Press "Enter" to skip to content

அமெரிக்காவுக்கு சட்டவிரோத வழியில் செல்ல முயன்ற இளைஞர்கள் கடத்தல் கும்பலிடம் சிக்கியது எப்படி?

அமெரிக்காவுக்கு அனுப்புவதாகக் கூறி இளைஞர்கள் கடத்தப்பட்டு இந்தோனீசியாவுக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

35 வயதான சுக்ஜிந்தர் லட்சக்கணக்கான பிற இளைஞர்களைப் போல சிறந்த வாழ்க்கைக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர வேண்டும் என்று கனவு கண்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது ‘அமெரிக்கா’ என்ற வார்த்தையைக் கேட்டாலே சுக்ஜிந்தர் நடுங்குகிறார்.

“இப்போது அமெரிக்காவை பற்றி பேசினாலே எனக்கு பயமாக இருக்கிறது, எனக்கு முன்னால் யாராவது வெளிநாடு செல்வதைப் பற்றி பேசினால் உடல் நடுங்குகிறது. இது என்னுடைய எல்லாவற்றையும் அழித்துவிட்டது,”என்று அவர் கூறுகிறார்.

சுக்ஜிந்தர் அமெரிக்கா செல்லத் தேர்ந்தெடுத்த வழியே இந்த பேரிடருக்குக் காரணம்.

தரன் தாரனில் வசிக்கும் சுக்ஜிந்தர், அவரது உறவினர் ஒருவர் மூலம் பாலியில் வசிக்கும் சன்னி குமாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தன்னை மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாக சன்னி குமார் உறுதியளித்தார் என்று சுக்ஜிந்தர் தெரிவித்தார்.

சுக்ஜிந்தர் முதலில் பாலிக்கு செல்வார் என்றும் பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் முடிவானது. அவர் இதற்கு 45 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ஏமாற்றுவது பஞ்சாபில் புதிய விஷயம் அல்ல. எந்த முன்பணமும் செலுத்தாமல் பாலி அனுமதிச்சீட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. இதன் காரணமாக சுக்ஜிந்தர் இந்த வாய்ப்பை நம்பினார். ஆனால் அவர் நினைத்தே பார்த்திராத ஒரு திருப்பம் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது.

“நான் பாலிக்கு வந்தபோது சன்னி குமார் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அறையில் பூட்டி வைத்தார். அங்கு 23 நாட்கள் என்னை பிணைக் கைதியாக வைத்திருந்தார்கள்,” என்று சுக்ஜிந்தர் கூறுகிறார்.

சிறை வைக்கப்பட்ட நிலையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதன் காரணமாக தான் அமெரிக்காவை அடைந்துவிட்டதாகவும், சன்னி குமாருக்கு 45 லட்சம் ரூபாய் கொடுக்குமாறும் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் சொன்னார். அமெரிக்காவிற்கு குடிபெயரும் அவரது கனவு சிதைந்தது. மேலும் அவர் மிகவும் கஷ்டப்பட்டு வீடு திரும்பினார்.

தரன் தரானைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங்கும் இதே போன்ற கதையைச் சொல்கிறார். அவரும் அதே கும்பலின் ஏமாற்றுவேலைக்கு பலியாகி, 2022 அக்டோபர் 5 ஆம் தேதி பாலிக்கு வந்து சேர்ந்தார். அவரும் சுமார் 18 நாட்கள் அங்கு சிறைவைக்கப்பட்டார். மேலும் அங்கிருந்து வெளியேற அந்த குண்டர்களுக்கு 45 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.

இந்தோனீசியாவின் பாலியில் இருந்து செயல்படும் மனித கடத்தல் கும்பலுக்கு பஞ்சாப் இளைஞர்கள் மட்டுமல்லாது, வேறு நான்கு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பலியாகிவிட்டனர்,” என்று மொஹாலியின் டிஎஸ்பி தில்பகிர்வு சிங் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள்

பட மூலாதாரம், Mohali Police

இந்த கும்பல் செயல்படும் விதம் என்ன?

இந்தக் கும்பலுக்கு பஞ்சாபில் எந்த அலுவலகமும் இல்லை என்பது இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்கள் மற்றும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகின் எல்லா இடங்களுக்கும் ஆட்களை அனுப்பும் ஏஜென்டுகள் மற்றும் நிறுவனங்களின் விளம்பரங்களை, பஞ்சாப் முழுவதும் பார்க்கமுடிகிறது. ஆனால் இந்த கும்பலின் விளம்பரம் இதுவரை எங்கும் காணப்படவில்லை.

இந்த கும்பல் ஆட்களை குறிவைக்க கைபேசியை பயன்படுத்துகிறது. பொதுவாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எந்த முன்பணமும் இல்லாமல் பாலிக்கு அனுமதிச்சீட்டு கொடுக்கப்பட்டால், அவர்கள் அதை நம்பத் தொடங்குவார்கள்.

அந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் பாலியிலிருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவோம் என்ற நம்பிக்கையில் பாலியை அடைகின்றனர்.

மன்ப்ரீத் பாட்டியாலா

ஆனால் அவர்கள் அங்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு, அவர்களது குடும்பத்திடமிருந்து பிணைத்தொகையை பெறும்பொருட்டு கடுமையாக தாக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்காக பிணைத்தொகையை செலுத்திய பின்னர் வீடு திரும்புவதற்கு சொந்தமாக ஏதாவது வழியை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த கும்பல் செயல்படுவதாகவும், அதிகம் படிக்காத இளைஞர்களை இந்த கும்பல் குறிவைப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய குடிமக்களுக்கு இந்தோனீஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ‘விசா ஆன் அரைவல்’ வசதியை வழங்குவதால், இளைஞர்கள் அந்த நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். அருகிலுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளுக்கான விமான அனுமதிச்சீட்டு கட்டணமும் மலிவானது.

மன்ப்ரீத் பாட்டியாலா

கும்பலின் தலைவன் யார்?

இந்த கும்பலின் தலைவர்களில் இருவர் இந்தியர்கள் என்று மொஹாலி காவல்துறை கூறுகிறது. இந்தோனீனேசியாவில் வசிக்கும் சன்னி குமார், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள சலேரியா குர்த் பகுதியைச் சேர்ந்தவர்.

சஞ்சய் என்ற ஜஸ்வீர் சிங் சிங்கப்பூரில் வசிக்கிறார். ஆனாலும் பஞ்சாபில் உள்ள ஜலந்தருடன் அவருக்கு தொடர்பு உள்ளது. கும்பலைச் சேர்ந்த சிலர் பஞ்சாபில் இருந்து செயல்படுகிறார்கள்.

மற்றவர்கள் பாலியில் உள்ளனர். பஞ்சாபில் உள்ள உறுப்பினர்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் பணியை செய்கிறார்கள்.

அதே நேரத்தில் பாலியில் இருந்து செயல்படும் கும்பலின் உறுப்பினர்கள் முதலில் இளைஞர்களை பாலிக்கு அழைத்துச் சென்று பின்னர் அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

பஞ்சாபில் வசிக்கும் சன்னி குமாரின் மனைவி மற்றும் அவரது தந்தையை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 1.5 கோடி ரூபாயை மீட்டுள்ளனர். இது தவிர, இந்தக் கும்பலுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இருப்பினும், கும்பல் தலைவர்கள் இன்னும் இந்தோனீசியாவில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

பட மூலாதாரம், Mohali Police

இலக்காகும் கிராமப்புற இளைஞர்கள்

பாட்டியாலாவில் உள்ள பஹல் கலான் கிராமத்தைச் சேர்ந்த மன்பிரீத் சிங்கும் இந்த கும்பலுக்கு பலியானார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் அந்த சம்பளத்தால் குடும்பத்தை நடத்துவது கடினமாக இருந்தது.

ஆகவே அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய நினைத்த அவர், ராஜ்புராவில் உள்ள ஏஜெண்டிடம் சிக்கினார். விவசாய நிலம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்று சுக்ஜிந்தரும் கூறினார்.

ஃபால் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங்கும் அமெரிக்கா செல்ல தனது விவசாய நிலத்தை விற்றார். கடனும் வாங்கினார். “இப்போது கடன் கொடுத்தவர் பணத்தை திரும்பக்கேட்கிறார். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

பஞ்சாப் இளைஞர்கள் அமெரிக்கா செல்லும் போக்கு புதிதல்ல. பஞ்சாபிலிருந்து குடியேறி அமெரிக்காவில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு ஒரு காரணம். பெரும்பாலும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்கள் இதேபோன்ற வெற்றியைப் பெற அமெரிக்கா செல்ல முயல்கின்றனர்.

பணம் உள்ளவர்களும், படித்தவர்களும் சட்டப்பூர்வமாக குடியேறுவது எளிது. ஆனால் அவ்வளவாக படிக்காத இளைஞர்களுக்கு அந்த வழி இல்லை. எனவே அவர்கள் பெரும்பாலும் போலி முகவர்கள் மற்றும் மோசடி கும்பல்களின் வலையில் விழுகிறார்கள்.

பட்டியாலாவை சேர்ந்த விஷால் குமார் என்பவர் இந்த மோசடிக்கு பலியான மற்றொருவர். “படித்த இளைஞர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்ச்சி பெற்று வெளிநாடு செல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற படிக்காதவர்கள் சட்டவிரோதமாக அங்கு செல்ல நினைக்கிறார்கள்” என்கிறார் அவர்.

10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே அவர் இந்த கும்பலின் வலையில் விழுந்தார். அவர்களிடமிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பணமும் கொடுக்க வேண்டியிருந்தது.

வேலையில்லா திண்டாட்டம், போதைப் பழக்கம் மற்றும் குண்டர்களின் செயல்பாடுகள் ஆகியவை மாநிலத்தில் எதிர்காலம் இல்லை என்று இளைஞர்களை நினைக்கவைக்கின்றன என்றும் வெளிநாடுகளில் குடியேறுவதற்கு முன்னுரிமை அளிக்கச்செய்கின்றன என்றும் பஞ்சாபில் உள்ள பிரபல பொருளாதார நிபுணர் ரஞ்சித் சிங் குமான் கூறுகிறார்.

”முதலீடு இல்லாததால் மாநிலத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. இது இளைஞர்களை வெளிநாடுகளுக்கு விரட்டுகிறது..” என்கிறார் அவர். 2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வின்படி, பஞ்சாபில் வேலையின்மை விகிதம் 7.2 சதவிகிதமாக இருந்தது. இது கிராமப்புறங்களில் 7.1% ஆகவும், நகர்ப்புறங்களில் 7.5% ஆகவும் இருந்தது.

இளைஞர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும்விதமாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க பஞ்சாபில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று குமான் குறிப்பிட்டார்.

மன்ப்ரீத் மற்றும் ஜஸ்வீர் சிங் பாட்டியாலா

சட்டத்தை மீறி நடக்கும் மோசடிகள்

பஞ்சாப் பயண வல்லுநர்கள் சட்டம் 2014, சட்டவிரோத மனித கடத்தலைத் தடுக்க மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.

விதிகளை மீறியதாகக் கூறி 239 குடியேற்ற ஆலோசகர்கள் மற்றும் 129 ஐஇஎல்டிஎஸ் மையங்களின் உரிமங்களை இந்த ஆண்டு ஜனவரியில் ஜலந்தர் நிர்வாகம் ரத்து செய்தது.

1320 குடியேற்ற ஆலோசகர்கள், சர்வதேச அனுமதிச்சீட்டு முன்பதிவு முகவர்கள், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள IELTS மையங்களின் உரிமையாளர்கள் ஆகியோருக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அப்படிப்பட்ட 495 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் ஜலந்தர் துணை காவல் துறை கமிஷனர் தெரிவித்தார்.

”போலி முகவர்களை பிடிக்க கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுகிறார்கள். ஏனெனில் சட்ட செயல்முறைகள் பெரும்பாலும் நீண்டதாகவும், சிக்கலானவையாகவும் உள்ளது,” என்று ரஞ்சித் சிங் குமான் கூறுகிறார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயல்பவர்கள் பலமுறை விபத்துகளில் இறக்கின்றனர், ஆனாலும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்கள் என்ன விலை கொடுத்தாவது வெளிநாடு செல்ல விரும்புவதாக குமான் கூறுகிறார்.

சுக்ஜிந்தர் சிங் சர்தார் ஜி

சட்டவிரோதமாக அமெரிக்கா பயணம் மீது மோகம் ஏன்?

மெக்சிகோ எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்லும் இந்தியர்களில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் போக்கு மிகவும் பழையது.

சிலர் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ வழியைத் தேர்வு செய்கிறார்கள்.

மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் உள்ள எல்லைச் சுவரைக் கடக்க உதவுவதற்காக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களிடமிருந்து ஏஜெண்டுகள் பணத்தைப் பெறுகிறார்கள்.

மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைக் காவல் துறை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்தது.

அந்த ஆண்டில் 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவது எளிதல்ல. 2019 ஆம் ஆண்டில் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி அரிசோனாவில் இறந்தபோது ’மெக்சிகோ எல்லை’ இந்திய செய்திகளில் இடம்பிடித்தது. இந்த குழந்தை மெக்சிகோ எல்லை வழியாக தனது தாயுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தது. ஆனால் 42 டிகிரி வெப்பம் காரணமாக இறந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »