Press "Enter" to skip to content

‘வெற்றியின் சின்னமாக’ லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம், லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில் லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன.

ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில் முதன்முறையாக சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட சில விலையுயர்ந்த பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்காட்சியில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது. லண்டன் டவரின் குடியுரிமை ஆளுநரான ஆண்ட்ரூ ஜாக்சன், “இந்த அற்புதமான சேகரிப்பைப் பற்றிய சிறந்த புரிதலை இந்த முயற்சி வழங்கும்” என்று நம்புவதாகக் கூறினார்.

கோஹினூர் வைரம்

கண்காட்சியில் கோஹினூர் வைரத்தின் வரலாறு `வெற்றியின் சின்னம்` என்ற பெயரில் பொருட்கள் மற்றும் காட்சி திரையிடல் வாயிலாக விளக்கப்படவுள்ளது.

பிரிட்டன் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தின் மணிமுடியை இந்த வைரம் அலங்கரிக்கிறது. அதற்கு முன்பாக முகலாய பேரரசர்கள், ஈரான் `ஷா`க்கள், ஆப்கானிஸ்தான் மன்னர்கள், சீக்கிய மகாராஜாக்கள் ஆகியோர் வசம் இந்த வைரம் இருந்தது.

1849ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஆங்கிலோ-சீக்கிய போரில் வெற்றிபெற்ற பின்னர் கிழக்கு இந்திய நிறுவனம் கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றியது. பின்னர் விக்டோரியா மகாராணியிடம் இந்த வைரம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் கிரீடத்திலேயே இந்த வைரம் உள்ளது.

105.6 காரட் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கோஹினூர். பிரிட்டனின் அரச கிரீடத்தை அலங்கரிக்கும் இந்த வைரம் மிகவும் சர்ச்சைக்குரிய நகையாகும்.

இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் எழுதப்பட்ட பதிவுகள் 1628ஆம் ஆண்டு முதல் கிடைக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் இது பதிக்கப்பட்டது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், PA Media

1739ஆம் ஆண்டு இரானின் பேரரசர் நாதிர் ஷா டெல்லிக்கு படையெடுத்து வந்து முகலாயர்களை தோற்கடித்தார். இதன் பிறகு கோஹினூர் நாதிர்ஷாவின் கைக்கு சென்றது. நாதிர்ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றார்.

இந்த விலைமதிப்பற்ற கல் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு அரச குடும்பங்களிடம் சென்றன என்றும் பின்னர் இறுதியாக 1813ஆம் ஆண்டில் அது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கைகளுக்கு வந்தது என்றும் ஸ்மித்சோனியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

மே மாதம் நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை கமீலா அணியமாட்டார் என்றும் மாறாக ராணி மேரியின் கிரீடத்தை அணிவார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கிரீடத்தில் உள்ள இந்த வைரத்தைத் தங்களிடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான், இரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

பிற ஆபரணங்கள்

Black Prince’s Ruby உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நகைகள் கிரீடத்தில் இருந்து கிரீடங்களுக்கு எவ்வாறு இடம்பெயர்ந்தன என்றும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Black Prince’s Ruby மறைந்த 2ம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த நகைகளில் ஒன்றாகும். இம்பிரியல் ஸ்டேட் கிரீடத்தில் இது இடம்பெற்றுள்ளது. தென்னாப்ரிக்காவில் 1905இல் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் வைரமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எலிசபேத் மகாராணியின் இறப்புக்குப் பின்னர் இந்த வைரத்தை ஆப்ரிக்காவிடமே திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் அந்நாட்டைச் சேர்ந்த பலரால் வைக்கப்பட்டு வருகிறது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அரச அரண்மனைகளில் முடியாட்சியின் வரலாற்றின் பொது வரலாற்றாசிரியர் சார்லஸ் ஃபாரிஸ் கிரீட ஆபரணங்கள் குறித்துப் பேசுகையில், பிரிட்டிஷ் முடியாட்சியின் மிகவும் சக்திவாய்ந்த சின்னங்கள் என்றும் ஆழமான மத, வரலாற்று, கலாசார முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோபுரத்தைப் பராமரிக்கும் சுயாதீன தொண்டு நிறுவனமான ஹிஸ்டாரிக் ராயல் பேலஸ்ஸால் கடந்த நான்கு ஆண்டுகளாக மறு விளக்கக் காட்சி தயாரிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்காக மே 26 அன்று திறக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »