Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: திமுக தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த முட்டுக்கட்டை போடுமா?

  • விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் உள்ள இந்தி பேசும் பிகார் மாநில தொழிலாளர்கள், தமிழ்நாடு மக்களால் தாக்கப்படுவதாகவும் கொல்லப்படுவதாகவும் பரவிய போலிச் செய்தியியை குறிப்பிட்டு பிகார் மாநில முதலமைச்சாரன நிதிஷ்குமார் கவலை தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னை அரசியல் களத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிகார் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

கூடிவந்த எதிர்க்கட்சிகள்

கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர், பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் முக்கியத் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியம் உள்ள தலைவர்கள் இவர்கள்.

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மேடையில் பேசிய அனைவரும் தெரிவித்திருந்தனர். இந்தக் கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்றிருந்தார்.

தேஜஸ்வி இந்த கூட்டத்தில் பங்கேற்றதை பிகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சியான பாஜக விவாதத்திற்குள்ளாக்கியது. சட்டப்பேரவையில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா, “தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பிகார் துணை முதல்வர், தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பிகாரிகளுக்கு அவமரியாதையை சேர்த்துள்ளார்,” என்று பேசினார்.

மேலும் பாஜக உறுப்பினர்கள் விளக்கம் கேட்டு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு விளக்கம் அளித்து வெளியிட்ட காணொளியை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் எதிர்வினை

“அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

“இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காமல் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும் சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது,” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வடமாநில தொழிலாளர் விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “பிகார் தொழிலாளர்களின் விவகாரம் சமூக – பொருளாதார பிரச்னை. இந்த பிரச்னையால் அரசியல் ரீதியாக யாருக்கும் லாபம் கிடைக்காது என்று தெரிவித்தார்.”

“தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கான வாக்காளர்கள் கிடையாது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி என பல்வேறு கட்சிகளின் வாக்காளர்கள். அதனால் இந்த பிரச்னையை வைத்துக் கொண்டு பாஜகவோ பிற கட்சிகளோ வாக்குகளை அறுவடை செய்ய முடியாது” என்று தெரிவித்தார் ரவிந்திரன் துரைசாமி.

பணியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

‘பொறாமைதான் காரணம்’

பிகார் மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக பேசிய திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர்,” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ரவீந்திரன் துரைசாமி, “இந்த விவகாரத்தை தமிழ்நாடு சிறப்பாக கையாண்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை வேகமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயல்பாடுகளால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய அரசியலில் தாக்கம் செலுத்த நினைக்கும் திமுகவின் திட்டத்தில் எந்த தொய்வும் ஏற்படாது,” என்றார்.

பிகாரில் என்ன நிலைமை?

“வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த பாஜக முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் எதிர்பார்த்த பலன் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

பிகாரில் அரசுக்கு எதிராக பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. இந்த பிரச்னை மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவுக்கு” வரும் என பட்னாவில் இருந்து பிபிசியிடம் பேசிய செய்தியாளர் மணிகாந்த் தாக்கூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “பிகார் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் விரட்டியடிக்கப்பட்ட போது, அதை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடியது. இதேபோல் தமிழ்நாட்டிலும் பாஜக செய்ய நினைக்கிறது. ஆனால் அது எடுபடவில்லை.”

“அதே போல நிதீஷ் குமார் அரசுக்கும் பெரிய அழுத்தம் ஏற்படாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் பிகார் தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார். எனவே இந்த பிரச்னை ஓரிரு நாளில் அடங்கி விடும்,” என்று ஷ்யாம் தெரிவித்தார்.

கட்டுமானப் பணியாளார்கள்

பட மூலாதாரம், Getty Images

பாஜக என்ன சொல்கிறது?

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் மூலமாக தமிழ்நாட்டில் பாஜக ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளது என்று கூறுவது முட்டாள்தனம் என பாஜக தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உமாராவை கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. இவர் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில், “புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்பும் நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிர்வாகிகளான எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி ஆகியோர் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கடந்த காலங்களில் பேசியுள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர், “வட மாநில தொழிலாளர்களை வெளியேற்று” என்று விளம்பர ஒட்டி ஒட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால் வடமாநில மக்கள் பரவி வரும் போலி காணொளியை பார்த்து உண்மை என நம்பி அச்சப்படுகின்றனர்.

அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை முன்வைப்பதை அனுமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொய் பிரச்சாரங்களை தடுக்க பாஜக உறுதுணையாக நிற்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »