Press "Enter" to skip to content

இம்ரான் கான் வீட்டை உடைத்து புகுந்த காவல்துறை, விபத்திற்கு உள்ளான கான்வாய் – என்ன நடக்கிறது?

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், இந்த வழக்குகள் மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் இம்ரான் கானை காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டுமென இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது காவல் துறையினருக்கும் இம்ரான் கானுடைய கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காவல் துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி இம்ரான் கான் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கைது உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசாரும் கைது நடவடிக்கையைக் கைவிட்டனர்.

அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ல 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பரிசுப் பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதாகச் சொல்லப்பட்டது. அதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இம்ரான் கானை பார்க்க அவரது தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் நீதிமன்றம் முன்பாகத் திரண்டிருந்தனர்.

இம்ரான் கான்

நீதிமன்றம் செல்லும் வழியில் விபத்து

தோஷகானா வழக்கில் ஆஜராவதற்கு லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரவிருந்த இம்ரான் கானின் கான்வாயில் 3 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகின. இதனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் பாதுகாப்பாக உள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, வாகனத் தொடரணி சிறிது நேரம் நின்றது. காயமடைந்தோருக்கு முதலுதவி சிகிச்சையளித்த பிறகு அவர்கள் முன்னேறினர்.

மறுபுறம், லாகூரை சேர்ந்த பிபிசி செய்தியாளர் தர்ஜாப் அஸ்கரின் கூற்றுப்படி, இம்ரான் வசிக்கும் ஜமான் பார்க் வீட்டைக் காலி செய்வதற்கு காவல்துறை பெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்தப் பகுதியில் கன்டெய்னர்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வீட்டிற்கு வெளியே ஏராளமான காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு புல்டோசர் ஒன்றும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இம்ரான் கான்

காவல் துறையினர் இம்ரான் கானின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர் என்கிறார் பிபிசி செய்தியாளர். ஜியோ நியூஸிடம் பேசிய காவல் துறை அதிகாரி, இம்ரான் கான் வீட்டிற்குள் நுழையும்போது உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் காவல் துறையினர் குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவரது வீட்டிற்குள் இருக்கும் செயற்பாட்டாளர்கள் போலீசாரை தாக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் பீரங்கிகளும் கவச வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பஞ்சாப் காவல்துறை இனி தண்ணீர் வண்டியை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுகிறது.

இந்த வளாகத்தில் தற்போது தேவையற்ற நுழைவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தின் ஜி-11 பகுதியில் பெரிய கன்டெய்னர்கள் நிறுவப்பட்டுள்ளன.

இம்ரான் கான்

இதுமட்டுமின்றி, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதைச் சமாளிக்க காவல்துறையும் இதர ஏஜென்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமாபாத் காவல்துறையால் நகரில் 144வது பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற வளாகத்தில் யாரும் ஆயுதம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லும் அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது.

இதுவரை 4,000 போலீசாரும் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோக நீதிமன்ற வளாகத்தில் பஞ்சாப் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

நான்காயிரம் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தவிர நீதிமன்ற வளாகத்தில் பஞ்சாப் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தோஷகானா என்றால் என்ன?

இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை இரவு பிபிசி உருதுவுடன் இணையவழியில் உரையாடினார். அப்போது, “நான் மனதளவில் தயாராக இருக்கிறேன். ஏனென்றால், இன்று முழு பலத்தையும் பயன்படுத்துகிறார்கள். சிறையில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.

இந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இம்ரான் கான் வீட்டிற்கு வெளியே பலத்த காவல் துறை படை நிறுத்தப்பட்டிருந்தன. அவர்கள் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். வீட்டுக்குள் விழுந்த புகை குண்டுகளையும் அவர் எடுத்துக் காட்டினார்.

தோஷகானா என்பது அரசு கருவூலம். பிரதமர், அதிபர் அல்லது பிற முக்கியத் தலைவர்கள் விஜயத்தின்போது அளிக்கப்படும் பெறுமதிமிக்க பரிசுகள் இங்கு வைக்கப்படுகின்றன.

எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்படும் பரிசுகள், திரும்பி வரும்போது அவை தோஷகானில் வைக்கப்படும்.

தோஷகானில் வைக்கப்படும் பொருட்கள் நினைவுப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

இம்ரான் கான்

பாகிஸ்தானில், இத்தகைய பரிசுப் பொருளின் மதிப்பு 30,000க்கும் குறைவாக இருந்தால், அதை சம்பந்தப்பட்டவர் இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு மேல் இருந்தால், அந்த விலையில் 50 சதவீதத்தை வைப்பீடு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

2020ஆம் ஆண்டுக்கு முன்பு, பொருட்களின் அசல் விலையில் 20 சதவீதம் மட்டுமே வைப்பீடு செய்ய வேண்டும்.

இந்தப் பரிசுகளில் பொதுவாக விலை உயர்ந்த கடிகாரங்கள், தங்கம், வைர நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், நினைவுப்பொருட்கள், வைரம் பதித்த பேனாக்கள், மண், பீங்கான் போன்றவற்றில் ஆன பாண்டங்கள், தரை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.

உண்மையில், இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வாங்கிய பரிசுப் பொருட்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இம்ரான் கான்

பட மூலாதாரம், EPA

இம்ரான் கான் வாங்கிய பரிசுகள் என்ன?

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே இம்ரான் கான், தோஷகானாவில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வைப்பீடு செய்து பல பரிசுகளை வாங்கியுள்ளார்.

இதில் சுமார் 85 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 60 லட்சம் மதிப்புள்ள கஃப், 87 லட்சம் மதிப்புள்ள பேனா, மோதிரம் ஆகியவை அடங்கும்.

இம்ரான் கான்

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN

இதேபோல் தோஷகானா நிறுவனத்திடம் இருந்து 7.5 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் 15 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தையும் 2.5 லட்சத்திற்கு இம்ரான் கான் வாங்கியுள்ளார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், இம்ரான் கான், 49 லட்சம் மதிப்புள்ள கஃப்லிங்க் மற்றும் கடிகாரங்கள் அடங்கிய பெட்டியை பாதி விலையில் வாங்கினார்.

இதுதவிர, பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு விற்பதற்கும் 2 கோடி ரூபாய்க்கு பதிலாக 80 லட்சம் ரூபாய் மட்டுமே தோஷகானாவிடம் வழங்கப்பட்டது.

ஆவணங்களின்படி, விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கைக்கடிகாரமும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் முதல் சௌதி அரேபிய பயணத்தின்போது பரிசாக இந்தக் கடிகாரம் வழங்கப்பட்டது.

இதன் விலை 85 கோடி எனக் கூறப்படுகிறது. இம்ரான் கான் இந்தக் கடிகாரத்தை 20 சதவீத விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »