Press "Enter" to skip to content

சதாம் ஹுசைனின் ‘ரகசிய ஆயுத தேடல்’ முழுமையடையாமல் போனது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இராக் படையெடுப்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், “பேரழிவு ஆயுதங்கள்” (WMDs) இருந்தனவா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்த படையெடுப்பு தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்பை, “பேரழிவு ஆயுதங்களின் இருப்பு” என்பதை வைத்தே நியாயப்படுத்தினர்.

பேரழிவு ஆயுத தேடல் பற்றிய புதிய விவரங்கள் பிபிசி தொடரான ‘அதிர்ச்சி அண்ட் வார்: இராக் 20 இயர்ஸ் ஆன்’ என்ற தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது. இந்தத் தொடர் இராக்கின் “பேரழிவு ஆயுதங்கள்” தேடலில் நேரடியாக ஈடுபட்ட டஜன் கணக்கானவர்களுடன் செய்யப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.

இராக் உடனான போரில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக 2001ஆம் ஆண்டு டிசம்பரில் மூத்த எம்ஐ6 அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார்.

எம்ஐ6 என்பது பிரிட்டனின் ரகசிய உளவு சேவை அமைப்பு.

எம்ஐ6 அதிகாரிகளின் அதிர்ச்சியை அமரிக்காவின் சிஐஏ அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்துகிறார்.

“அவர்களுக்கு மேசைக்கு அருகிலேயே மாரடைப்பு வந்துவிடும் என்று நான் நினைத்தேன். அவர்கள் கண்ணியமான மனிதர்களாக இல்லாமல் இருந்திருந்தால் மேசையின் எதிர் முனையில் அமர்ந்திருந்த என்னை அறைந்திருப்பர்,” என்று இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவின் இராக் நடவடிக்கைக் குழுவின் தலைவர் லூயிஸ் ரூய்டா கூறுகிறார்,

இச்செய்தி விரைவில் பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தது. இது தூதாண்மை அதிகாரிகளுக்கு பதிலாக உளவாளிகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்போது MI6 இன் தலைவராக இருந்த சர் ரிச்சர்ட் டியர்லவ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இராக் படையெடுப்பு குறித்து பிரிட்டன் பிரதமருக்கு முதலில் தெரிவித்தவர் தான்தான் என்று கூறினார்.

“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது தயாராகத் தொடங்குங்கள். ஏனென்றால் அவர்கள் (அமெரிக்கா) தாக்குதலுக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது என்று நான் பிரதமரிடம் கூறினேன்,” என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் வெளிவிவகார உளவு நிறுவனமான MI6 அதன் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் குழப்பமான அத்தியாயங்களில் ஒன்றில் ஈடுபடவிருந்தது.

அமெரிக்காவைப் பொருத்தவரை பேரழிவு ஆயுதங்களின் பிரச்னையை விட சதாம் ஹூசேனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் முக்கியமானதாக இருந்தது.

“சதாம் ஹூசேனிடம் ரப்பர் பேண்டும், காகிதக் கிளிப்பும் இருந்திருந்தால் கூட இராக் மீது படையெடுத்திருப்போம்” என்கிறார் ரூய்டா.

இராக்கின் ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களால் பிரிட்டன் ஆபத்தில் இருந்தது.

இராக் “பேரழிவு ஆயுதங்கள்” வைத்திருப்பதாக சில சமயங்களில் பிரிட்டிஷ் அரசும் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆயுதங்கள் அங்கே இருப்பதாக தங்கள் சொந்த உளவாளிகள் தங்களிடம் கூறியதாக அந்த நேரத்தில் இருந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

“எனக்கு கிடைத்த உளவுத்தகவல்களை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நான் யாரை நம்பினேனோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அவர் என்று நான் கருதுகிறேன்,” என்று முன்னாள் பிரதமர் சர் டோனி பிளேயர் என்னிடம் கூறினார்.

தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில் கூட்டு புலனாய்வுக் குழுவிடம் உறுதிமொழி கேட்டதாக அவர் கூறுகிறார். தவறான தகவல் அளித்தமைக்காக உளவுத்துறையை விமர்சிக்க அவர் மறுக்கிறார்.

அப்போதே இதுகுறித்த சந்தேகம் இருந்ததாக மற்ற அமைச்சர்கள் கூறினர்.

“மூன்று சந்திப்புகளில் நான் ரிச்சர்ட் டியர்லவ்வை விசாரித்தேன். உளவுத்துறை செய்தியின் ஆதாரம் பற்றி அவரிடம் கேட்டேன்.” என்று அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ கூறுகிறார்.

“இதைப் பற்றி எனக்கு ஒரு சங்கடமான உணர்வு இருந்தது. ஆனால் டியர்லவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகவர்கள் நம்பகமானவர்கள் என்று எனக்கு உறுதியளித்தார்.”

இறுதி முடிவை எடுப்பவர்கள் அவர்கள்தான் என்பதால் இதற்கு தலைவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜாக் ஸ்ட்ரோ கூறினார்.

இராக் விவகாரத்தை உளவுத்துறை தோல்வியாக பார்க்கிறீர்களா என்று பிபிசி அவரிடம் கேட்டபோது. இதற்கு அவர் எதிர்மறையாக பதிலளித்தார்.

இராக்கில் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை சிரியாவிற்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் இன்னும் நம்புகிறார்.

சர் ரிச்சர்ட் டியர்லவ்.

பட மூலாதாரம், Getty Images

சதாம் ஹுசேனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததா?

பிரிட்டனின் அப்போதைய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒருங்கிணைப்பாளராக இருந்த சர் டேவிட் ஓர்மண்ட், “இது ஒரு மாபெரும் தோல்வி” என்கிறார்.

சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற கருத்தை ஆதரிக்கும் தகவல்கள் மட்டுமே அரசு நிபுணர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஆதரிக்காத தகவல்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தங்களுக்கும் இதுபற்றிய கவலை இருந்ததாக MI6 இல் உள்ள சிலர் கூறினர்.

இராக்கில் பணியாற்றிய ஒரு அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், “அந்த நேரத்தில் நாங்கள் செய்வது தவறு என்று உணர்ந்தேன்” என்று கூறுகிறார்.

2002 ஆம் ஆண்டு பற்றி குறிப்பிட்ட ஒரு மூத்த அதிகாரி, “இராக், பேரழிவு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்றும் இது ஆபத்தை உருவாக்கியுள்ளது என்றும் கூறுவதற்கு புதிய அல்லது நம்பகமான உளவுத்துறை தகவல் அல்லது மதிப்பீடு எதுவும் இருக்கவில்லை” என்று கூறுகிறார்.

“அரசின் பார்வையில் இராக்கின் ‘பேரழிவு ஆயுதங்கள்’ பிரச்னையை நியாயப்படுத்த அவர்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.”

2002 வசந்த காலத்தில், தற்போதைய உளவுத்துறை சீரற்றதாக இருந்தது. நீண்டகாலமாக MI6 இல் பணியாற்றும் முகவருக்குக்கூட இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய தகவல் ஏதும் இருக்கவில்லை.

இந்த சந்தேகத்தை வலுப்படுத்த, புதிய ஆதாரங்களிடமிருந்து புதிய உளவுத்துறை தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2002 செப்டம்பரில் இந்த ஆவணத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டபோது இது நடந்தது.

புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒருவர் ஒரு செய்தியை டிகோட் செய்ததை நினைவுகூர்கிறார். இராக் மீது நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் மக்களை வற்புறுத்துவதை விட அதிகமாக புலனாய்வு அமைப்பின் பங்கு இருக்கவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டது.

Caption-மத்திய லண்டனில் உள்ள MI6 தலைமையகம்

பட மூலாதாரம், Getty Images

மொபைல் ஆய்வகத்தின் வளர்ச்சி

2002 செப்டம்பர் 12 தேதி சர் ரிச்சர்ட் டியர்லவ் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு ஒரு புதிய செய்தி வட்டாரம் அளித்த செய்தியைக் கொண்டு வந்தார். சதாம் ஹூசேன் ஆயுதத் திட்டத்தை மறுதொடக்கம் செய்துள்ளதாகவும், விரைவில் புதிய விவரங்களை வழங்குவதாகவும் அந்த நபர் உறுதியளித்தார்.

இந்த ஆதாரம் முழுமையாக ஆராயப்படாவிட்டாலும், அவரது தகவல்கள் நிபுணர்களிடம் பகிரப்படாவிட்டாலும், அதன் விவரங்கள் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரட்டன் பிரதமருக்கு மிக நெருக்கமாக அவர் ஆனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர் ரிச்சர்ட் மறுக்கிறார்.

வரும் மாதங்களில் அந்த செய்தி வட்டாரம் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை, இறுதியில் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தகவல்களுக்கு ஈடாக பணம் சம்பாதிக்க அல்லது இராக்கில் இருந்து சதாம் ஹுசைனை தூக்கி எறிய அவர் விரும்பியிருக்கலாம் என்று பின்னர் கருதப்பட்டது.

“ஜனவரி 2003 இல், ஜோர்டானில் சதாமின் உளவுப் பிரிவில் அவருக்கு எதிராகத் திரும்பிய ஒருவரை நான் சந்தித்தேன். அமெரிக்காவின் பார்வையில் இருந்து விலகி, உயிரியல் ஆயுதங்களில் பணிபுரியும் மொபைல் ஆய்வகங்களை உருவாக்குவதில் தான் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இந்த நபரின் கூற்றுக்கள் காரணமாக, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோலின் பவல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த பிரச்சனையை எழுப்பினார். இருப்பினும், இந்த தகவலை நம்ப முடியாது என்று அமெரிக்க அரசு ஒரு ‘அறிவிப்பு’ வெளியிட்டது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் நம்பியிருந்த ‘கர்வ்பால்’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட மற்றொரு செய்தி ஆதாரமும், ஆய்வகம் பற்றிய தகவலைத் தருகிறது.

பேரழிவு ஆயுதங்கள் பற்றிய விசாரணை

2003 போருக்கு சில வாரங்களுக்கு முன்பு, நான் வடக்கு இராக்கில் உள்ள ஹலாப்சா கிராமத்திற்குச் சென்றேன். 1988 இல் சதாம் ஹூசேனின் படைகள் அவர்கள் மீது ரசாயன ஆயுதங்களை வீசிய நாள் குறித்து உள்ளூர்வாசிகள் பேசுவதைக் கேட்டேன்.

1990களின் முற்பகுதியில் ஐநா ஆயுத ஆய்வாளர்களிடம் இருந்து நேர்மறையான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சதாம் பெரும்பாலான WMD(ஆபத்தான ஆயுதங்களை கூட்டாக அழிப்பது) திட்டத்தை அழிக்க உத்தரவிட்டதாக இராக்கின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் பின்னர் என்னிடம் கூறினார்.

இராக் தலைவர் பின்னர் திட்டத்தை மறுதொடக்கம் செய்திருக்கலாம் என்று அந்த விஞ்ஞானி கூறினார். ஆனால் இராக் அனைத்தையும் ரகசியமாக அழித்துவிட்டது. அண்டை நாடான இரானுக்கு எதிராக தான் பயன்படுத்தக்கூடிய ஏதோவொன்று தன்னிடம் இருப்பதாக நம்ப வைக்க இராக் இந்த புரளியை கிளப்பிவிட்டது என்றும் கருதப்படுகிறது.

இதன்காரணமாகத்தான் பின்னர் இராக் அனைத்தையும் அழித்ததற்கான ஆதாரத்தை கேட்டபோது அந்த நாட்டால் அதை அளிக்கமுடியவில்லை.

2002 இன் பிற்பகுதியில், பேரழிவு ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஐநா ஆய்வாளர்கள் இராக்கிற்குத் திரும்பினர். மேற்கு நாடுகளால் ரகசிய மொபைல் ஆய்வகங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட தளங்கள் தங்களுக்கு நினைவில் இருப்பதாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

2003 ஜனவரியில் டோனி பிளேயர் சர் ரிச்சர்டிடம் “எனது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. ஏனென்றால் பேரழிவு ஆயுதங்களின் ஆதாரங்களைக் கண்டறியும் அழுத்தம் அதிகரிக்கிறது,” என்று நகைச்சுவையாக கூறினார்.

மார்ச் 2003: தெற்கு இராக்கில் பிரிட்டிஷ் படைகள்

பட மூலாதாரம், Getty Images

“அந்த நேரத்தில் மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது,”என்று சர் ரிச்சர்ட் நினைவு கூர்ந்தார்.

ஐநா ஆயுத ஆய்வாளர் “திறமையற்றவர்” என்று சர் ரிச்சர்ட் குற்றம் சாட்டுகிறார்.

2003 இன் ஆரம்பம் வரை தானும் ஆயுதங்கள் இருக்கிறது என்று நம்பியதாக ஐ.நா.வின் ரசாயன மற்றும் உயிரியல் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் ஹான்ஸ் பிளிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் ரகசிய தகவல் கிடைத்ததும் அதன் இருப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. ஆதாரத்திற்கு இன்னும் சிறிது கால அவகாசம் வேண்டியிருந்தது. ஆனால் அதை அவரால் பெற முடியவில்லை.

”2003 மார்ச் வரை எந்த தீவிரமான ஆதாரமும் கிடைக்காதபோதிலும், போரை நிறுத்த வழி இல்லை. அதன் பிறகும் WMD எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாமே சிதைந்து போயின,” என்ற போருக்குப் பிந்தைய மூலத்தின் உள் மதிப்பாய்வை ஒரு முன்னாள் MI6 அதிகாரி நினைவு கூர்ந்தார்.

இது உளவாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருக்கும் ஆழமான மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »