Press "Enter" to skip to content

வடமாநில தொழிலாளர் பற்றிய பேச்சு: பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் – நடந்தது என்ன?

பட மூலாதாரம், Youtube/Naam Thamizhar Katchi

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய பேச்சு தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர் குறித்த அவரது கருத்துகளுக்காக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

வட தொழிலாளர்கள் தொடர்பான சீமான் பேச்சை பகிர்ந்து அது வெறுப்பை வளர்க்கும் இத்தகைய பேச்சு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மார்ச் 10-ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அருந்ததியர் குறித்து சீமான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சமூக ஊடகத்தில் பரவிய போலி காணொளிகள் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின.

இந்த போலி காணொளிகள் மிகுதியாக பகிரப்பட்டு பரவியதைத் தொடர்ந்து பிகார் போன்ற மாநிலங்களின் அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதை தொடர்ந்து பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உண்மை சூழலை அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தனர்.

இதனிடையே, இந்த காணொளிக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தொழிலாளர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டன. மேலும், புரளி பரப்பியதாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிகாரைச் சேர்ந்தவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்த பொதுக்கூட்ட காணொளி ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார். அதில், `நான் ஆட்சிக்கு வந்தால் இந்திக்காரர்கள் எல்லாம் அவர்களே பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். எத்தனைபேரை எங்கு வச்சி வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா வழக்கு, பாலியல் தொல்லை வழக்கில் ஆயிரம் பேரை உள்ளே தூக்கிப் போட்டு அவர்களுக்கு சோறு போடாமல் விட்டால் சரியாகிவிடும்` என்று சீமான் பேசியிருந்தது அதில் பதிவாகியிருந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் திருநகர் காலனியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது பேசியதன் சிறு பகுதியை தான் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில், பட்டியலின அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கமளிக்க நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியது.

இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சீமான் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் கருங்கல்பாளையம் காவல் துறையினர் பிப்ரவரி 22ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காணொளிவின் அடிப்படையிலும் சாட்சிகளிடம் மேற்கொண்ட விசாரணை, காணொளி ஆதாரங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்டப் பிரிவுகளில் சீமான் மீது 153 (B) (c), 505(1) (c) ,506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்வீட்

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் துறை பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இன்று ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் கிஷோர் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »