலர் கையிருப்பு குறைய காரணம் என்ன?

இலங்கையின் எதிர்நோக்கிய ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆகிய காரணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பிரதான காரணங்களாக அமைந்திருந்தது.

எனினும், சுதந்திர இலங்கையின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக மக்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள்.

சுற்றுலாத்துறை, ஆடை, தேயிலை, ரப்பர் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கை தமக்கான வருமானத்தை பெரிதும் நம்பியிருந்தது.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது.

ஈஸ்டர் தாக்குதல் காரணமாக, சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 166,975 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்த போதிலும், அடுத்த மாதம் அந்த தொகையானது 37,802ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.

அதையடுத்து, 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 71,370 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்த நிலையில், அந்த மாதம் கோவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணி கூட வருகைத் தரவில்லை.

எனினும், டிசம்பர் மாதம் 393 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

2019ம் ஆண்டு முழுமையாக 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்த நிலையில், 2020ம் ஆண்டு மொத்தமாகவே 5 லட்சத்து 7 ஆயிரத்து 704 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தார்கள்.

2021ம் ஆண்டு அந்த தொகையானது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 495ஆக குறைவடைந்தது.

இதனால், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முழுமையாக இழக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமது வருமானத்தை இழந்து இலங்கை, கையிருப்பிலிருந்த டாலர் உள்ளிட்ட சொத்துக்களையும் இழந்தது.

இது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.

எனினும், இன்று சுற்றுலாத்துறையில் சாதகமான முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளது.

2023ம் ஆண்டின் கடந்த இரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 162 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சார வெட்டு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்று, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச தொடர்புகள் மற்றும் புதிய கொள்கைகளின் ஊடாக அந்நிய வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடனுதவிகள், சுற்றுலாத்துறை மேம்படுத்தல், சர்வதேசத்திற்கு வழங்க வேண்டிய கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி எப்படி சடுதியாக அதிகரித்தது?

இலங்கை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை குறுகிய காலத்திற்கு செலுத்தாதிருக்கின்றமை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்துள்ளமை, வெளிநாட்டு பணியாளர்களின் வருமானத்தின் வருகை அதிகரித்துள்ளமை மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற உதவித் திட்டம் ஆகியவற்றினால் கிடைக்கப் பெற்ற டாலரினால் நாட்டின் கையிருப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு உதவி வழங்கும் வகையில், 400 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது சந்தையில் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.

”முக்கியமான காரணம், 400 மில்லியன் டாலரை, இலங்கையிலுள்ள 3 வங்கிகளின் ஊடாக வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உதவியாக வழங்கப்படும் இந்த தொகையை இறக்குமதிகளுக்காக பயன்படுத்த முடியும் என்ற ஒரு அறிவிப்பு வந்துள்ளது. என்னை பொறுத்த வரையில், ஏற்றுமதியில் கிடைத்த அதிகரிப்பு என்றும் நான் சொல்ல மாட்டேன். அந்நிய செலாவணி வந்தமைக்கான அதிகரிப்பு என்று சொல்வதையும் நம்பமாட்டேன். உலக வங்கி உதவி தொகையை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பானது, சந்தையில் ஒரு சாதகமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சந்தையில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. அதனாலேயே ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.” என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

இந்த ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை சாதகமாக பார்க்க முடியுமா? என பிபிசி தமிழ், பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் வினவியது.

”பார்க்கலாம். ஆனால், இது தற்காலிகமானது. வழக்கமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்லுமாக இருந்தால், இது அனைத்தும் ஆவியாகி விடும். ஏனென்றால், இலங்கை இப்போது கடனை திருப்பி செலுத்தவில்லை. இறக்குமதிகளை மிகவும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். அதனால் தான், ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதை போன்று காட்டுகின்றதே தவிர, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, ரூபாவின் பெறுமதி அதிகரிக்கவில்லை. இன்னுமொரு காரணம் இருக்கின்றது. இதுவரை காலமும் பணத்தை அரசாங்கம் அச்சிட்டது. ரூபாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டாலருக்கான கேள்வி அதிகரிக்கும். ரூபாவின் நிரம்பல் அதிகரிக்கின்றது, அவ்வாறான நிலையில் டாலர் வரவில்லை என்றால், டாலரின் பெறுமதி அதிகரிக்கும். இப்போது ரூபா அச்சிடப்படுவதில்லை. ரூபா அச்சிடாமையினால், ரூபாவின் நிரம்பல் குறையும் அல்லவா?. டாலரின் பெறுமதி குறைவடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.” என அவர் கூறுகின்றார்.

அவ்வாறாயின், நாடு உண்மையாகவே பொருளாதாரத்திலிருந்து மீளவில்லையா என பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியது.

”நிச்சயமாக இல்லை. இதுபோலியாக உருவாக்கப்பட்ட ஒரு நிலைமை. இதனை ஒரு சாதகமான நிலைமையாக பார்க்க முடியாது. இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது.” என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »