Press "Enter" to skip to content

இலங்கை முழுவதும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் – என்ன காரணம்?

இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அசாதாரணமானவை என தெரிவித்து ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூயம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராகவே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் இந்த பணிப் பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுமார் 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

அரச மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுதாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், கல்வி, நில அளவை திணைக்களம், வருமான வரி, துறைமுகம், நீர் வழங்கல், தொடர்வண்டித் துறை உள்ளிட்ட 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

அரசு மற்றும் தனியார் துறையினரும் இதற்கு ஆதரவு வழங்கினர்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடந்த காலங்களில் இடைக்கிடை எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டன.

நாட்டின் பல்வேறு துறைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் வண்டிசேவை தொழிற்சங்கம் நேற்றிரவு முதல் பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், இன்றைய தினம் குறிப்பிட்டளவு தொடர் வண்டிசேவைகள் இடம்பெற்றதாக தொடர்வண்டித் துறை திணைக்களத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமை போன்று கடமைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகின்றது.அத்துடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த இரு தினங்களாக பகுதி பகுதியாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காமையினாலேயே தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், இணை ஊடகப் பேச்சாளருமான டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

தமது போராட்டம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமையானது, தமக்கு கவலையளிக்கின்ற போதிலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரிக்கின்றமையினாலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை, போராட்டம்

மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் மருத்துவர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், வரி வசூலிப்பு திருத்தம் தொடர்பான பிரேரணையொன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த பிரேரணையில் இதுவரை உள்வாங்கப்படாத பல்வேறு சாதகமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் இந்த பிரேரணையில் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த பிரேரணை தொடர்பில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கவனம் செலுத்தவுள்ளதாகவும் டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

வங்கி சேவைகள் பாதிப்பா?

இலங்கை, போராட்டம்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன வழமை போன்று தமது சேவையை மக்களுக்கு வழங்கி வருவதாக வங்கி முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு அரச வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

எனினும், தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாகவும் வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உப செயலாளர் கார்த்திக் தெரிவிக்கின்றார்.

பாடசாலை கல்வி நடவடிக்கை?

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தது.

இதேவேளை, சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினத்தில் பாதிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் விநியோகம்.

இலங்கை, போராட்டம்

பட மூலாதாரம், KRISHANTHAN

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைக்கும் நோக்கில் எந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்று மின்சார சபை காசாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, சாதாரண செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லிட்டர் கொள்ளளவை கொண்ட 300க்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தினார்.

மேலும், இலங்கை காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக கவனயூர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போதிலும், நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »