Press "Enter" to skip to content

இலங்கை அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் நுழையும் ‘தேடப்படும் சந்தேக நபர்கள்’

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள், இந்தியாவில் அடைக்கலம் கோரி தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அடைக்கலம் தேடி வந்தவர்களை இந்திய அரசு அகதியாக கருதாததால், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடிய சிலர், இலங்கை, இந்திய சர்வதேச கடல் வழியாக அகதிகள் போர்வையில் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்களை உடனடியாக கண்டறிய முடியாமல் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

நாடகமாடிய சந்தேக நபர்

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கொழும்புவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் தான் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து அகதியாக படகில் வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த விசாரணை அதிகாரிகள் விசாரணையை தீவிர படுத்திய போது, அவர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து ஈரோடு பவானி சாகர் முகாமில் அவரது அண்ணன் வீட்டில் தங்கி விசா காலம் முடிந்தும் இலங்கைக்கு திரும்பி செல்ல முடியாமல் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

அவருக்கு சிலர் அளித்த யோசனையின் அடிப்படையில் பொருளாதார நெருக்கடி காரணமாக படகில் தனுஷ்கோடி வந்து பின் அகதியாக பதிவு செய்ய மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு வந்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை அரசால் தேடப்படும் நபர்

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இரவு இரண்டு மாத கைக்குழந்தையுடன் புகலிடம் தேடி அகதியாக தமிழகம் வந்த எட்டு பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அகதியாக வந்த கிளிநொச்சியை சேர்ந்த சந்திரகுமார் என்பவர், கிளிநொச்சியில் உள்ள நகை கடை ஒன்றை உடைத்து நகைகளை கொள்ளையடித்து, தொழிலதிபர் ஒருவரை கடத்தி மிரட்டி அவரிடம் பணம் பறித்த வழக்குகளில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து தப்பி அகதி போர்வையில் குடும்பத்துடன் தமிழகம் வந்தது மறுநாள் தெரிய வந்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த மாநில உளவுத்துறை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

போதை பொருள் கடத்தல் வழக்கு நபர் அகதியாக ஊடுருவல்

இலங்கையை சேர்ந்த ஒருவர் ஃபைபர் படகில் அகதியாக வந்ததாக தெரிவித்தபோது வேதாரண்யம் மரைன் போலீசாரால் அவரை கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த பதில் முரணாக இருந்ததால் உளவுத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் தீவரமாக விசாரித்தனர்.

அதில் அவர் மீது இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்திய வழக்கு மற்றும் கஞ்சா போதை பொருள் தொடர்பான வழக்குகள் இலங்கையில் இருப்பதும் அவர் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை சிறையில் இருந்து தப்பியவர்

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

சமீபத்தில் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு வந்த மன்னாரை சேர்ந்த செல்வராஜ் என்பவர், பொருளாதார நெருக்கடி காரணமாக படகில் 2 லட்சம் ரூபாய் கொடுத்து தான் மட்டும் தனியாக படகில் தனுஷ்கோடி வந்ததாகவும், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க அனுமதி கடிதம் வேண்டும் எனவும் போலீசாரிடம் கேட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருந்த அதே நேரத்தில் செல்வராஜ் புகைப்படத்தை இலங்கை மன்னாருக்கு அனுப்பி உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

செல்வராஜ் மகன் சிந்துஜன் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் வவுனியா சிறைக்கு அழைத்துச் செல்லும் போது தப்பித்து விட்டதாக தெரிய வந்தது.

செல்வராஜ் உடன் தமிழகம் வந்த சிந்துஜன் தலைமறைவாக இருந்த போது உளவுத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு பேராபத்து ஏற்பட வாய்ப்பு

தொடர்ந்து அகதிகள் போர்வையில் தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை குற்றவாளிகளை கண்டறிவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நீண்டகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெயர் வெளியிட விரும்பாத புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஒரு ஆண்டாக இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை தமிழர்களை விசாரணை செய்து மண்டபம் ஈழத்தமிழர் மறு வாழ்வு முகாமில் தங்க வைத்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் இறங்கி இருப்பதாக தகவல் வரும். உடனே சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை மீட்டு ராமேஸ்வரம் அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு மனதளவில் அவர்கள் சரியான பின்னர் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கும்.

ஒரு சிலர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களை படகில் அழைத்து வந்த இலங்கை நபர்கள் குறித்து தகவல் தெரிவித்து விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

தனித்தனியாக விசாரித்து பின்னர் மண்டபம் ஈழ தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க அனுமதி அளிப்போம்.

பெரும்பாலும் இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் அதிகமாக விசாரணை செய்யப்படுவதில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக அகதிகள் போர்வையில் இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள், தமிழ்நாட்டில் பதுங்கும் நிலை ஏற்பட்டதால் விசாரணை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

“தமிழ்நாடு வரும் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தும் போது சில சந்தேகங்கள் ஏற்படும். ஆனால் அதிகாரபூர்வமாக அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் பல நேரங்களில், விசாரணை முழுமை பெறாமலேயே இந்தியாவுக்கு வந்தவர்கள், அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேரடியாக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசக் கூடாது என்ற விதி உள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி இரு நாட்டு புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடைக்கலம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் விவரங்களை உடனடியாக பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு பரஸ்பரம் தொடர்பை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ராமேஸ்வரம் வரும் இலங்கை தமிழர்கள் குற்ற பின்னணிகள் குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவித்தால் நிச்சயம் அது புலனாய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அந்த அதிகாரிகளின் கோரிக்கை.

இது குறித்து நம்மிடையே பேசிய புலனாய்வு அதிகாரி, “சமீபத்தில் அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு வந்த சிலர் முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களை கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக அனுப்ப திட்டமிட்டு செயல்பட்டு வந்தவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்துள்ளோம்,” என்றார்.

இலங்கையில் இருந்து வந்தவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தாமல் அகதிகள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு வருபவர்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடிய நபர்களும் ஊடுருவினால், அவர்களால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கை அறிக்கையை இந்திய அரசு வாயிலாக இலங்கைக்கு உளவுத்துறையினர் அனுப்பியுள்ளனர்.

இந்த எச்சரிக்கை அறிக்கைக்கு இலங்கை அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் தங்களுடைய புலனாய்வில் சிக்கல்கள் ஏற்படுவதாக புலனாய்வுத்துறை அதிகாரி கூறுகிறார்.

இலங்கை காவல் துறை தரப்பு விளக்கம்:

இலங்கை, தமிழர்கள், அகதிகள்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் அகதிகள் தொடர்பில் தாம் அந்த நாட்டு அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்வதாக இலங்கை காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இந்தியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவிற்கு சென்ற அகதிகள், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பாக, பிபிசி தமிழ், காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ விடம் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற ஒப்பந்தங்களின் ஊடாக, இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

சர்வதேச விவகாரங்களில் இலங்கை காவல் துறையினர் எப்போதும் நேரடியாக தொடர்பு பட மாட்டார்கள் என கூறிய அவர், அதற்கான பணிகளை வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியனவே முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பாராயின், நீதிமன்ற குற்றவியல் ஆதாரங்களுடன், சர்வதேச காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நபரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சட்ட மா அதிபர் மற்றும் நீதி அமைச்சு (தேவைப்படும் பட்சத்தில் மாத்திரம்) ஆகியவற்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்தி கொண்டுள்ள ஒப்பந்தங்களும் இந்த விவகாரத்தில் பங்களிப்பு செய்யும் என அவர் கூறுகிறார்.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் ஊடாக, சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »