Press "Enter" to skip to content

அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? “எதிர்விளைவு இருக்கும்” – எச்சரிக்கும் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி?

பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மார்ச் 5ஆம் தேதி அந்த கட்சியிலிருந்து விலகினார். அவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.

இதற்குப் பிறகு அவர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், இன்று தகவல் தொழிநுட்ப அணி நிர்வாகி திலீப் கண்ணன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வந்த நிலையில், கூட்டணி கட்சியிலிருந்து விலகியவர்களை அதிமுக சேர்த்துக் கொண்டது குறித்து பாஜகவை சேர்ந்தவர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இதைச் செய்திருக்கக்கூடாது என விமர்சித்தார்.

ஆனால், இரு கட்சிகளின் பிரதான தலைவர்கள் யாரும் கூட்டணி குறித்து ஏதும் சொல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். இந்த செயலுக்கும் எதிர்வினை இருக்கும்” என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

இதையடுத்து, அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

அதிமுக தகவல் தொழிநுட்ப அணியின் செயலரான சிங்கை ராமச்சந்திரன், “நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது?” என பதிவிட்டுள்ளார்.

அதிமுக வழக்கறிஞர் அணியின் இணைச் செயலரான ஆர்.எம். முருகவேல், “முதிர்ச்சி இல்லாத அரை வேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும். இது தொடர்ந்து, நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது. நடந்தால் நல்லது தான்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பாஜக சார்பில் விளம்பர ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதில், ‘எங்கள் அண்ணன் அண்ணாமலையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகியை அதிமுகவில் சேர்த்துக் கொண்டு, கூட்டணி தர்மத்தைப் போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை

மேலும் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தும் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நான்கு பேரைக் காவல்துறை கைது செய்தது.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் நெருங்கிவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாகச் சந்தித்தன. 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலையும் இரு கட்சிகளுமே இணைந்து எதிர்கொண்டன. இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பா.ஜ.கவிலிருந்து நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாயினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலிலும் இரு கட்சிகளின் கூட்டணி நீடித்தது.

ஆனால், இதற்குப் பிந்தைய பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.கவின் சில தலைவர்கள், தமிழ்நாட்டில் தாங்களே பிரதான எதிர்க்கட்சி என்று கூறியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

வேறு சில சமயங்களில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வெல்வோம் என்றும் பா.ஜ.கவினர் பேசி வந்தனர். இவையெல்லாம் உரசலை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாக தங்கள் முரண்பாட்டைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »