Press "Enter" to skip to content

ரொனால்டோவை வெளியேற்றிய மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தோல்வியை கொண்டாடும் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் மிக மோசமான தோல்விஐச் சந்தித்துள்ளது. அந்த அணியை லிவர்பூல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

உலக ரசிகர்களின் கவனம் பெற்ற பிரீமியர் லீக் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் – லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் நகரில் உள்ள ஆன்பீல்டு மைதானத்தில் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

புள்ளிப் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் அணி மூன்றாவது இடத்திலும், லிவர்பூல் அணி 5-வது இடத்திலும் உள்ளன. புள்ளி விவரங்களும், சமீபத்திய செயல்பாடுகளும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கே சாதகமாக இருந்தன.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பை எதையும் வெல்லாமல் இருந்த வறட்சியை ஒரு வாரத்திற்கு முன்பு கேரபாவ் கோப்பையை வென்றதன் மூலம் தணித்துக் கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி புதிய உத்வேகத்துடன் களம் கண்டது. அதற்கேற்றாற்போல், ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டினாலும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கையே சற்று மேலோங்கியிருப்பது போல் தோன்றியது.

ஆனால், 43-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் இளம் வீரர் கோடி கேக்போ முதல் கோலை அடித்ததும் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறிப்போனது. மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, லிவர்பூல் அணியோ தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

லிவர்பூல் வீரர்கள் அலையலையாக வந்து தாக்குதல் தொடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. அடுத்த நான்காவது நிமிடத்தில் டார்வின் நுனெஸ் அபாரமாகச் செயல்பட்டு காற்றில் பறந்து தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.

நான்கே நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்களை வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் லிவர்பூல் அணி 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதுமே லிவர்பூல் வீரர்கள் இன்னும் உற்சாகமாகத் தாக்குதல் ஆட்டத்தைத் தொடுத்தனர். இதன் பலனாக, 50-வது நிமிடத்தில் இளம் வீரர் கோடி கேக்போ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

லிவர்பூல் அணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் மனதளவில் சோர்ந்து போனது போல் தென்பட்டது. அந்த அணியின் தற்காப்பு பலவீனமாக இருப்பது போல் தோன்றியது.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லிவர்பூல் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா 66 மற்றும் 83-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.

டார்வின் நுனெஸ் 75-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடிக்க, பிரேசிலை சேர்ந்த நட்சத்திர வீரர் ரோபர்டோ `பிர்மினோ 88-வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

மனதளவில் தளர்ந்து போயிருந்த மான்செஸ்டர் யுனைடெட் வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அபாரமாகச் செயல்பட்டு, அந்த அணியின் நம்பிக்கையை சீர்குலைத்த லிவர்பூல் அணி முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததன் மூலம், லிவர்பூல் அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை முகமது சலா பெற்றுள்ளார். அந்த அணிக்காக இதுவரை மொத்தம் 129 கோல்களை அவர் அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்கு எதிராக லிவர்பூல் அணிக்கு அதிக கோல் அடித்தவரும் அவர்தான்.

2017-ஆம் ஆண்டில் லிவர்பூல் அணியில் முகமது சலா இணைந்த பிறகு அந்த அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். அந்த கிளப்பில் இணைந்த பிறகே கால்பந்து உலகில் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக முகமது சலா மாறினார்.

கால்பந்து மைதானம்

பட மூலாதாரம், Getty Images

மான்செஸ்டர் அணிக்கு எதிராக லிவர்பூல் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான். இதற்கு முன்பு 7-1 என்ற கோல் கணக்கில் வென்றதே லிவர்பூல் அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியைப் பொருத்தவரை, கடந்த 90 ஆண்டுகளில் அந்த அணியின் மிக மோசமான தோல்வியாக இது பதிவாகியுள்ளது. இதே கோல் கணக்கில் 3 முறை தோல்வி கண்டுள்ள மான்செஸ்டர் யுனைடெட், கடைசியாக 1931-ஆம் ஆண்டு வொல்வர்ஹேம்ப்டன் வான்டரர்ஸ் அணிக்கு எதிராக இதுபோன்ற படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

ரொனால்டோ

பட மூலாதாரம், Twitter

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மோசமான தோல்வியை நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரொனால்டோவை வெளியேற்றியதற்கான விலையை மான்செஸ்டர் யுனைடெட் அணி கொடுத்திருக்கிறது என்று பொருள்படும் வகையில் அவரது ரசிகர்கள் பலரும் ட்வீட் செய்துள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய ரொனால்டோ தற்போது சௌதி ப்ரோ லீக் போட்டிகளில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இன்றைய தேதியில் அவர் தான் உலகின் அதிக ஊதியம் பெறும் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »