Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: பொருளாதார ஏற்றத்தாழ்வு வடக்கு, தெற்கு மாநிலங்கள் இடையே அதிகரிப்பது தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துமா?

  • சிவகுமார் ராஜகுலம்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் பக்க விளைவாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் மாநிலங்களில் தாக்குதலுக்கு இலக்காவதாக எழும் குற்றச்சாட்டுகளால் அவ்வப்போது பதற்றமான சூழல் உருவாவதைத் தவிர்க்க முடிவதில்லை. இத்தகைய முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறக் கூடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற அண்ணாவின் முழக்கம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த காலம் உண்டு. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைக்குப் பிறகு பொருளாதாரரீதியில் இந்தியா பல அடிகள் முன்னே சென்றிருந்தாலும், அந்த வளர்ச்சி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் அதிவேகமாக முன்னேறி வருகின்றன. அவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத உத்தர பிரதேசம், பிகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா போன்ற வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன.

மனிதவள மேம்பாட்டு குறியீடு – ஓர் ஒப்பீடு

தனிநபர் வருமானம், கல்வி, ஆரோக்கியம் போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் வடக்கு, கிழக்கு மாநிலங்களைக் காட்டிலும் தெற்கு, மேற்கு மாநிலங்கள் சிறப்பான நிலையில் இருப்பதை மத்திய அரசின் பல்வேறு துறைகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன.

இந்தியாவில் மக்கள் தொகை

தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு சுமார் 2.25 லட்சம் ரூபாயாக இருக்கிறது. உத்தர பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் போன்ற வடக்கு, கிழக்கு மாநிலங்களின் தனிநபர் ஆண்டு வருமானம் அதில் சரிபாதிதான் என்கிறது மைய கட்டுப்பாட்டு வங்கியின் புள்ளிவிவரம்.

இந்தப் புள்ளிவிவரங்களையும் தாண்டி, வடக்கு – தெற்கு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை ஒன்றே போதும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி எத்தகையதாக இருக்கிறது என்பது அதன் மூலம் தெளிவாகிவிடும்.

இந்த சீரற்ற பொருளாதார வளர்ச்சியே கோடிக்கணக்கானோரை புலம்பெயர் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது. வளர்ச்சி குறைந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரம் தேடி வளர்ச்சியடைந்த தெற்கு, மேற்கு மாநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தின்போது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சொந்த ஊர் நோக்கிய புலம்பெயர் தொழிலாளர்களின் பயணமே இத்தகைய இடப்பெயர்வு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

சீரற்ற பொருளாதார வளர்ச்சி ஏன்?

வடக்கு vs தெற்கு என்பதை இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தெற்கு, மேற்கு vs வடக்கு, கிழக்கு மாநிலங்களிடையே பொருளாதார வளர்ச்சியில் ஏன் இந்தப் பெரிய வித்தியாசம் என்பது குறித்துப் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம்.

சோம வள்ளியப்பன்

அவர் கூறுகையில், “எல்லைப் பிரச்னை, இருவேறு மாறுபட்ட தீவிரமான காலநிலை போன்றவை வடக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. நடுங்க வைக்கும் குளிர்காலமும் வாட்டியெடுக்கும் கோடைகாலமும் உற்பத்தித் திறனை பாதிக்கின்றன. அதீத மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளும் அங்கே அதிகம்.

அதுவே தெற்கு, மேற்கு மாநிலங்களைப் பொருத்தவரை பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கையும் சாதகமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் சீரான காலநிலை, பாரம்பரியமாகத் தொடரும் வர்த்தகம், கடல்வழி வாணிபத் தொடர்புகள் போன்றவற்றால் இம்மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கின்றன,” என்றார்.

சிசு மரண விகிதம்

தமிழ்நாடு முன்னிலை வகிக்கக் காரணம் என்ன?

சோம.வள்ளியப்பன் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டைப் பொருத்தவரை கல்வியறிவு, மனித வளம், கலை, கலாசார பின்புலம், நீண்ட காலமாகத் தொடரும் செழுமையான ஆட்சி முறை, கடல்வழி வர்த்தகத் தொடர்புகள் போன்றவை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கீழை தேசங்களுடன் தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாணிபத் தொடர்பு இருந்து வருகிறது. அப்போதே தமிழ்நாட்டில் கடல்வழி வணிகத்திற்கு 6 துறைமுகங்கள் இருந்துள்ளன. சிறப்பான வாணிபத் தொடர்புகள் காரணமாக மதுரை மாநகரம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே தூங்கா நகரமாக இருந்து வருகிறது.

ஆறுகள், அணைகள் மூலம் பாசன வசதி பெருக்கப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழர்கள் எப்போதும் உற்பத்தித் திறன் மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அத்துடன், புதுப்புது வாய்ப்புகளை தேடிச் செல்வது அல்லது கிடைக்கும் வாய்ப்புகளைத் திறம்பட பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் தமிழர்கள் சிறப்பாகவே இருந்து வந்துள்ளனர்.

பொருளாதார தாராளமயமாக்கல் வந்தபோதும், வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் தமிழர்களின் இந்தத் திறனே மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. அதுவே தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்குக் காரணம்,” என்று விரிவான விளக்கம் அளித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல்

இயற்கையின் சாதகமும், முறையான அரசுகளும், மக்களின் தன்முனைப்பும் ஒன்று சேரவே, நாட்டின் ஒரு சில மாநிலங்கள் வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன. இதில் பின்தங்கிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயர்கின்றனர்.

அவ்வாறு வாழ்வாதாரம் தேடி மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்களால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பறி போகிறது, குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவது உண்டு. சில நேரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும்கூட நடந்தேறியுள்ளன.

மகாராஷ்டிராவில் பிகாரிகளும், கர்நாடகாவில் வடகிழக்கு மாநிலத்தவரும் தாக்குதலுக்கு இலக்கானது சமீபத்திய ஆண்டுகளில் நடந்தேறிய காட்சிகள். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களால் சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் வெறுப்பு அரசியல் சில அமைப்புகள் மற்றும் கட்சிகளால் முன்னெடுக்கப்படுவதும் இருந்தே வந்திருக்கிறது.

மணி

“2, 3 நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வரும்”

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பேசிய போது, “கர்நாடகாவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதுபோல் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அத்தகைய தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடக்காமலேயே பிரச்னை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

பண்பாட்டுரீதியாக முதிர்ச்சியான தமிழ்ச் சமூகமும் தமிழ்நாட்டு அரசின் உறுதியான நடவடிக்கைகளுமாகச் சேர்ந்து, தற்போதைய சர்ச்சையை 2 அல்லது 3 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்,” என்று உறுதியாகக் கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறுமா?

புலம்பெயர் தொழிலாளர் பிரச்னைகளால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வு தோன்றுவது அந்த நேரத்தில் தவிர்க்க இயலாததாகவே இருந்து வந்துள்ளது. இன தேசியவாதம் பேசும் சில உள்ளூர் அமைப்புகளே இந்தக் கசப்புணர்வை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறுமோ என்ற கவலையும் எழுவது இயல்பான ஒன்று.

அதுகுறித்து கேட்டபோது, “அதெல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் பிரச்னை அடங்கிவிடும். வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் அவரவர் பணியிடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களை முன்னிறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த முறையான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க மத்திய அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், குடும்ப சூழல் என்ன என்பன போன்ற விவரங்களைச் சேகரிப்பது அவசியம். இதற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்து தரவேண்டும்” என்று மூத்த பத்திரிகையாளர் மணி கூறினார்.

புலம் பெயர் தொழிலாளிகள்

பட மூலாதாரம், Getty Images

புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை எப்போது தீரும்?

புலம்பெயர் தொழிலாளர் பிரச்னைக்கு என்னதான் நிரந்தர தீர்வு என்று பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்ட போது, “20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு இருந்த நிலையில் தற்போது வடக்கு மாநிலங்கள் உள்ளன. அப்போது, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் சிறு சிறு வேலைகளை தமிழர்கள் செய்தது போலவே, இன்று வட மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.

இது ஒன்றும் நிரந்தரமல்ல. தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையினர் இன்று அமெரிக்கா, ஐரோப்பாவில் சிறப்பான வேலைகளில் பணிபுரிவது போல வட மாநிலத்தவர் அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பெறுவார்கள். அதாவது, பொருளாதார வளர்ச்சி எனும் தொடர் வண்டியில் தமிழ்நாடு முதல் பெட்டியில் பயணிக்கிறது என்றால், வட மாநிலத்தவர் 20-வது பெட்டியில் பயணிக்கிறார்கள். குறிப்பிட்ட ஓர் இலக்கை தமிழ்நாடு முதலில் எட்டினாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த இடத்தை வட மாநிலத்தவரும் அடைவார்கள்” என்று விளக்கம் அளித்தார்.

“மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது?”

மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், பாரதிய ஜனதா தனது அரசியல் நலனுக்காக நாட்டையே நாசம் செய்வதாகக் கடுமையாக சாடினார்.

“தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி காணொளியை பிகார் பாரதிய ஜனதாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டதும், தேசிய மற்றும் இந்தி ஊடகங்கள் பலவும் உண்மையை உறுதி செய்யாமல் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டதுமே இன்றைய நிலைக்குக் காரணம்.

தமிழ்நாடு மற்றும் பிகார் மாநில அரசுகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறப்பாகச் செயல்படுகையில் மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது?

பிரதமர் மோதியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை அடக்கியிருக்க வேண்டாமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »