Press "Enter" to skip to content

இந்தியாவில் பரவிவரும் H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல்- எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் H3N2 எனப்படும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் பரவிவருகிறது.

ஹரியாணாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என நாட்டில் இதுவரை 2 பேர் இந்த காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் ஜனவரி மாதம் முதல் பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. மார்ச் 9ம் தேதி நிலவரப்படி நாடு முழுவது 3,038 பேர் H3N2 உள்ளிட்ட நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 1245 பேரும், பிப்ரவரியில் 1307 பேரும் மார்ச் மாதத்தில்(9ம் தேதி நிலவரப்படி) 486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், “இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன; ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம், மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலம். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்றால் என்ன?

பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), இந்திய மருத்துவ கூட்டமைப்பும் (IMA) அடையாளப்படுத்தியுள்ளன. H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்பது ஒரு பருவ கால காய்ச்சல் ஆகும். தொற்றக்கூடிய தன்மை அதிகமாக உள்ள இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்ட நபர் பேசும்போதோ, இருமும்போதோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர் .

H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், குமட்டல்/வாந்தி, தொண்டை வலி, உடல் வலி/ சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன. இவற்றுடன் மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்புதொலைபேசிற அறிகுறிகளும் ஏற்படும்.

பாதிப்பு என்ன?

H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் மிக ஆபத்தானது என்று கூறமுடியாது. இது சாதாரண பருவ கால காய்ச்சல்தான். பொதுவாக இவற்றை மூன்று வகையாக பிரித்துகொள்ளலாம்.

‘ஏ’ வகை என்பது வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. ‘பி’ வகை என்பது காய்ச்சல் 5 நாட்கள் வரை இருக்கும். அதை தொடர்ந்து உடம்பு வலி இருக்கும்.

‘சி’ என்பது இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இணை நோய் உள்ளவர்கள் H3N2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அவர்களின் பிரதான நோயின் பாதிப்பு அதிகரித்து மரணம் ஏற்படக்கூடும்.’ என்றார்.

மேலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நுரையீரலை பாதிக்கும்போது, நிமோனியா வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹெச்3என்2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல்

பருவ கால காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

முகக் கவசம் அணிவது, கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று கூறும் மருத்துவர் தேரணிராஜன், ‘குழந்தைகளை பொறுத்தவரை இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து தற்காத்துகொள்ளும் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம். அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள பெரியவர்களும் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். இதேபோல், குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் அதிக அளவில் பரவுவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல், பிறருடன் கை குலுக்குவது, பொது இடத்தில் எச்சில் துப்புவது, மருத்துவர்களின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்வது, மற்றவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது, நெருக்கமாக அமர்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, ‘நிச்சயமாக இல்லை’ என்று மருத்துவர் தேரணிராஜன் கூறுகிறார். “ஒருமுறை இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போதே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுகிறது. மீண்டும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உடலுக்குள் வந்தால் அது நோயாக மாறாமல் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பார்த்துகொள்கிறது” என்றார்.

H3N2 காய்ச்சலைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் தற்போது அச்சம் கொள்ளும் சூழ்நிலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். “அரசு மருத்துமனைகளுக்கு ஒருநாளைக்கு 10 முதல் 14 பேர்வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை பார்க்கும்போது, வெளிப்புற நோயாளிகளாக சிலர் வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவது மிகவும் குறைவு.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை பொறுத்தவரை நாளொன்றுக்கு 5 பேர் வரை மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களிலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது அதிகபட்சமாக 2 அல்லது 3 ஆக தான் உள்ளது. மிகப் பெரிய அளவில் இல்லை”என்றார்.

ஹெச்3என்2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல்

பட மூலாதாரம், Twitter/@Subramanian_ma

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

H3N2 காய்ச்சல் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த தொடங்கியுள்ளோம். சென்னையைப் பொறுத்தவரை வார்டுக்கு ஒன்று என்ற முறையில் 200 வார்டுகளுக்கு 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் துணை சுகாதார நிலையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காய்ச்சலுக்கு உண்டான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை. எனவே, பதற்றம்கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

இதனிடையே, பருவ கால நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், சுகாதார அமைச்சகத்தின் செயலாளர்கள் ஆகியோருக்கு சனிக்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், “இன்ப்ளூயன்சா ஏ பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத நடுவில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக ஹெச்3என்2 பாதிப்பு பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், இணை நோய்களை உடையவர்கள், H1N1, H3N2 போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் கைகளை தூய்மையாக வைத்துகொள்ளவேண்டும். சுவாசப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆக்சிஜன் போன்றவற்றை போதிய கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »