Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி: பாஜக பிரமுகருக்கு முன்பிணை – இரு இளைஞர்களை கைது செய்த ஜமூயி, திருப்பூர் காவல் துறை

தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ரோ என்பவருக்கு 14 நாள் இடைக்கால பிணை வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வதந்தி தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இந்தி மொழியைப் பேசுவதற்காகத் தாக்கப்படுவதாக கடந்த வார மத்தியில் இருந்து வதந்திகள் பரப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் போன்ற பிரதான நாளிதழ்களே இது தொடர்பான உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் அதை செய்தியாக வெளியிட்டன.

இது, தமிழ்நாடு – பிகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பரவவிடப்பட்ட இந்த காணொளிக்களின் காரணமாக இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் பரவியது. பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பினர்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதற்குப் பிறகு, தமிழ்நாடு காவல்துறை விரிவான விளக்கங்களை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டது.

இதற்குப் பிறகு இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துவங்கின. இந்த செய்திகளை வெளியிட்ட தைனிக் பாஸ்கர் நாளிதழின் ஆசிரியர், தன்வீர் போஸ்ட் பத்திரிகையை நடத்திவந்த முகமது தன்வீர் ஆகியோர் மீது திருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகர் மனு

வட மாநில தொழிலாளர்கள்

இதே போன்ற போலிச் செய்தியைப் பரப்பிய பா.ஜ.கவின் உத்தர பிரதேச செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களைப் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. தன் மீது தமிழ்நாட்டில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் 12 வாரங்களுக்கு முன் பிணை வழங்கும்படி பிரசாந்த் சார்பில் கோரப்பட்டது.

அவ்வளவு நாட்கள் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்ததும் 4-6 வாரங்களுக்காவது முன் பிணை வழங்கும்படி கோரப்பட்டது. முன் ஜாமீனை ஒரு வசதியாகப் பயன்படுத்த முடியாது என்றும் நாளையோ, நாளை மறுநாளோ சென்னை சென்று தகுந்த நீதிமன்றத்தில் முன் பிணை பெறும்படி நீதிபதி தெரிவித்தார்.

வேண்டுமானால் ஒரு வாரம் முன் பிணை தருவதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, “அவர் ஒரு இளம் வழக்கறிஞர். 6 வருடங்களாகத்தான் வழக்கறிஞராக இருக்கிறார். அவருக்கு 3-4 வாரங்களாகவது முன் பிணை தர வேண்டுமென” அவர் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உம்ராவ் தனது ட்வீட்டை டெலீட் செய்து விட்டாலும், தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெறவில்லை என்றும் மன்னிப்புக்கோரவில்லை என்றும் அவருக்கு முன் பிணை வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, தான் தமிழ்நாட்டிற்குச் சென்றால் கைது செய்யப்படலாம் என பிரசாந்த் உம்ராவ் கருதுவதால், அவருக்கு 14 நாட்கள் இடைக்கால பிணை வழங்கப்படுவதாகவும் அதற்குள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி பிணை பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

பாயும் வழக்குகள், தொடரும் கைதுகள்

இதற்கிடையில், opindia என்ற இணைய தளம் இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவதாக திருநின்றவூரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர் கொடுத்த வழக்கில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

அமன்குமார் ரவிதாஸ் என்ற தனி நபர், பிரயாஸ் நியூஸ், சச்தக் நியூஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், அமன்குமார் ரவிதாஸை பிகார் காவல்துறை கைது செய்துள்ளது. யுவராஜ் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பலரை தேடி வருவதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் பிகார் இளைஞரை பிடித்த திருப்பூர் காவல் துறை

இந்த நிலையில், சிபிஎல் ஊடகம் என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான காணொளியை பதிவேற்றி வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை பரப்பியதை அந்நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் மீது மார்ச் 5ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். இதைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தின் சின்னகுண்டபள்ளி கிராமத்தில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், பிகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் உள்ள பன்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்து. அவரை உரிய விசாரணைக்கு பிறகு திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

பிகார் முதல்வரை சந்தித்த டி.ஆர். பாலு

திமுக

இன்று பிகாரில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, பிகார் மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு லேட்டக்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று அங்கு பணியாற்றிவரும் 150க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் உரையாடி அவர்களது பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »